ரஷியாவில் பரிதாபம்! கொரோனாவால் அக்டோபரில் அதிக உயிரிழப்பு..!


ரஷியாவில் பரிதாபம்! கொரோனாவால் அக்டோபரில் அதிக உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 4 Dec 2021 4:43 AM GMT (Updated: 4 Dec 2021 4:43 AM GMT)

ரஷியாவில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 75,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

மாஸ்கோ,

உலக வரலாற்றில், முதல் நாடாக கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை பதிவு செய்து சாதனை படைத்த ரஷியாவில், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 75,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதில் கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 58,822 பேரும்,  கொரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா என்று உறுதி செய்யப்படாத 9,912 பேரும் பலியாகி உள்ளனர்.

இரண்டாம் உலகப்போர் நடைபெற்றதற்கு பின் அதிகம் பேர் உயிரிழந்துள்ள ஆண்டாக இந்த ஆண்டு மாறியுள்ளது. அங்கு கடந்த ஜூலை மாதம் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன, அதனைக் காட்டிலும் 47 சதவீதம் அதிகமாக அக்டோபர் மாதம் இறப்புகள் பதிவாகி உள்ளன.

இதன்மூலம்,கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து இதுவரை, அங்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் ரஷியா உள்ளது. அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பலி எண்ணிக்கையை விட அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்பது இதன்மூலம் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

ரஷியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் தயக்கம் காட்டி வருவதே கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 40 சதவீதம் மக்கள் தான் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

ரஷியாவில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு நடவடிக்கையாக, ரஷிய அதிபர் புதின் ஒரு வாரத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தலைநகர் மாஸ்கோவில் அத்தியாவசியமற்ற சேவைகளுக்கு 11 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரஷியா வருவோர் கண்டிபாக 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் மேற்கொள்ள வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில், ரஷியாவில் 5 லட்சத்து 37 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, அந்நாட்டு அரசின் சார்பில் கொடுக்கப்பட்ட பலி எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story