சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சானியா, போபண்ணா ஜோடிகள் வெற்றி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: சானியா, போபண்ணா ஜோடிகள் வெற்றி
x
தினத்தந்தி 18 Aug 2017 9:45 PM GMT (Updated: 18 Aug 2017 7:57 PM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிசின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடியும், ரோகன் போபண்ணா இணையும் வெற்றி பெற்றன.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 7-6 (7-4), 7-6 (7-3) என்ற நேர்செட்டில் 36-ம் நிலை வீரர் அட்ரியன் மன்னாரினோவை (பிரான்ஸ்) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல் டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் பெரர் (ஸ்பெயின்), ஜான் இஸ்னர் (அமெரிக்கா), டொனால்ட்சன் (அமெரிக்கா), யுஷி சுஜிதா (ஜப்பான்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டு கால்இறுதியை எட்டினர்.

கால்இறுதியில் முகுருஜா

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனான கார்பின் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6-4, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் மேடிசன் கீஸ்சை (அமெரிக்கா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி செட்டில் முகுருஜா 3 முறை மேட்ச் புள்ளி ஆபத்தில் இருந்து தப்பித்து அதன் பிறகு மீண்டு வந்து வெற்றியை ருசித்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் சுலோவாக்கியாவின் சிபுல்கோவாவை சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். சிமோனா ஹாலெப் (ருமேனியா), வோஸ்னியாக்கி (டென்மார்க்), குஸ்னெட்சோவா (ரஷியா) ஆகியோரும் கால்இறுதியை உறுதி செய்தனர்.

அரைஇறுதியில் சானியா ஜோடி

பெண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)-பெங் ஷூய் (சீனா) ஜோடி 6-3, 6-7 (1-7), 10-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் கேம்லியா பெகு-ராலுசா ஒலாரு இணையை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-இவான் டோடிக் (குரோஷியா) கூட்டணி 5-7, 7-5, 10-8 என்ற செட் கணக்கில் ஜூயன் செபாஸ்டியன் காபல் (கொலம்பியா) -பாபியோ போக்னினி (இத்தாலி) ஜோடியை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 

Next Story