அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 7 Sep 2017 10:00 PM GMT (Updated: 7 Sep 2017 6:43 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரர் கால்இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் கால்இறுதியில் 5 முறை சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட் ரோவை எதிர்கொண்டார்.

அபாயகரமான வீரர்களில் ஒருவராக வர்ணிக்கப்படும் டெல் போட்ரோ, பெடரருக்கு கடுமையாக நெருக்கடி கொடுத்து மிரள வைத்தார். முதல் இரு செட்டுகளை இருவரும் தலா ஒன்று வீதம் கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டில் 4 முறை எதிராளியின் செட் பாயிண்ட் வாய்ப்பில் இருந்து தப்பித்த போட்ரோ அதன் பிறகு டைபிரேக்கர் வரை மல்லுகட்டி அந்த செட்டை வசப்படுத்தினார். இதன் பின்னர் போட்ரோவுக்கு 4-வது செட்டில் பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உருவாகவில்லை.

பெடரர் தோல்வி

2 மணி 50 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் டெல் போட்ரோ 7-5, 3-6, 7-6 (10-8), 6-4 என்ற செட் கணக்கில் பெடரருக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். இதே போன்று 2009-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டத்தில் டெல் பெட்ரோ, பெடரை வீழ்த்தி இருந்தது நினைவு கூரத்தக்கது.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டனில் மகுடம் சூடிய 36 வயதான பெடரர் அமெரிக்க ஓபனிலும் ஆதிக்கம் செலுத்தி 20-வது கிராண்ட்ஸ்லாமை வெல்வார் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது கனவை டெல்போட்ரோ சிதைத்து விட்டார். கடைசியாக 2008-ம் ஆண்டு அமெரிக்க ஓபனை ருசித்திருந்த பெடரர், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் அரைஇறுதியில் ரபெல் நடாலை சந்தித்து இருப்பார். ஆனால் அதுவும் கைகூடவில்லை. அமெரிக்க ஓபனில் பெடரர், நடாலை ஒரு போதும் எதிர்கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘நம்ப முடியவில்லை’

தரவரிசையில் 28-வது இடம் வகிக்கும் 28 வயதான டெல் போட்ரோ கூறுகையில், ‘இந்த தொடரில் எனது சிறந்த ஆட்டம் இது தான். எனது சர்வீஸ் சிறப்பாக இருந்தது. முடிந்தவரை மிக கடினமாக பந்துகளை திருப்பி அடித்தேன். சிறப்பான ஒரு ஆட்டத்தில் இருவரும் விளையாடினோம். இறுதியில் வெற்றிக்கு நானே தகுதியானவன் ஆனேன். அடிக்கடி ஏற்பட்ட காயங்கள், அதற்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சைகள் காரணமாக இனி எனக்கு பிடித்தமான அமெரிக்க ஓபனில் விளையாட முடியுமா? என்று நினைத்தது உண்டு. இப்போது மீண்டும் அரைஇறுதியில் விளையாட இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை’ என்றார்.

பெடரர் கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் என்னை விட டெல்போட்ரோவே நன்றாக ஆடினார். குறிப்பாக முக்கியமான தருணத்தில் அபாரமாக செயல்பட்டார். வெற்றிக்கு அவர் தகுதியானவர். என்னை பொறுத்தவரை கால்இறுதிக்கு வந்ததே மகிழ்ச்சி தான். தோல்வி ஏமாற்றம் அளிக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. அரைஇறுதியில் டெல் பெட்ரோ, ரபெல் நடாலை வீழ்த்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது’ என்றார்.

நடால் கலக்கல்

முன்னதாக நடந்த மற்றொரு கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், முன்னாள் சாம்பியனுமான ஸ்பெயினின் ரபெல் நடால் 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷிய இளம் வீரர் ஆந்த்ரே ரூப்லெவை துவம்சம் செய்து 6-வது முறையாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

இன்று நடக்கும் அரைஇறுதியில் நடால், ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். டெல் போட்ரோவுக்கு எதிராக நடால் 13 ஆட்டங்களில் மோதி அதில் 8-ல் வெற்றி பெற்றிருந்தாலும், கடைசியாக சந்தித்த இரு ஆட்டங்களிலும் தோல்வி கண்டிருந்தார். இன்னொரு அரைஇறுதியில் பாப்லோ காரெனா பஸ்தா (ஸ்பெயின்)- கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) மோதுகிறார்கள்.

பெண்களில் அனைவரும் அமெரிக்கர்

பெண்கள் ஒற்றையர் கால்இறுதியில் 26-ம் நிலை வீராங்கனை கோகோ வன்டேவெஜ் (அமெரிக்கா) 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வெளியேற்றினார். இதே போல் கையா கனேபிக்கு (எஸ்தோனியா) எதிரான கால்இறுதியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றிக்கனியை பறித்தார். ஏற்கனவே அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்லோன் ஸ்டீபன்ஸ் ஆகியோரும் அரைஇறுதியை உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்த அமெரிக்க ஓபனில் பெண்கள் பிரிவில் அரைஇறுதிக்கு தகுதி பெற்ற 4 பேரும் அமெரிக்கர்கள். 1981-ம் ஆண்டுக்கு பிறகு இத்தகைய பெருமையை அமெரிக்கா பெற்றிருக்கிறது. அரைஇறுதியில் வீனஸ்-ஸ்டீபன்ஸ், மேடிசன் கீஸ்- வன்டேவெஜ் மோத உள்ளனர்.

Next Story