.
சற்று முன் :
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

கடகம்

சித்திரை மாத ராசி பலன்கள்

14-04-2014 முதல் 14-05-2014 வரை

புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

சோதனைகளை சாதனையாக்கும்  நேரம்!

கலகலப்பாகப் பேசிக் காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்று சொல்லும் கடக ராசி நேயர்களே!

சித்திரை மாதத் தொடக்கமே உங்களுக்கு சிறப்பாக இருக்கிறது. அத்தனை காரியங்களும் உங்களுக்கு நடைபெற வேண்டுமென்றால் அஷ்டமாதிபதி, மற்றும் ஆறுக்கு அதிபதி வலிமை இழக்க வேண்டும். அந்த அடிப்படையில் இம்மாதத் தொடக்கத்தில் அஷ்டமாதிபதியாக விளங்கும் சனி பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் உங்கள் ராசிநாதன் 5, 10–க்கு அதிபதியான அங்காரகனுடன் கூடி சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

எனவே மங்கல ஓசை மனையில் கேட்கும் வாய்ப்பு உண்டு.   அரசு வழி அனுகூலங்களும் ஆதாயங்களும் கிடைக்கும் விதத்தில் சூரிய பகவானின் சஞ்சாரம் அமைந்துள்ளது. தனாதிபதி உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இம்மாதம் வரவு திருப்திகரமாக இருக்க வேண்டும். வங்கிகளின் கடன் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அதுவும் கைகூட வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு அமைப்பில் சூரியனின் சஞ்சாரம் இருந்தாலும் அதை பகை கிரகமான சனி பார்ப்பதால் பணம் வந்த மறு நிமிடமே செலவாகி விடும். எனவே தொழிலில் வரும் லாபத்தை துணையாக இருப்பவர் களிடம் கொடுத்து வைக்காமல் வங்கிகளிலும் வளர்ச்சி கருதி வைப்பு நிதியாக வைக்காமல், விலை உயர்ந்த பொருள்களை வாங்கி வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவது நல்லது. வாகன மாற்றம் பற்றி இதுவரை சிந்தித்து வந்த நீங்கள் இப்பொழுது தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் இப்பொழுது விருப்ப ஓய்வு பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஓராண்டு கழித்தே அதிலும் குறிப்பாக சனி விலகிய பிறகே ஒரு சில முடிவுகளை எடுக்க வேண்டும். சனி 4–ல் சஞ்சரிக்கும் வரை தொடர்ந்து மாருதி வழிபாடும், சனி பகவான் வழிபாடும் செய்து வருவது நல்லது. வெற்றிலை மாலை, அல்லது வடை மாலை அணிவித்து மாருதியை வழிபாடு செய்யலாம். அப்பொழுது தான் உற்றார், உறவினர்களின் பகை மாறும். ஒத்துழைப்பு செய்யும் நண்பர்களின் எண்ணிக்கை உயரும்.

சர்ப்ப கிரகத்தின் ஆதிக்கமும் கூடுதலாக இருப்பதால் ராகு–கேது பிரீதிகள் மற்றும் சர்ப்ப சாந்திகளை செய்வது நல்லது. மாதக்கடைசியில் செவ்வாயின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு வசந்த காலம் உருவாக வழி பிறக்கும்.

மேஷ புதனும், ரிஷப புதனும்!

உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அந்த நிகழ்வு மாதத்தின் தொடக்க நாளிலேயே நடைபெறுகிறது. எனவே இந்த மேஷ புதனின் ஆதிக்கத்தால் தொழில் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். பங்குதாரர்களுடன் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழியில் கூட்டுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படும்.

புதன் முதல் தேதியன்று ரிஷபத்தில் சஞ்சரிப்பதால் சில நல்ல மாற்றங்கள் உருவாகும். அந்நிய தேசத்திலிருந்து அழைப்புகள் வந்து அலைமோதும். புண்ணிய நிகழ்ச்சிகளுக்காக கொடுத்து உதவுவீர்கள். லாப ஸ்தானத்தில் சகாய, விரய ஸ்தானாதிபதி சஞ்சரிப்பதால் குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்க முன்வருவீர்கள். வீடு கட்டும் வாய்ப்பில் இருந்த தடைகள் அகலும்.

மீன சுக்ரனின் சஞ்சாரம்!

ஏப்ரல் 28–ம் தேதி சுக்ரன் மீன ராசியில் உச்சம் பெறப்போகிறார். இதன் விளைவாக இட மாற்றம், ஊர் மாற்றம், இலாகா மாற்றங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். சுக்ர மங்கள யோகம் செயல்படும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். சொத்துப் பத்திரங்களைப் பதிவு செய்யும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் குணமறிந்து செயல்படுவதன் மூலமே மனநிம்மதி பெறலாம். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும்.

இம்மாதம் ஆறுமுகப் பெருமான் வழிபாடு ஆனந்தம் வழங்கும்.

பணத்தேவைகளைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:

ஏப்ரல்: 17, 18, 27, 28, 29 மே: 1, 2, 8, 9, 13, 14

மகிழ்ச்சி தரும் வண்ணம்: ரோஸ்.

பெண்களுக்கான சிறப்பு பலன்கள்

இம்மாதம் குடும்பத்தில் விரயங்கள் கூடும். கொடுக் கல்–வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் வந்த மறுநிமிடமே செலவாகும். தூர தேசத்திலிருந்து வரும் அழைப்பு களை ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா?  என்று சிந்திப்பீர்கள். கணவன்–மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச்  செல்வது நல்லது. ஆரோக்கியக் குறையை சரி செய்ய மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள். குழந்தைகளைக் கண்காணித்துக் கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். மாமன், வழி ஒத்துழைப்போடு மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. விஷ்ணு வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.
 

Tamil Matha Jothidam Term:

Advertisement

Advertisement

Most Read