அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியன் மரின் சிலிச் தோல்வி வீனஸ், ‌ஷரபோவா 4–வது சுற்றுக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முன்னாள் சாம்பியன் மரின் சிலிச் தோல்வி  வீனஸ், ‌ஷரபோவா 4–வது சுற்றுக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 2 Sep 2017 10:00 PM GMT (Updated: 2 Sep 2017 8:43 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன் குரோஷியாவின் மரின் சிலிச் 3–வது சுற்றுடன் தோற்று வெளியேறினார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியன் குரோஷியாவின் மரின் சிலிச் 3–வது சுற்றுடன் தோற்று வெளியேறினார்.

சிலிச் வெளியேற்றம்

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

5–வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. ஆண்கள் பிரிவில் 7–ம் நிலை வீரரும், 2014–ம் ஆண்டு சாம்பியனுமான குரோஷியாவின் மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை தரவரிசையில் 33–வது இடம் வகிக்கும் டியாகோ ஸ்வார்ட்ஸ்மான் (அர்ஜென்டினா) 4–6, 7–5, 7–5, 6–4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, கிராண்ட்ஸ்லாமில் முதல் முறையாக 4–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். 3 மணி 23 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் மரின் சிலிச் 9 டபுள் பால்ட்டுடன், 80 முறை பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு தவறுகளை இழைத்ததால் தோல்வியை தவிர்க்க முடியாமல் போய் விட்டது. இதே போல் ஜெர்மனி வீரர் மிஸ்ச்சா ஸ்வெரேவ் 6–4, 6–3, 7–6 (5) என்ற செட் கணக்கில் உள்ளூர் நாயகன் ஜான் இஸ்னரை விரட்டினார்.

இளம் வீரர் சாதனை

இங்கிலாந்து வீரர் கைல் எட்மன்டுக்கு எதிரான ஆட்டத்தில் தகுதிநிலை வீரர் டெனிஸ் ‌ஷபோவலோவ் (கனடா) 3–6, 6–3, 6–3, 1–0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்த போது எட்மன்ட் கழுத்து வலியால் பாதியில் விலகினார். இதையடுத்து ‌ஷபோவலோவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 1989–ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபனில் இளம் வயதில் 4–வது சுற்றை எட்டியவர் என்ற சிறப்பை 18 வயதான ‌ஷபோவலோவ் பெற்றார்.

‌ஷபோவலோவ், 4–வது சுற்றில் ஸ்பெயினின் பாப்லோ காரெனோ பஸ்தாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். காரெனோ பஸ்தா, முதல் மூன்று சுற்றிலும் தகுதி சுற்றின் மூலம் பிரதான சுற்றை அடைந்த வீரர்களுடன் மோதி இருந்தார். 4–வது சுற்றிலும் அப்படிப்பட்ட ஒரு வீரரைத்தான் சந்திக்கிறார். ஓபன் எரா (1967–ம் ஆண்டுக்கு பிறகு) வரலாற்றில் கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் ஒரு வீரர், 4 தகுதி நிலை வீரர்களை சந்திப்பது இதுவே முதல் நிகழ்வாகும். கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), சாம் குயரி (அமெரிக்கா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

‌ஷரபோவா அபாரம்

பெண்கள் ஒற்றையரில் ரஷிய புயல் மரிய ‌ஷரபோவா 7–5, 6–2 என்ற செட் கணக்கில், ‘வைல்டு கார்டு’ வீராங்கனை சோபியா கெனினை (அமெரிக்கா) வென்றார்.. ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 1¼ ஆண்டுகள் தடையை அனுபவித்த ‌ஷரபோவா, தனது மறுபிரவேசத்தில் தொடர்ந்து அசத்தி வருகிறார். 4–வது சுற்றில் ‌ஷரபோவா, லாத்வியாவைச் சேர்ந்த அனஸ்டசிஜா செவஸ்தோவாவை எதிர்கொள்கிறார்.

முன்னாள் சாம்பியன் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6–3, 6–4 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியையும் (கிரீஸ்), விம்பிள்டன் சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6–1, 6–1 என்ற நேர் செட்டில் ரைபரிகோவாவையும் (சுலோவக்கியா) துவம்சம் செய்து 4–வது சுற்றுக்கு முன்னேறினார்கள். முகுருஜா அடுத்து முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் செக்குடியரசின் பெட்ரோ கிவிடோவாவுடன் மோத இருக்கிறார்.

பெயஸ் வெற்றி; சானியா தோல்வி

இந்த நாள் இந்தியர்களுக்கு ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக அமைந்தது. இந்திய மூத்த வீரர் லியாண்டர் பெயஸ் சக நாட்டவர் புராவ் ராஜாவுடன் முதல்முறையாக கைகோர்த்து களம் இறங்கினார். இவர்கள் முதல் சுற்றில் 6–1, 6–3 என்ற நேர் செட்டில் செர்பியாவின் ஜாங்கோ டிப்சரேவிச்– விக்டர் டிரோக்கி இணையை சாய்த்தனர். அதே நேரத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா– உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் கூட்டணி 2–வது சுற்றில் 7–5, 4–6, 4–6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சிமோன் போலெலி– பாபியோ போக்னினி இணையிடம் வீழ்ந்தது.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா, குரோஷிய வீரர் இவான் டோடிக் ஜோடியின் சவால் முதல் சுற்றுடன் முடிவுக்கு வந்தது. இவர்களை ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா)– பாப்ரிஸ் மார்ட்டின் (பிரான்ஸ்) 5–7, 6–3, 10–6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர்.


Next Story