உலக பெண்கள் டென்னிஸ்: முதல் ஆட்டத்தில் பிளிஸ்கோவா, முகுருஜா வெற்றி


உலக பெண்கள் டென்னிஸ்: முதல் ஆட்டத்தில் பிளிஸ்கோவா, முகுருஜா வெற்றி
x
தினத்தந்தி 22 Oct 2017 8:11 PM GMT (Updated: 22 Oct 2017 8:11 PM GMT)

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது.

சிங்கப்பூர்,

உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நேற்று தொடங்கியது. 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடத்தில் உள்ள வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள். ‘ரெட்’ பிரிவில் சிமோனா ஹாலெப் (ருமேனியா), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்), கரோலின் கார்சியா (பிரான்ஸ்) ஆகியோரும், ‘ஒயிட்’ பிரிவில் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீராங்கனைகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் அரைஇறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

ஒயிட் பிரிவில் நேற்று நடந்த முதல் லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் 5-வது இடத்தில் உள்ள வீனஸ் வில்லியம்சை (அமெரிக்கா) தோற்கடித்தார். மற்றொரு லீக் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா 6-3, 6-4 என்ற நேர்செட்டில் 7-வது இடத்தில் உள்ள லாத்யாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவை சாய்த்தார்.

Next Story