அமெரிக்க ஓபன் டென்னிஸ் ‌ஷரபோவா, முகுருஜா அதிர்ச்சி தோல்வி


அமெரிக்க ஓபன் டென்னிஸ் ‌ஷரபோவா, முகுருஜா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 4 Sep 2017 11:15 PM GMT (Updated: 4 Sep 2017 9:21 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் சானியா, ரோகன் போபண்ணா ஜோடிகள் கால்இறுதிக்கு முன்னேறியது.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4–வது சுற்று ஆட்டத்தில் ‌ஷரபோவா, முகுருஜா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர். இரட்டையர் பிரிவில் சானியா, ரோகன் போபண்ணா ஜோடிகள் கால்இறுதிக்கு முன்னேறியது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 7–வது நாளான நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீராங்கனை மரிய ‌ஷரபோவா, 16–ம் நிலை வீராங்கனையான அனஸ்டசிஜா செவஸ்தோவாவை (லாத்வியா) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை ‌ஷரபோவா 7–5 என்ற கணக்கில் தனதாக்கினார். அதன் பின்னர் ‌ஷரபோவா ஆட்டத்தில் அதிக தவறுகள் இழைத்தார். முடிவில் ‌ஷரபோவா 7–5, 4–6, 2–6 என்ற செட் கணக்கில் அனஸ்டசிஜாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனும், உலக தர வரிசையில் 3–வது இடத்தில் இருக்கும் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 6–7 (3–7), 3–6 என்ற நேர்செட்டில் 13–ம் நிலை வீராங்கனை பெட்ரோ கிவிடோவாவிடம் (செக் குடியரசு) அதிர்ச்சிகரமாக தோல்வியை சந்தித்து வெளியேறினார்.

இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6–3, 3–6, 6–1 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவரஸ் நவரோவாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6–3, 3–6, 6–1 என்ற செட் கனக்கில் ஜெர்மனியின் ஜூலியா கோர்ஜெஸ்சை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 19–வது இடத்தில் இருக்கும் பாப்லோ காரெனோ பஸ்தா (ஸ்பெயின்) 7–6 (7–2), 7–6 (7–4), 7–6 (7–3) என்ற நேர்செட்டில் கனடா வீரர் டெனிஸ் ‌ஷபோவலோவ்வை தோற்கடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் சாம் குயரி 6–2, 6–2, 6–1 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மிஸ்சா ஸ்வேரேவ்வை எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்குள் தடம் பதித்தார். மற்ற ஆட்டங்களில் கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), டிகோ ஸ்வார்ட்ஸ்மான் (அர்ஜென்டினா) ஆகியோர் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.

பெண்கள் இரட்டையர் பிரிவு 3–வது சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)–ஷூய் பெங் (சீனா) ஜோடி 6–2, 3–6, 7–6 (7–2) என்ற செட் கணக்கில் சோரானா சிர்ஸ்டா (ருமேனியா)–சாரா (ஸ்பெயின்) இணையை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)–காப்ரிலா (கனடா) இணை 6–3, 6–4 என்ற நேர்செட்டில் மார்டினஸ் சாஞ்சஸ் (ஸ்பெயின்)–நிகோலஸ் (அமெரிக்கா) ஜோடியை சாய்த்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்–புரஜ் ராஜா ஜோடி 4–6, 6–7 (7–9) என்ற நேர்செட்டில் ரஷியாவின் ஆந்த்ரே ருப்லெவ்–கரன் காஷானோவ் ஜோடியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.


Next Story