தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை -கனிமொழி எம்பி


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை -கனிமொழி எம்பி
x
தினத்தந்தி 13 Aug 2019 9:49 AM GMT (Updated: 13 Aug 2019 9:49 AM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என கனிமொழி எம்பி கூறினார்.

சென்னை

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லாதது ஏன்? அவரை யார் தடுத்தது.

அங்கு மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசாங்கம் சரியான எந்த நிவாரண உதவிகளும் செய்யவில்லை.

மு.க.ஸ்டாலின் பாதிப்புகளை பார்த்துவிட்டு வந்து இருக்கிறார். இனியாவது அரசு நிவாரண பணிகளை துரிதமாக செய்யட்டும்.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல், வெள்ளம் மற்றும் வறட்சி பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டு தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பா.ஜனதாவின் இன்னொரு ‘கை’ ஆக அ.தி.மு.க. செயல்படுகிறது. மழையால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற தனது மாநிலத்துக்கு வேண்டிய நிதிகளை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும் அதற்கு  ஆதரவாக வாக்களிக்கின்ற அ.தி.மு.க. தமிழகத்துக்கு வேண்டிய நியாயமான நிதியை பெற்றுத் தர வேண்டும்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழ்தரமாக பேசி இருக்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாது.

காஷ்மீர் மாநிலத்தின் முக்கியமான தலைவர்களை கைது செய்துவிட்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அவர்களது குடும்பத்தினருக்கு கூட தெரியாத அளவுக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு யாரும் வெளியில் வர முடியாத நிலை உள்ளது. காஷ்மீரை பற்றி பேசுபவர்கள். முதலில் இதை புரிந்து கொண்டு பேச வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story