ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ரபெல் நடால், மரின் சிலிச் வெற்றி வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ரபெல் நடால், மரின் சிலிச் வெற்றி வீனஸ் வில்லியம்ஸ் வெளியேற்றம்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:15 PM GMT (Updated: 15 Jan 2018 8:42 PM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ரபெல் நடால் வெற்றி பெற்றார். முன்னாள் முதல் நிலை வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-1, 6-1 என்ற நேர்செட்டில் விக்டர் எஸ்ட்ரெல்லாவை (டோமினிக் குடியரசு) எளிதில் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்த 37 வயதான ரபெல் நடால் வெற்றியுடன் போட்டியை தொடங்கி இருக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட் 6-7 (4-7), 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 11-ம் நிலை வீர கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 6-7 (4-7), 4-6, 3-6 என்ற நேர்செட்டில் சைபீரியா வீரர் மார்கஸ் பாக்தாதிஸ்சிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

மற்ற ஆட்டங்களில் டிமிட்ரோவ் (பல்கேரியா), நிக் கிர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா), மரின் சிலிச் (குரோஷியா), மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா), சோங்கா (பிரான்ஸ்), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), யுய்சி சுஜித் (ஜப்பான்), ஜான் மில்மன் (ஆஸ்திரேலியா), யோஷிஹிடோ நிஷிர்கா (ஜப்பான்), விக்டோர் டிரிச்கி (செர்பியா), ருபென் பெமல்மான்ஸ் (பெல்ஜியம்), பாப்லோ காமேன் பஸ்டா (ஸ்பெயின்), ஜிலெஸ் முல்லர் (லக்சம்பர்க்), மெக்கன்சி மெக்டொனால்டு (அமெரிக்கா), லினார்டோ மேயர் (அர்ஜென்டினா), டெனிஸ் இஸ்டோமின் (உஸ்பெகிஸ்தான்), ஜிலெஸ் சிமோன் (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 37 வயது வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 3-6, 5-7 என்ற நேர்செட்டில் உலக தரவரிசையில் 78-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச்சிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் கடந்த ஆண்டில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-2, 6-7 (2-7), 2-6 என்ற நேர்செட்டில் சீன வீராங்கனை ஷாங் ஷாயிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். இன்னொரு ஆட்டத்தில் கோகோ வான்டெவெஜ்ஹே (அமெரிக்கா) 6-7 (4-7), 2-6 என்ற நேர்செட்டில் ஹங்கேரி வீராங்கனை டிமா பாபோஸ்சிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 6-2, 6-3 என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை மிகாலா பசார்னெஸ்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் ஆஸ்டாபென்கோ (லாத்வியா), ஜூலியா ஜார்ஜஸ் (ஜெர்மனி), ரைபரிகோவா (சுலோவக்கியா), கயா கனோபி (எஸ்தோனியா), எலினா சிடோலினா (உக்ரைன்), அலிஸ் கார்னெட் (பிரான்ஸ்), நவரோ (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Next Story