சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி கால்இறுதிக்கு தகுதி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்:  சானியா மிர்சா ஜோடி கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 17 Aug 2017 9:45 PM GMT (Updated: 17 Aug 2017 8:30 PM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

சின்சினாட்டி,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னோட்டமாக நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 3–6, 6–2, 2–6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லிக் பார்டியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

இதேபோல் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 4–6, 6–1, 6–7 என்ற செட் கணக்கில் ரஷியாவின் மகரோடாவிடம் வீழ்ந்தார். மற்ற ஆட்டங்களில் டாரியா கசட்கினா (ரஷியா), கரோலினா பிலிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 3–வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

பெண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)–பெங் ஷூய் (சீனா) ஜோடி 7–5, 6–4 என்ற நேர்செட்டில் ஜூலி கோர்ஜெஸ் (ஜெர்மனி)–ஒல்கா சாவ்சுக் (உக்ரைன்) இணையை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது. கால்இறுதியில் சானியா ஜோடி, ருமேனியாவின் கேம்லியா பெகு–ராலுசா ஒலாரு இணையை சந்திக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 4–6, 6–2, 4–6 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஜெராட் டொனால்சனிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–3, 6–4 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் கேஸ்கியட்டை சாய்த்து 3–வது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 8–வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம் 6–3, 6–2 என்ற நேர்செட்டில் 25–ம் நிலை வீரர் பாபி போக்னினியை (இத்தாலி) தோற்கடித்து 3–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் உலக தர வரிசையில் 7–வது இடத்தில் உள்ள அலெக்சாண்டர் ஸ்வேரேவ் (ஜெர்மனி) 6–4, 3–6, 4–6 என்ற செட் கணக்கில் 87–ம் நிலை வீரர் பிரான்சஸ் டியாபோவிடம் (அமெரிக்கா) அதிர்ச்சி தோல்வி கண்டார்.

Next Story