14.1.2021 முதல் 12.2.2021 வரை
கும்ப ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் 5 கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இதனால் விரயங்கள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும், மறுநிமிடமே செலவாகிவிடும். உறவினர்களை அனுசரித்துச் செல்லுங்கள். ஏழரைச் சனி தொடங்கிவிட்டதால், எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வதே நல்லது.
சுக ஸ்தானத்தில் ராகு
இம்மாதம் 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். இடமாற்றங்கள், வாகன மாற்றங்கள் போன்றவை ஏற்படும் நேரம் இது. 10-ம் இடத்தில் கேது இருப்பதால் பணிபுரியும் இடத்தில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். சகப் பணியாளர்களின் அனுசரிப்பு குறையலாம். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.
கூட்டுக் கிரகங்கள்
இம்மாத தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் சந்திரன், சூரியன், குரு, புதன், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் சேர்க்கை பெற்றுள்ளன. இதனால் திடீர் மாற்றங்கள் ஏற்படலாம். பல வழிகளிலும் விரயங்கள் சூழ்ந்து கொள்ளும். வேலைப்பளு அதிகரிக்கும். யாரை நம்பியும் செயல்பட முடியாது. மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். பிள்ளைகளால் பிரச்சினைகள் உருவாகலாம். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். சனி- சூரிய சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. தந்தை, மகன் விரோதம் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கடன் சுமை உருவாகலாம். சேமிக்க இயலாது.
மகர - புதன் சஞ்சாரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை, மகரத்தில் சஞ்சரிக்கும் புதன் வக்ரம் பெறுகிறார். இதனால் பூர்வீக சொத்துக்களில் ஒரு பகுதியை விற்க நேரிடலாம். சகோதரர்களின் அரவணைப்பு குறையும். தொழிலில் யாரையும் நம்பி செயல்பட இயலாது. ‘சேமிப்பு கரைகிறதே’ என்று கவலைப்படுவீர்கள். வியாபாரப் போட்டிகள் அதிகரிக்கும்.
மகர - குருவின் சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், சனி பகவானோடு இணைந்து ‘நீச்ச பங்க ராஜயோகம்’ அடைகிறார். மேலும் ஜனவரி 22-ந் தேதி அஸ்தமனமாகி வலிமை இழக்கிறார். இதனால் பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். மனக்குழப்பம் வந்துசேரும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இக்காலத்தில் ஓரளவு நல்ல மாற்றங்கள் உருவாகும். வருமானம் திருப்தி தரும். வாகன யோகம் உண்டு. தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் வழிபட்டு வருவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 18, 19, 20, 24, 25, பிப்ரவரி: 3, 4, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இட மாற்றம் உருவாகும். கணவன் - மனைவி விட்டுக்கொடுத்து சென்றால் விருப்பங்கள் நிறைவேறும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வரலாம். சுப காரிய பேச்சுக்கள் முடிவாகும். சகோதர வர்க்கத்தினரின் அனுகூலம் உண்டு. தாய், தந்தையரின் ஆதரவும் திருப்தி தரும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். வராஹி வழிபாடு நன்மை தரும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
நல்ல மாற்றங்கள் இல்லம் தேடி வரும்
(அவிட்டம்,3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)
கும்ப ராசி நேயர்களே! புத்தாண்டின் தொடக்கம் ஏழரைச் சனியின் தொடக்கமாகவே அமைகின்றது. முதல் கட்டமாக விரயச்சனி இப்பொழுது தொடங்குகின்றது. அதே நேரத்தில் உங்கள் ராசிக்கு தன-லாபாதிபதியான குரு பகவான், விரய ஸ்தானத்திலேயே இருக்கின்றார். எனவே இந்தப் புத்தாண்டில் விரயங்கள் அதிகரிக்கலாம். இருப்பினும் சனி உங்கள் ராசிநாதன் என்பதால் வரவில்லாமல் செலவு ஏற்படுத்த மாட்டார். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும். திடீரென நல்ல மாற்றங் களும் வரலாம். வரும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுவதன் மூலமே சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள இயலும். பொதுவாக உங்கள் சுய ஜாதக அடிப்படையில், சனி பகவான் வருவது முதல் சுற்றா, இரண்டாவது சுற்றா, மூன்றாவது சுற்றா என்பதை அறிந்து கொள்ளுங்கள். பொங்குசனி காலமாக இருந்தால் தடைகளும், தாமதங்களும் பெரியளவில் ஏற்படாது.
ஆண்டின் தொடக்கத்தில் குருச்சந்திர யோகமும், நீச்சபங்க ராஜயோகமும் ஏற்படுகின்றது. உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியான சந்திரனை குரு பகவான் பார்ப்பதால் நிதிப்பற்றாக்குறை அகலும். ஒரு சிலருக்கு தொழில் மாற்றங்கள் உறுதியாகலாம். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்து சாதனை நிகழ்த்துவீர்கள்.
புத்தாண்டின் தொடக்க நிலை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதனாகவும், விரய ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சனி, விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கின்றார். அவரோடு குரு இருப்பது ஒரு வழிக்கு நன்மைதான். சனியின் கடுமை குறைய வழிவகுத்துக்கொடுப்பார். உத்தியோகத்தில் இருந்து விலகக்கூடிய சூழ்நிலை வந்தாலும் புதிய உத்தியோகம் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மாற்றம் செய்ய விரும்புவோருக்கு அதுவும் தானாக அமையும்.
லாப ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால், அரசுவழி அனு கூலங்கள் கிடைக்கும். தொழிலை விரிவுசெய்ய அல்லது இடமாற்றங்கள் செய்ய பொருளுதவி தேவைப்பட்டால் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பு மட்டுமல்லாமல், வள்ளல்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்ப ஸ்தானாதிபதி குரு நீச்சம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் ஒருசில பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு பிரச்சினைகளை அணுகு வது நல்லது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். செவ்வாய் மூன்றில் இருப்பதால் உடன்பிறப்புகளால் நன்மை உண்டு. என்றாலும், அடிக்கடி அவர்களின் குணங்களில் மாற்றங்கள் ஏற்படும். சுக ஸ்தானத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் இருக்கின்றார்கள். எனவே தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மகர ராசியில் சஞ்சரிக்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. வாக்கு, தனம், குடும்பம், லாபம் ஆகிய ஆதிபத்யங்களைக் கொண்டவராக விளங்கும் குரு பகவான், இப்பொழுது விரய ஸ்தானத்திற்கு வருகின்றார். எனவே எவ்வளவு பணம் கைக்கு கிடைத்தாலும் அடுத்த நிமிடமே செலவாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களையும் நிறைவேற்ற செலவு செய்து விடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரக்கூடிய இடமாற்றத்தில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் போய் சேருவதற்குள் அங்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதோடு, அனுபவஸ்தர்களையும், அருளாளர்களையும் கலந்து ஆலோசித்து செயல்பட்டால் ஓரளவேனும் வெற்றிகள் கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் குரு விளங்குவதால், பொருளாதாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். என்றாலும் முயற்சி அதிகம் தேவைப்படும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்ற ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்ப முடியாமல் தத்தளிப்பவர்களுக்கு, இப்பொழுது பயணம் அமைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். ‘வாகனங்களில் இருந்த பிரச்சினை அதிகரிக்கின்றதே, எப்பொழுது தான் புதிய வாகனம் வாங்கலாம்’என்று சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது நவீன வாகனங்களை வாங்கி மகிழும் யோகம் உண்டு. செய்யும் தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சியில் மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். தாய்வழி ஆதரவு கிடைக்கும். கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட்டு காரியங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் மேற்படிப்பிற்கோ அல்லது உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் கல்வி விருத்திக்காகவோ எடுத்த முயற்சி கைகூடும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலருக்கு வீடுகட்டி குடியேறும் யோகம் கூட ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை அகல, மாற்று மருத்துவம் கைகொடுக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய மாறுதல் கிடைக்கும்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில், குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமடைகின்றது. வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழிலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் வளர்ச்சி ஏற்படும். வழக்குகள் சாதகமாக முடியும். கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடுவதில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு. அடகுவைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பங்காளிப் பகை மாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும். தன-லாபாதிபதி வலுவிழக்கும் பொழுது எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. கூடுதல் விரயங்களைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பழைய பிரச்சினை மீண்டும் தலைதூக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால் அமைதி கிடைக்கும். பயணங்களால் தொல்லை உண்டு. பணிபுரியும் இடத்தில் உங்கள் மேல் திருப்தி ஏற்படாது. புதிய வேலைக்கு முயற்சித்தாலும் அதில் குறுக்கீடுகள் நிறைய இருக்கும். இளைய சகோதரத்தோடு பிணக்குகள் ஏற்படலாம். இல்லம்தேடி வம்பு வழக்குகள் வரும் என்பதால் எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். விரய ஸ்தானத்தில் வக்ரம் பெறும்பொழுது விரயங்கள் கூடுதலாக இருக்கும். மனச்சஞ்சலங்கள் அதிகரிக்கும். எதையும் திருப்தியாகச் செய்ய இயலாது. தொழில் முன்னேற்றத்தில் எதிரிகளின் குறுக்கீடுகள் அதிகரிக்கும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் சென்று பொருள்தேட நினைப்பவர்களுக்கு, இக்காலத்தில் சிக்கல்களும், சிரமங்களும் அதிகரிக்கும். அலுவலகப் பணியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றவர்களுக்குப் போய்ச் சேரும். பதவி உயர்வு பற்றிய தகவல் பரிசீலனையில் இருக்குமே தவிர நடைமுறையில் வராது. திட்டமிட்ட காரியங்களை வெகு சிரத்தையுடன் செய்தால் வெற்றி கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் வக்ரம் பெறும் இந்த நேரம் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டிய காலமாகும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வீண் விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஒரு காரியத்தை ஒன்றுக்கு இரண்டு முறை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்ள மாட்டார்கள். நாணயப் பாதிப்புகள் ஏற்படலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பம் ஏற்படும். 12-ம் இடத்திற்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால் இடமாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் எளிதில் கிடைக்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரை செவ்வாய்-சனி பார்வைக் காலமாகும். இக்காலத்தில் எதைச் செய்தாலும் அனுபவஸ்தர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்வது நல்லது. வாய்தாக்களும், வழக்குகளும் வந்துகொண்டே இருக்கும். மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக்கொள்ள இயலுமா என்பது சந்தேகம்தான். மக்கள் செல்வங்களால் சில பிரச்சினைகள் உருவாகி மனக்கவலையை கொடுக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலத் தொல்லை வரலாம். அவற்றை ஆரம்பத்திலேயே கவனித்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு. குடும்பப் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். பொதுவாக பல வேலைகளில் தாமதங்கள் ஏற்படும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஒவ்வொரு புதன்கிழமையும் திருமாலையும், திரு மகளையும் வழிபடுவது நல்லது. இல்லத்தில் விநாயகர் படம் வைத்து, கணபதி கவசம் பாடி வழிபட்டால் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் சனி விரய ஸ்தானத்தில் இருப்பதால் அதிக விரயங்கள் ஏற்படும். எதைச் செய்தாலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்க விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தாய்வழி ஆதரவு கிடைக்கும். வீடு, இடம் போன்ற அசையாச் சொத்துக்கள் உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாகலாம். செவ்வாய்- சனி பார்வை காலத்தில் வழிபாடுகள் மூலமே வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள இயலும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஏழரைச் சனிதான் தொடங்கியது! இறைவழிபாட்டால் மகிழ்ச்சி வரும்! கும்ப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 12-ம் இடத்திற்கு வருகின்றார். இப்பொழுது ஏழரைச்சனி உங்களுக்குத் தொடங்குகின்றது. ஏழரைச்சனி என்றவுடன் நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. உங்கள் ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே யோகத்தையும் கொடுப்பார், விரயத்தையும் கொடுப்பார். விரயத்தைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோகம்’ உருவாகின்றது. உங்கள் ராசியைப் பொறுத்தவரை குரு, தன-லாபாதிபதி என்பதால் எந்தச் செயலைச் செய்தாலும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு செய்ய வேண்டுமென்ற நிலை ஏற்படாது.
ஏழரைச்சனி ஆரம்பம்
மிகப்பெரிய கிரகமாகச் சொல்லப்படும் சனி பகவான், உங்களுக்கு இப்பொழுது ஏழரைச்சனியாக வருகிறார். விரயச்சனி இப்பொழுது வந்திருக்கின்றது. இதற்குபிறகு ஜென்மச்சனி, அதன்பிறகு குடும்பச்சனி என்று வரும். பொதுவாக விரயச்சனி காலத்தில் அமைதியாகச் செயல்படுவது நல்லது. யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். தொழிலில் தேக்கநிலையும். தெளிவற்ற மனதுடன் செயல்படும் சூழ்நிலையும் ஏற்படும். உறவினர் களும், நண்பர்களும் செய்த உதவிக்கு நன்றி காட்ட மாட்டார்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவை வருவதற்கான அறிகுறிகள் தென்படும். நினைக்க இயலாத இடத்திற்கு மாறுதல் கிடைக்கலாம்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 2, 6, 9 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், எதிர்ப்பு, வியாதி, கடன், தந்தை வழி உறவு, பாக்கியம், பாகப்பிரிவினை போன்றவற்றைக் குறிக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால் அங்கெல்லாம் புதிய திருப்பங்களும், மாற்றங்களும் வரப்போகின்றது. 2-ம் இடத்தில் சனி பார்வை பதிவதால் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடினாலும் அதைச் சமாளிப்பீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோகத்தில் மாற்றம் உண்டு. தொழிலைப் பொறுத்த வரை புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். எதிரிகள் விலகுவர். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
சனியின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால் பெற்றோர் வழியில் பிணக்குகள் ஏற்பட்டு பிறகு இணக்கம் வரும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வாய்ப்பு உண்டு. கைக்கு கிடைத்த பூர்வீக சொத்தை விற்றுவிட்டு புதிய இடம் வாங்கி மனை கட்ட வேண்டுமென்ற ஆர்வம் கைகூடும். தேவைகள் பூர்த்தியானாலும் கூட சில சமயத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும். மகரத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் சனி உங்கள் ராசிக்கும் அதிபதி என்பதால் அதை வழிபடுவதன் மூலம் வளர்ச்சி அதிகரிக்கும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செய்திகள் அதிகம் வந்து சேரும். தங்களுக்கோ, தங்கள் சகோதரர்களுக்கோ, தங்களின் பிள்ளைக ளுக்கோ கல்யாணம் போன்ற சுபகாரியங்கள், பெற்றோர்களின் பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடும் சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டு ஒப்பந்தங்களும் வரலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடும், உங்களின் மதிநுட்பத்தாலும் மகத்தான பலன்களை வரழைத்துக் கொள்ளும் நேரம் இது.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, மனதில் நினைத்ததை மறு கணமே செய்யும் யோகம் உண்டு. நடக்கும் தொழிலைக் கொடுத்துவிட்டு வேறு தொழிலை செய்ய நண்பர்களின் ஆதரவைக் கேட்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு, ‘வெளிநாடு செல்ல முடியவில்லையே’ என்ற ஆதங்கம் தீரும். திடீரென நிர்வாகம் உங்களை வெளி நாட்டிற்கு அனுப்ப பரிசீலனை செய்வர். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மனக்குழப்பம் அகல அனுபவஸ்தர்கள் ஆலோசனை சொல்வர். பொது நலத் தில் இருப்பவர்கள் வீண் பழிகளுக்கு ஆளாக நேரிடும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சகோதர சச்சரவுகள் அகலும். பத்திரப் பதிவிலிருந்த தடைகள் விலகும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழி காட்டுவர். இக்காலத்தில் சனி பகவானும் உங்கள் ராசியில் சஞ்சரிக்கப் போகின்றார். ஜென்ம சனியாவதால் உடல்நலத்தில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. முன்கோபத்தின் காரணமாகச் சில பாதிப்புகளும், முன்னேற்றத்தில் குறுக்கீடும் ஏற்படும். தொழிலில் பங்குதாரர்களும் விலகிக்கொள்வதாக பயமுறுத்துவர். எதிரிகளின் பலம் கொஞ்சம் அதிகரிக்கும் நேரமிது.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடக்கிறது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியிலேயே தன லாபாதிபதி உலா வருவதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, வாக்கு ஸ்தானம் பலப் படுகின்றது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கேதுவின் ஆதிக்கத்தால், தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்துசேரும். பழைய வாகனத்தை பைசல் செய்து விட்டுப் புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆலயத் திருப்பணிகளிலும் கவனம் செலுத்துவீர்கள்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் சூழ்நிலை அமையும். அஷ்டமத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலக் கோளாறுகள் உருவாகும். பிறருக்கு பணப்பொறுப்பு சொல்லியதன் மூலம் சிக்கல்கள் உருவாகலாம்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானையும், சிவனையும், உமையவளையும் வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் நந்தீஸ்வரர் படம் வைத்து அதற்குரிய பதிகங்கள் பாடி வழிபட்டால் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார்.
இதன் விளைவாக விரயங்கள் அதிகரிக்கும். வீண் பழிகள் வந்து சேரும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் தடை ஏற்படும். ஆரோக்கியப் பாதிப்புகள் உருவாகும். குடும்பப் பெரியவர்களையும், அனுபவஸ்தர்களையும் கலந்து ஆலோசித்து செய்வதன் மூலம் எதிலும் வெற்றி காண இயலும். தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏழரைச்சனியாக தொடங்குகின்றது. எனவே எப்பொழுதும் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. ஆதாயத்தைக் காட்டிலும் விரயம் கூடும். கணவன் - மனைவி ஒற்றுமை திருப்தி தரும். விலகிய சகோதரர்கள் விரும்பி வந்து சேருவர். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் கூடும். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவற்றில் செய்த ஏற்பாடு பலன் தரும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத மாற்றம் வந்து சேரும். உத்தியோகத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கும் சூழ்நிலை உண்டு. பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்தால் பிரச்சினைகள் ஏற்படும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
நான்கில் வருகிறது ராகு..வாழ்வில் வசந்தம் வரும்..
கும்ப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், இப்பொழுது உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு வரப்போகின்றார். அதே போல கேது பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலிருந்து தொழில் ஸ்தானமான 10-ம் இடத்திற்கு அதே நாளில் வரப்போகின்றார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி, உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மகர ராசிக்கு குரு பகவான் செல்கின்றார். அங்கு அவர் நீச்சம்பெறுகின்றார். டிசம்பர் 26-ந் தேதி சனி பகவான் பெயர்ச்சியாகி மகரத்திற்குச் செல்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனி உங்களுக்குத் தொடங்குகின்றது. முதல் சுற்று நடப்பவர்களாக இருந்தாலும், மூன்றாவது சுற்று நடப்பவர்களாக இருந்தாலும் மிக மிக கவனத்துடன் செயல்பட வேண்டும். 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி, குரு பகவான் உங்கள் ராசிக்கு வருகிறார். அங்கிருந்து கொண்டு 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார்.
சுக ஸ்தானத்தில் ராகு! தொழில் ஸ்தானத்தில் கேது!
ராகு இப்பொழுது சஞ்சரிக்கப் போவது 4-ம் இடமாகும். இதை ‘அர்த்தாஷ்டம ராகு’ என்று சொல் வது வழக்கம். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆரோக்கியத் தொல்லைகள் அடிக்கடி தலைதூக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். சிறு தொல்லைகள் உடலில் தோன்றினாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வேலை அமையும்.
தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கூட்டாளிகள் உங் களுக்கு இணக்கமாக நடந்துகொள்வார்களா என்பது சந்தேகம் தான். கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமான கணக்கு வழக்குகளை கச்சிதமாக வைத்துக்கொள்வது நல்லது. பணியாளர் தொல்லை அதிகரிக்கும். பிறரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும்பொழுது உங்களுடைய மேற்பார்வையில் வைத்துக்கொள்ளவும். தொழிலை விரிவுசெய்ய கடன் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும்பொழுது, சகோதரர்களால் சில நன்மைகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடி யும். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முன்னேற்றப் பாதை யில் செல்ல முடிவெடுப்பீர்கள். வங்கிகளில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். ‘நேர்முகத்தேர்வில் வெற்றிபெற்றும், இன்னும் வேலைக்கு வரச்சொல்லி அழைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது நல்ல பதில் கிடைக்கும். மற்றவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குவீர்கள். சொத்து விற்பனையின் மூலம் வரும் தனலாபத்தை ஒரு சிலர் தொழிலுக்கு உபயோகப்படுத்திக் கொள்வர்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
சந்திரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு மாற்றங்கள் உருவாகும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எந்த ஒரு வேலையையும் ‘செய்யலாமா வேண்டாமா?’ என்ற இரட்டித்த சிந்தனை மேலோங்கும். வியாபார நுணுக்கங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. பொதுவாக எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்க வேண்டிய நேரமிது. உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் வரலாம். நீண்ட நாட்களாக நட்பாக இருந்தவர்கள் வாக்குவாதங்கள் செய்ததன் விளைவாகப் பகையாகலாம். விலை உயர்ந்தப் பொருட்கள் அல்லது நிலபுலன்களை ஒருசிலர் விற்க நேரிடும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இக்காலத்தில் யாருடைய பணமாவது உங்கள் கைகளில் புரளும்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கொடுக்கல்-வாங்கல்களால் ஆதாயம் உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவால் அலுவலகப் பணிகள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் குறைகள் தீர வழிவகுப்பீர்கள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வீடுகட்ட அல்லது வாகனங்கள் வாங்க எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடிவரும்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் ‘நிழல்கிரகம்’ என்று வர்ணிக்கப்பட்டாலும், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்நிற்பவர் ஆவார். பாதசார அடிப்படையில் பலன்களை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பகை கிரகத்தின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதற்குரிய பரிகாரங் களையும், வழிபாடுகளையும் செய்து கொண்டால் நற்பலன் கிடைக்கும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது வரவும், செலவும் சமமாக இருக்கும். உங்கள் ராசிக்கு பஞ்சம அஷ்டமாதிபதியானவர் புதன். எனவே பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி சில முக்கிய முடிவெடுப்பீர்கள். அவர்களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, பணியில் சேர்வது சம்பந்தமாகவோ நீங்கள் செய்யும் முயற்சி பலன்தரும். மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணியில் இருப்பவர்களுக்கு நிரந்தரப் பணி அமையும். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேலையை முடிக்க ஒன்று இரண்டு முறை அலைய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு ராசிநாதனாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். எனவே இக்காலத்தில் குடும்பத்தில் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். முயற்சிக்குரிய பலன் முழுமையாகக் கிடைக்கும். அரைகுறையாக நின்ற பணிகள் விரைவில் முடிவடையும். இழப்புகளைத் தவிர்க்க எச்சரிக்கையோடு செயல்படுவீர்கள். ஒதுங்கி நின்ற ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். உயர்அதிகாரிகளுடன் ஏற்பட்ட உட்பூசல் மாறும். உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவராதவர்களை விட்டு விலகுவீர்கள். வீடுமாற்றங்கள், இடமாற்றங்கள் விருப்பம்போல் அமையும். அதிரடியாக முடிவெடுத்து அருகில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு, உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். தன லாபாதிபதியான குருவின் சாரத்தில், தொழில் ஸ்தானத்தில் வீற்றிருக்கும் கேது உலா வரும்பொழுது தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி காண்பீர்கள். வி.ஐ.பி.க்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
நான்காமிடத்து ராகுவால் நன்மைகள் கிடைக்கவும், 10-ம் இடத்து கேதுவால் தொழில் முன்னேற்றம் காணவும், சனிக்கிழமை தோறும் விரதமிருந்து அனுமன் கவசம் பாடி வழிபடுங்கள். நிலைமை சீரான பிறகு, வாலில் மணிகட்டிய ஜெய ஆஞ்சநேயர் அருள் வழங்கும் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.
பெண்களுக்கு...
ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். அர்த்தாஷ்டம ராகுவால் விரயங்கள் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஏழரைச்சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் தடைகளும், தாமதங்களும் வரலாம். உறவினர்களையும், உடன்பிறப்புகளையும் அனுசரித்துக் கொள்வது நல்லது. மூட்டுவலி, முழங்கால் வலி போன்றவை வந்து போகும். இல்லத்து பூஜையறையில் வராகி அம்மன் பாமாலை பாடி வழிபடுவது நல்லது.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
பனிரெண்டாமிடத்தில் குரு பகவான், பண விரயங்கள் அதிகரிக்கும்!
கும்ப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 12-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 12-ம் இடம் என்பது அயன சயன ஸ்தானமாகும். அதுமட்டுமல்லாமல் பயணங்களையும், விரயங்களையும் குறிக்கும் இடமாகும். அந்த இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். குடும்பச்சுமை கொஞ்சம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. தொழில் சிறப்பாக இருந்தாலும் சேமிக்க இயலாத நிலை உருவாகலாம். உத்தியோகத்தில் திடீரென ஊர் மாற்றம் வந்து மனதை வாட வைக்கலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்ப முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம். பொறுமையும், நிதானமும் தேவைப்படும் நேரமிது. சுய ஜாதகம் பலம்பெற்று இருப்பவர்கள் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிக்கொள்ள இயலும். இடையில் சில மாதங்கள் உங்கள் ராசிக்குள் குரு வருகின்றார். வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். தொடர்ந்து குரு வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக் கொள்ளலாம்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 4-ம் இடத்தில் பதிவதால் தாய்வழி ஆதரவு கிடைக்கும். தொழில், முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். உறவினர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடல் தாண்டிச் சென்று பணிபுரிய வேண்டுமென்று விரும்பியவர்களுக்கு, அது கைகூடுவதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், வீடு வாங்குவது அல்லது விற்பது, பழைய வாகனத்தைக்கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்குவது சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சியும் கைகூடும்.
குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் ஜீவன ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். சிறு தொல்லைகள் வந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. உத்தியோகத்தில் பணிநிரந்தரம் ஆகாதவர்களுக்கு இப்பொழுது பணிநிரந்தரம் ஆகலாம். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். வாங்கிய கடனில் ஓரளவேனும் கொடுக்கக்கூடிய விதத்தில் பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத் துணையின் மூலம் வருமானம் வரலாம்.
குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால் ஆயுள் ஸ்தானம் பலப்படுகின்றது. ஆரோக்கியத் தொல்லை அகலும். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட குறுக்கீடு சக்திகள் அகலும். குடும்பத்தில் சுபச்சடங்குகள், கல்யாணம் போன்ற காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வீர்கள். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைக்கலாம்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு சூரியன் சப்தமாதிபதி ஆவார். அதாவது களத்திர ஸ்தானதிபதி. அவரது சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் அகலும். சுபச்செய்திகள் வந்த வண்ணமாகவே இருக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிகழ்காலத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகிவிடும். கொடுக்கல் - வாங்கல்களில் பெரிய தொகை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு வேலை சம்பந்தமாக முயற்சி செய்திருந்தால் அது கைகூடும். தொழில் போட்டிகளைச் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம்(5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு ஆறாமிடத்திற்கு அதிபதியானவர், சந்திரன். எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றைக் குறிக்குமிடத்திற்கு அதிபதியாவார். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உடல்நலத்தில் மிகுந்த கவனம் தேவை. குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ள வேண்டாம். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கோ, உங்கள் உடன்பிறப்புகளுக்கோ மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். அதிகாரப் பதவியில் உள்ளவர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம். வீண் விரோதங்களை வளர்த்துக்கொள்வதன் மூலமும், மற்றவர்களை விமர்சிப்பதன் மூலமும் பிரச்சினைகள் அதிகரிக்கும். எதையும் எதிர்நீச்சல் போட்டு வெற்றிகாண வேண்டிய நேரமிது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். எனவே உங்களுக்கு கிடைக்கக்கூடிய சலுகைகள் கூட தாமதப்படலாம். இக்காலத்தில் நேர்மறை எண்ணங்களையே சிந்திப்பது நல்லது.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். வழிகாட்டும் அனுபவஸ்தர்கள் வாயிலாக வாழ்க்கைத் தேவகைளைப் பூர்த்தி செய்துகொள்வீர்கள். முன்கோபத்தின் காரணமாக சில முன்னேற்றப் பாதிப்புகள் வந்தாலும் கூட சமாளித்து விடுவீர்கள். அசையாச் சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரப் போட்டிகள் அதிகரித்தாலும் கூட அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். ‘கட்டிய வீட்டைப் பழுதுபார்க்க அல்லது விரிவு செய்ய கையில் பணம் இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, வரவேண்டிய இடத்திலிருந்து பணம் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் ‘வி.ஆர்.எஸ் பெற்றுக் கொள்ளலாமா?’ என்று சிந்திப்பர்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில்செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியான உங்கள் ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். ஜென்ம குருவாக இருந்தாலும் நன்மைகள் அதிகம் செய்யும். தனலாபாதிபதியான குரு ராசியில் உலா வரும்பொழுது, வருமானம் போதுமானதாக இருக்கும். தெய்வீகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியங்கள் கைகூடும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் உடல்நலம் சீராகும். பிள்ளைகளின் வாழ்க்கை சீராக வழிகாட்டுவீர்கள். பெற்றோர்களின் பிறந்தநாள் விழாக்கள், பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், உடன்பிறப்புகளின் திருமணம், கட்டிடம் கட்டும் முயற்சி, கடைதிறப்பு விழாக்கள் போன்ற நல்ல காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். இருப்பினும் அவற்றை முறியடித்து வெற்றிகாண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பயணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். மகரம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் மிகமிக கவனம் தேவை. பணத்தட்டுப்பாடுகள் அதிகரிக்கும். வாங்கல், கொடுக்கல்கள் ஸ்தம்பித்து நிற்கும். ‘வாங்கியதைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்ததை வாங்க முடியவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் ‘சொந்த ஊர் திரும்ப முடியவில்லையே’ என்று கவலைப்படுவர். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். விரயங்கள் கூடுதலாக இருக்கும். நல்ல சந்தர்ப்பங்கள் இருந்தும் அதை உபயோகப்படுத்திக்கொள்ள இயலாது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்துப் பூஜை அறையில் சனிக்கிழமை தோறும் அனுமன் கவசம் பாடி வழிபடுவது நல்லது. பவுர்ணமி விரதமிருந்து மால்மருகனை வழிபடுவதன் மூலம் மகத்தான பலன்களைப் பெறலாம். குலதெய்வ வழிபாடு, குரு வழிபாடு நன்மை தரும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு, குடும்பச்சுமை அதிகரிக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் விரயங்களே கூடுதலாக இருக்கும். உடல்நலனில் அதிக கவனம் தேவை. கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்களால் ஓரளவேனும் நன்மை கிட்டும். உங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றிதரும். உங்களின் முன்னேற்றத்தைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். இடமாற்றம், உத்தியோக மாற்றங்கள் கூட எதிர்பாராத விதத்தில் வரலாம்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/18/2021 12:24:23 AM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Aquarius