சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி


சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 19 Aug 2017 9:36 PM GMT (Updated: 19 Aug 2017 9:36 PM GMT)

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 2–6, 5–7 என்ற நேர்செட்டில் 23–ம் நிலை வீரர் நிக் கிர்ஜியோசிடம் (ஆஸ்திரேலியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். தோல்வி அடைந்தாலும், ரபெல் நடால் அடுத்த வாரம் வெளியாகும் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறுவதில் பிரச்சினை இருக்காது.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 6–3, 6–3 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் டிமிட்ரோவ் (பல்கேரியா), ஜான் இஸ்னர் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

அரைஇறுதியில் முகுருஜா

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 6–2, 5–7, 7–5 என்ற செட் கணக்கில் ரஷிய வீராங்கனை குஸ்னெட்சோவாவை (ரஷியா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 6–4, 7–6 (7–1) என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீராங்கனை ஜோஹன்னா கோன்டாவை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்னொரு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6–2, 6–4 என்ற நேர்செட்டில் கரோலின் வோஸ்னியாக்கியை (டென்மார்க்) சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6–1, 7–6 (7–3) என்ற நேர்செட்டில் ஜூலியா ஜார்ஜஸ்சை (ஜெர்மணி) தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

போபண்ணா, சானியா ஜோடிகள் தோல்வி

ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)–இவான் டோடிச் (குரோஷியா) ஜோடி 1–6, 7–6 (7–5), 7–10 என்ற செட் கணக்கில் லூகாஸ் குபோட்(போலந்து)–மார்செலோ மிலோ (பிரேசில்) இணையிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது.

பெண்கள் இரட்டையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் சானியா மிர்சா (இந்தியா)–பெங் ஷூய் (சீனா) இணை 4–6, 6–7 (6–8) என்ற நேர்செட்டில் சு வெய் ஹிஸ் (சீனதைபே)–மோனிகா நிகல்ஸ்கு (ருமேனியா) ஜோடியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.


Next Story