மூன்றாம் முறையாக அமெரிக்க ஓபனை வென்றார் நடால்


மூன்றாம் முறையாக அமெரிக்க ஓபனை வென்றார் நடால்
x
தினத்தந்தி 12 Sep 2017 12:00 AM GMT (Updated: 11 Sep 2017 7:34 PM GMT)

அமெரிக்க ஓபன் டென்னிசில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் நேர் செட்டில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி 3-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.

நியூயார்க்,

அமெரிக்க ஓபன் டென்னிசில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் நேர் செட்டில் தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி 3-வது முறையாக பட்டத்தை கைப்பற்றினார்.

அமெரிக்க ஓபன்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), 32-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனுடன் (தென்ஆப்பிரிக்கா) மோதினார்.
நடாலுக்கு இது 23-வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியாகும். ஆனால் கெவின் ஆண்டர்சன், கிராண்ட்ஸ்லாமில் இறுதிசுற்றில் கால்பதித்தது இதுவே முதல் முறையாகும்.

எனவே அனுபவம் வாய்ந்த ரபெல் நடால் தான் ஆதிக்கம் செலுத்துவார் என்று நிலவிய எதிர்பார்ப்பு போலவே ஆட்டத்தின் போக்கு அமைந்தது. இடக்கை ஆட்டக்காரரான நடால் ஆக்ரோஷமான ஷாட்டுகளை அடித்து மிரட்டினார்.

நடால் அபாரம்

6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட கெவின் ஆண்டர்சனின் ஒரே சாதகமான அம்சம், அதிவேகமாக சர்வீஸ் போடுவது தான். மணிக்கு அதிகபட்சமாக 136 மைல் வேகம் வரை சர்வீஸ் போட்டார். 10 ஏஸ் சர்வீஸ்கள் வீசினார். ஆனால் சர்வீசில் துரிதத்தை காட்டிய அவர், நடாலுக்கு எதிராக பந்தை கச்சிதமாக திருப்பி அனுப்புவதில் திகைத்துப் போனார். ஆண்டர்சனால் எதிராளியின் ஒரு சர்வீசை கூட முறியடிக்க முடியவில்லை.

தனக்கே உரிய பாணியில் பட்டைய கிளப்பிய ரபெல் நடால் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் ஆண்டர்சனை துவம்சம் செய்து அமெரிக்க ஓபனை 3-வது முறையாக சொந்தமாக்கினார். இந்த ஆட்டம் 2 மணி 27 நிமிடங்கள் நடந்தது. ஏற்கனவே இங்கு 2010, 2013-ம் ஆண்டுகளிலும் நடால் வாகை சூடியிருந்தார். மொத்தத்தில் நடாலுக்கு இது 16-வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாகும்.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நடாலுக்கு ரூ.23½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த கெவின் ஆண்டர்சனுக்கு ரூ.11½ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

‘வியப்புக்குரிய ஆண்டு’

வெற்றிக்கு பிறகு ரபெல் நடால் கூறுகையில், ‘எனது டென்னிஸ் வாழ்க்கையில் சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இதை பார்க்கிறேன். இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த வெற்றிகளை நம்பவே முடியவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக சில பிரச்சினைகள், காயங்கள், மோசமான பார்ம் காரணமாக நிறைய சரிவை சந்தித்தேன். அந்த கடினமான காலக்கட்டத்தில் இருந்து மீண்டு வந்து சாதித்து இருக்கிறேன். நிச்சயமாக, இது எனக்கு உணர்வுபூர்வமான சீசன் தான். நான் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ரோஜர் பெடரரின் 19 கிராண்ட்ஸ்லாம் சாதனையை எட்டிப்பிடிப்பது குறித்து ஒரு போதும் சிந்தித்தது இல்லை. நான் எனது வழியில் விளையாடுகிறேன். பெடரர், அவரது போக்கில் விளையாடுகிறார். இந்த பயணத்தை எப்போது முடிப்போம் என்பதை பார்க்கலாம். நான் இதுவரை 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளேன். அவரை விட 3 கிராண்ட்ஸ்லாம் பின்தங்கி உள்ளேன். இது மிகப்பெரிய வித்தியாசமாகும். அவரை முந்துவது குறித்து நான் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. என்னை போலவே அவருக்கும் இந்த ஆண்டு வியப்புக்குரிய வகையில் அமைந்திருக்கிறது’ என்றார்.

முதல் கிராண்ட்ஸ்லாம் கனவு நடால் மூலம் தகர்க்கப்பட்டதால் ஏமாற்றத்திற்குள்ளான 31 வயதான கெவின் ஆண்டர்சன் கூறும் போது, ‘எனது முன்மாதிரிகளில் ரபெல் நடாலும் ஒருவர். அவர் ஒரு மிக கடினமான போட்டியாளர். டென்னிஸ் விளையாட்டுக்கு நல்ல தூதர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள். விரும்பிய முடிவு கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து போராடி மீண்டு வருவேன்’ என்றார்.

ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன்

பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- சான் யங் ஜான் (சீனத்தைபே) ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் லூசி ஹடெக்கா-கேத்ரினா சினியாகோவா (செக்குடியரசு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. ஹிங்கிஸ் ஏற்கனவே கலப்பு இரட்டையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் ஜாமி முர்ரேவுடன் இணைந்து கோப்பையை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

பெண்கள் இரட்டையரில் ஹிங்கிஸ் வசப்படுத்திய 13-வது கிராண்ட்ஸ்லாமாக இது பதிவானது. அதே சமயம் ஹிங்கிஸ்-சான் யங் ஜான் ஜோடியாக கைப்பற்றிய முதல் கிராண்ட்ஸ்லாம் இது தான்.

Next Story