அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4–வது சுற்றில் பெடரர், நடால் ஆஸ்டாபென்கோ, ராட்வன்ஸ்கா வெளியேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4–வது சுற்றில் பெடரர், நடால் ஆஸ்டாபென்கோ, ராட்வன்ஸ்கா வெளியேற்றம்
x
தினத்தந்தி 3 Sep 2017 10:00 PM GMT (Updated: 3 Sep 2017 9:29 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4–வது சுற்றுக்கு முன்னாள் சாம்பியன்கள் ரோஜர் பெடரர், ரபெல் நடால் முன்னேறியுள்ளனர்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 4–வது சுற்றுக்கு முன்னாள் சாம்பியன்கள் ரோஜர் பெடரர், ரபெல் நடால் முன்னேறியுள்ளனர்.

பெடரர்–நடால்

நியூயார்க் நகரில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இதில் 6–வது நாளான நேற்று முன்தினம் ஒற்றையர் பிரிவில் 3–வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6–3, 6–3, 7–5 என்ற நேர் செட் கணக்கில் பெலிசியானோ லோப்சை (ஸ்பெயின்) பதம்பார்த்து 4–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். முந்தைய இரு சுற்றுகளில் 5 செட் வரை போராடிய பெடரர், இந்த ஆட்டத்தில் எளிதில் வெற்றி கண்டதால், உற்சாகத்தில் திளைத்தார். ‘முதல் இரு செட்டுகளில் தடுமாறினேன். ஆனால் இந்த ஆட்டத்தில் துல்லியமாக விளையாடி இருக்கிறேன்’ என்று குறிப்பிட்ட பெடரர் அடுத்து பிலிப் கோல்ஸ்கிரீபரை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–7 (3–7), 6–3, 6–1, 6–4 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் லியோனர்டோ மேயரை சாய்த்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். பெடரரும், நடாலும் அரைஇறுதியில் சந்திப்பதற்குரிய வாய்ப்பு வெகுவாக நெருங்கி இருக்கிறது. டேவிட் கோபின் (பெல்ஜியம்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), முன்னாள் சாம்பியன் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா), அலெக்சாண்டர் டோல்கோபோலாவ் (உக்ரைன்) உள்ளிட்டோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்தனர்.

ஸ்விடோலினா– பிளிஸ்கோவா

பெண்கள் பிரிவில் 4–ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6–4, 7–5 என்ற நேர் செட் கணக்கில் ஷெல்பி ரோஜர்சை (அமெரிக்கா) வீழ்த்தி முதல் முறையாக 4–வது சுற்றை எட்டினார்.

‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) அதிர்ச்சி தோல்வியில் இருந்து தப்பினார். அவரை எதிர்த்து மல்லுகட்டிய சீனாவின் ஷூய் சாங் முதல் செட்டை கைப்பற்றி 2–வது செட்டில் 5–4 என்ற முன்னிலையுடன் வெற்றியின் விளிம்புக்கு வந்தார். இதன் பின்னர் ‘மேட்ச் பாயிண்ட்’ ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொண்டு சரிவில் இருந்து மீண்டெழுந்த பிளிஸ்கோவா ஒரு வழியாக 3–6, 7–5, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4–வது சுற்றை உறுதி செய்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 2–6, 6–4, 6–1 என்ற செட் கணக்கில் எலினா வெஸ்னினாவை (ரஷியா) விரட்டினார்.

பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ‘அவுட்’

அதே சமயம் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 12–ம் நிலை வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) 3–6, 2–6 என்ற நேர் செட்டில் டாரியா கசட்கினாவிடம் (ரஷியா) அதிர்ச்சிகரமாக மண்ணை கவ்வினார். கசட்கினா, தனது கிராண்ட்ஸ்லாம் வாழ்க்கையில் 4–வது சுற்றுக்குள் அடியெடுத்து வைப்பது இதுவே முதல் முறையாகும். இதே போல் 11–ம் நிலை வீராங்கனை அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து) 5–7, 6–4, 4–6 என்ற செட் கணக்கில் கோகோ வன்டெவெஜிடம் (அமெரிக்கா) வீழ்ந்தார்.

கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)– கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி (கனடா) ஜோடி 6–4, 4–6 (13–11) என்ற செட் கணக்கில் ஹீதர் வாட்சன் (இங்கிலாந்து)– ஹென்றி கோன்டினென் (பின்லாந்து) இணையை வென்றது.

நடால் கண்டனம்

உலகத் தரவரிசையில் 26–வது இடம் வகிக்கும் இத்தாலி வீரர் பாபியோ போக்னினி முதலாவது சுற்றில் சக நாட்டவர் டிராவக்லியாவிடம் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டத்தின் போது பெண் நடுவர் லூயிஸ் இங்ஸின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால் போக்னினிக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் இரட்டையர் பிரிவில் சக நாட்டவர் சிமோன் போலெலியுடன் இணைந்து முதல் இரு சுற்றுகளில் வெற்றி பெற்ற நிலையில் அவரை தொடரில் இருந்து போட்டி அமைப்பாளர்கள் திடீரென வெளியேற்றி இருக்கிறார்கள். இதற்கு ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இந்த நடவடிக்கை எடுக்க 4 நாட்கள் அவசியமா? அவரை இடைநீக்கம் செய்ய விரும்பினால் அந்த நடவடிக்கையை உடனடியாக எடுத்து இருக்கலாம். இப்போது அவர் இரண்டு இரட்டையர் ஆட்டங்களில் விளையாடி விட்ட நிலையில் அவரை வெளியேற்றுவது என்பது சரியான முடிவாக தெரியவில்லை’ என்றார்.


Next Story