.
சற்று முன் :
காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி நைனிடாலில் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு
கிரண் பேடியை டெல்லி மாநில முதல்-மந்திரியாக முன்னிறுத்த நிதின் கட்காரி மறுப்பு

Advertisement

‘கொற்கை’ நாவலுக்காக தமிழ் எழுத்தாளர் ஆர்.என்.ஜோ–டி–குரூசுக்கு சாகித்ய அகாடமி விருது

புதுடெல்லி,

‘கொற்கை’ என்ற நாவலை எழுதிய தமிழ் எழுத்தாளர் ஆர்.என்.ஜோ–டி–குரூஸ், உருது கவிஞர் ஜாவீத் அக்தர் உள்பட 22 மொழி எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமி விருது

சாகித்ய அகாடமியின் நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 22 இந்திய மொழிகளில் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு 2013–ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டது.

2009–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை முதல் வெளியீடாக வந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.

ஜோ–டி–குரூஸ்

தமிழ் நாவல்களில் நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த எழுத்தாளரான ஆர்.என்.ஜோ–டி–குரூசுக்கு விருது கிடைத்துள்ளது. இவர் எழுதிய ‘கொற்கை’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

எழுத்தாளர்கள் மிர்துளா கர்க் (இந்தி), சி.என்.ராமச்சந்திரன் (கன்னடம்), சதீஷ் கலாசேகர் (மராத்தி), கத்யாயனி வித்மாஹே (தெலுங்கு), கவிஞர்கள் ஜாவீத் அக்தர் (உருது), எம்.என்.பாலூர் (மலையாளம்) உள்பட 22 பேருக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் பரிசு

விருது பெற்றவர்களுக்கு தாமிர பட்டயமும், பொன்னாடையும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 11–ந் தேதி நடைபெறும் சாகித்ய அகாடமி விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆர்.என்.ஜோ–டி–குரூஸ் எழுதிய ‘கொற்கை’ என்ற நாவல் காலத்தை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். இது கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி, கிறிஸ்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீன காலத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலையுடனும் எழுதப்பட்டுள்ளது.

வரலாற்று ஆவணம்

பலவிதமான நிகழ்வுகளையும், மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும், நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன் மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் இந்த நாவல் திகழ்கிறது.

நூலாசிரியர் எம்.ஏ., எம்.பில். பட்டம் பெற்று சென்னையில் வணிக கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவியும் அந்தோணி டி குரூஸ் என்ற மகனும், ஹோமா டி குரூஸ் என்ற மகளும் உள்ளனர்.

தமிழக அரசு விருது

இவர் 2004–ம் ஆண்டு எழுதிய ‘புலம்பல்கள்’ என்ற கவிதை தொகுப்பு மற்றும் ‘ஆழி சூழ் உலகு’ என்ற நாவலுக்கு விருது கிடைத்துள்ளது. இதுதவிர 2008–ம் ஆண்டு ‘விடியாத பொழுதுகள்’, 2009–ம் ஆண்டு ‘டுவேர்ட்ஸ் டவுன்’, 2010–ம் ஆண்டு ‘எனது சனமே’ ஆகிய ஆவணப்படங்களையும் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

category:

News Group Category:

Advertisement

Advertisement

Most Read