ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 13 Jan 2018 11:15 PM GMT (Updated: 13 Jan 2018 7:05 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நாளை தொடக்கம் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா பெடரர்.

மெல்போர்ன்,

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 28-ந்தேதி வரை நடக்கிறது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வெல்ல ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், முழங்கை காயத்தால் 6 மாதங்கள் ஓய்வுக்கு பிறகு களம் திரும்பும் 6 முறை சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), முன்னாள் சாம்பியன் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஏ.டி.பி. சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), 2017-ம் ஆண்டில் 5 பட்டங்களை வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டொமினிக் திம் (ஆஸ்திரியா), ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ (அர்ஜென்டினா) ஆகியோரும் இந்த முறை தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தனது 20-வது கிராண்ட்ஸ்லாம் மகுடத்துக்கு குறி வைத்துள்ள 36 வயதான பெடரர் முதலாவது சுற்றில் அல்ஜாஸ் பெடேனை (சுலோவேனியா) சந்திக்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) விலகி விட்டார். இதில் முதல் நிலை நட்சத்திரம் சிமோனா ஹாலெப் (ருமேனியா), வோஸ்னியாக்கி (டென்மார்க்), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) , மரிய ஷரபோவா (ரஷியா), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ஸ்விடோலினா (உக்ரைன்) உள்ளிட்டோரில் ஒருவரே பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.278 கோடியாகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.20 கோடியும், 2-வது இடத்தை பிடிப்போருக்கு ரூ.10 கோடியும் பரிசாக வழங்கப்படும்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த டென்னிஸ் திருவிழாவை சோனி சிக்ஸ், சோனி டென்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story