வரலாறு படைப்பாரா நடால்? இறுதி ஆட்டத்தில் வாவ்ரிங்காவுடன் இன்று மோதல்


வரலாறு படைப்பாரா நடால்? இறுதி ஆட்டத்தில் வாவ்ரிங்காவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 10 Jun 2017 8:52 PM GMT (Updated: 10 Jun 2017 8:52 PM GMT)

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் கடைசி நாளான இன்று ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4–வது இடம் வகிக்கும் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 3–ம் நிலை வீரர் வாவ்ரிங்காவும் (சுவட்சர்லாந்து) கோதாவில் இறங்குகிறார்கள்.

பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் கடைசி நாளான இன்று ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4–வது இடம் வகிக்கும் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 3–ம் நிலை வீரர் வாவ்ரிங்காவும் (சுவட்சர்லாந்து) கோதாவில் இறங்குகிறார்கள். களிமண்தரையில் நடக்கும் போட்டியான பிரெஞ்ச் ஓபனில் நடால் 9 முறை மகுடம் சூடியுள்ளார். இங்கு 2005–ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளார். ஆனால் இறுதி ஆட்டத்தில் அவரை யாரும் வீழ்த்தியது கிடையாது. இந்த சீசனில் எந்த செட்டையும் இழக்காமல் கோலோச்சி இருக்கும் நடால், ‘களிமண்தரையின் ராஜா’ என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபிக்க வாய்ப்பு கனிந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் குறிப்பிட்ட கிராண்ட்ஸ்லாமை 10 முறை ருசித்த 2–வது நபர் என்ற சரித்திரப்பட்டியலில் இடம்பிடித்து விடுவார். ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய ஓபனை 11 முறை வென்று இருக்கிறார்.

நடாலை எதிர்த்து மட்டையை சுழற்ற காத்திருக்கும் வாவ்ரிங்காவும் லேசுபட்டவர் அல்ல. ஏற்கனவே 3 கிராண்ட்ஸ்லாம் (2014 ஆஸ்திரேலிய ஓபன், 2015 பிரெஞ்ச் ஓபன், 2016 அமெரிக்க ஓபன்) பட்டங்களை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாமில் இறுதி ஆட்டத்தில் இவர் ஒரு போதும் தோற்றது இல்லை. அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவை 5 செட் வரை போராடி சாய்த்த 32 வயதான வாவ்ரிங்கா, நடாலுக்கும் ‘வேட்டு’ வைப்பாரா? என்ற ஆவல் உருவாகியுள்ளது. நடாலுக்கு எதிராக இதுவரை 18 ஆட்டங்களில் மோதி அதில் 3–ல் மட்டுமே வாவ்ரிங்கா வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story