மின்னல் வீராங்கனை!


மின்னல் வீராங்கனை!
x
தினத்தந்தி 12 Aug 2017 7:47 AM GMT (Updated: 12 Aug 2017 7:47 AM GMT)

அழகும் அதிரடியும் இணைந்த அசத்தல் பெண், கார்பின் முகுருஜா. இந்த விம்பிள்டன் வெற்றி மங்கை, விம்பிள்டனை விட பிரெஞ்சு ஓபன் பட்டம் தனக்கு முக்கியமானது எனக் கூறுகிறார்.

வெனிசுலாவில் பிறந்து, சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஸ்பானிய மின்னல், முகுருஜாவின் சுறுசுறு பேட்டி...

விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் வெற்றிகளை எடை போட்டால், எதை நீங்கள் பெரிதெனக் கூறுவீர்கள்?

உணர்வுரீதியாக, பிரெஞ்சு ஓபன் பட்டத்தைத்தான் நான் பெரிதாகக் கருது கிறேன். காரணம், அதுதான் எனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம். ஆனால் விம்பிள்டன், வேறுபட்ட கதை. நான் கடந்த 2015–ல் விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடியதன் மூலம் அப்பட்டத்துக்கு நெருக்கமாக வந்தேன். அப்போது அங்கே தோல்வியடையும்போது, மறுபடி எனக்கு வாய்ப்பு வருமா எனத் தெரியாது. எனவே மறுபடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதும், சாம்பியன் ஆனதும் வித்தியாசமான உணர்வு. ஆனால் பிரெஞ்சு ஓபனில் வென்றதும், ‘ஓ... நாமும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் பெற்றுவிட்டோம்’ என்று நினைத்தேன்.  பிரெஞ்சு ஓபனில் வெற்றிவாகை சூடியதும் நான் ஸ்பெ‌ஷலாக எதுவும் செய்யவில்லை. எனது குடும்பத்தினருடன் ஒரு நல்ல டின்னர் சாப்பிட்டேன். பின்னர் சீக்கிரமாக படுக்கைக்குப் போய்விட்டேன். ஆனால் விம்பிள்டனில் வென்றபிறகு நான் அதிகம் களைப்படையவில்லை.

விம்பிள்டனில் வீனஸ் வில்லியம்ஸ் உடனான அந்த இறுதிப்போட்டி பற்றி...?

அந்த நேரத்தில் என் தலைக்குள் பல்வேறு வி‌ஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தன. நான் கடுமையான போட்டியை எதிர்பார்த்தே களமிறங்குகிறேன். எனக்கு எதிராக நிற்கும் வீனஸ் நல்ல வீராங்கனை என்பது எனக்குத் தெரியும். நான் கவலை எதுவும் படவில்லை. முதல் செட்டை இழந்தாலும், மேலும் இரு செட்கள் இருக்கின்றன, பார்த்துக்கொள்ளலாம் என்றும், முதல் செட்டை வென்றால் அடுத்த செட்டில் வெற்றியை வளைத்துவிடலாம் என்றும் எண்ணிக்கொண்டிருந்தேன். அதன்படியே செயல் பட்டேன். நான் பந்தைப் பார்த்து விளையாடினேன், அவ்வளவுதான்.

பிரெஞ்சு ஓபனில் வென்றபிறகு, நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்களா?

நான் மேலும் அடக்கமாக மாற வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு பட்டம் வென்றதும், எல்லாம் எளிதாகிவிட்டது போல மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் வெற்றியைக் கையாளுவது எளிதல்ல. இனி நாம் எப்போதும் நன்றாக விளையாட வேண்டும் என்று நானே எதிர்பார்க்கிறேன். ஒருமுறை சாம்பியன் ஆகிவிட்டால், நீங்கள் அதற்கப்புறம் எப்போதும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால், எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றன. அவற்றைக் கையாளுவதும் கடினமாகிறது. எனவே, வெற்றியோ, தோல்வியோ, எப்போதும் அடக்கமாக இருப்பதே நல்லது. ஒரு வெற்றிக்குப் பின், சத்தமே காட்டாமல் மீண்டும் களத்துக்குத் திரும்பி, கடினமாக உழைக்க வேண்டும். அடுத்த தொடரை எதிர்நோக்க வேண்டும். வெற்றியை தலைக்கு ஏற்றாமல், நான் இனிமேல் அற்புதமாகத்தான் ஆடுவேன் என்று எண்ணாமல், நாம் பாட்டுக்கு உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.



உலகின் ‘நம்பர் 1’ வீராங்கனை ஆவதைவிட அதிக தொடர்களில் வெல்வதுதான் எனது ஆசை என்று ஒருமுறை கூறினீர்களே?

நான் எனது அனுபவத்தின் அடிப்படையில் அப்படிச் சொன்னேன். கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் வெல்லும் உணர்வு எப்படியிருக்கும் என்று எனக்குத் தெரியும், அதை நான் அனுபவித்திருக்கிறேன். ஆனால் ‘நம்பர் 1’ வீராங்கனையாக இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியாதே? ஒருவேளை நானும் ஒருநாள் உலகின் ‘நம்பர் 1’ வீராங்கனை ஆகலாம். அப்போது என்னால், ‘நம்பர் 1’ பட்டத்தையும், சாம்பியன் பட்டத்தையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இப்போது என்னால் இப்படித்தான் கூற முடியும்.

கோன்சிதா மார்ட்டினஸ் உடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது? அவர் உங்களின் பயிற்சியாளராகத் தொடர்வாரா?

இப்போதெல்லாம் இந்தக் கேள்வி என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது. அது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ளவும் முடிகிறது. எனது வழக்கமான பயிற்சியாளர் சாம் சுமிக், தனது மனைவி குழந்தை பெற்றிருப்பதால் அவருடன் இருக்கிறார். ஆனால் கோன்சிதா எப்போதும் எனக்கு உதவியாக இருக்கக்கூடியவர். கோன்சிதா எங்களின் பெடரே‌ஷன் கோப்பை கேப்டன், டேவிஸ் கோப்பை கேப்டன். அவர் எப்போதும் எங்களுக்கு உதவத் தயாராக இருப்பார். இப்போதைக்கு விம்பிள்டனில் அவர் எனக்குப் பயிற்சியாளராக இருந்தார். தொடர்ந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

நீங்கள் வியக்கும் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் போல உங்களுக்கும் மகளிர் டென்னிசில் ஆதிக்கம் செலுத்த ஆசையா?

நானல்ல, யாராலுமே இனி செரீனா போல நீண்டகாலத்துக்கு மகளிர் டென்னிசில் ஆதிக்கம் செலுத்த முடியாது. அப்படி ஓர் அசாதாரண சாதனையை அவர் புரிந்திருக்கிறார். அனைத்து கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் பங்கேற்று, நன்றாக ஆடவும், முடிந்தால் கோப்பை வெல்லவும் முயல வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அப்படித்தான் எளிமையாக நான் எனது லட்சியத்தை வகுத்து வைத்திருக்கிறேன்.

எளிமையாகவே கூறி முடிக்கிறார், முகுருஜா.

Next Story