பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
9.4.2021 முதல் 15.4.2021 வரை
உத்தியோகத்தில் உள்ளவர்கள், பணியில் கவனமாக இல்லாவிட்டால் மேலதிகாரி களின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். தொழிலில் வருமானம் இருக்கும். குடும்பத்தில் மனவேறுபாடுகள் நீங்குவதால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடன்கள் தொல்லை தராது. தூரத்து உற வினர்களின் திடீர் வருகையால் செலவு உண்டு. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டு வாருங்கள்.
பங்குனி மாத ராசிபலன்கள் 14.3.2021 முதல் 13.4.2021 வரை
துலாம் ராசி அன்பர்களே!
சார்வரி வருடம் பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் 5-ம் இடத்தில் புதனுடன் இணைந்திருக்கின்றார். விரயாதிபதி புதன் என்பதால் விரயத்திற்கேற்ற பணம் வந்து கொண்டேயிருக்கும்.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
மார்ச் 18-ந் தேதி, உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகின்றார். மீனத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனால் மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கப் போகின்றது. சுக்ரனுக்கு மீன ராசி உச்ச வீடாகும். எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் வெற்றிநடைபோடும். கடன் சுமை குறையும். தந்தை வழி ஆதரவும் உண்டு. பூர்வீக சொத்துக்களில் பிரிவினை சம்பந்தமாக ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பங்காளிப் பகை மாறும். ‘பார்க்கும் தொழிலை விரிவு செய்யலாமா?’ என்று நினைப்பீர்கள். அடகுவைத்த நகைகளை மீட்பீர்கள்.
மீன புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி, மீன ராசிக்கு புதன் செல்கின்றார். அது அவருக்கு நீச்ச வீடாகும். 12-க்கு அதிபதி நீச்சம் பெறுவது யோகம்தான். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்பர். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீா் தனவரவு உண்டு. தொழிலில் புதிய பங்குதாரா்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். சம்பள உயர்வு திருப்தி தரும்.
கும்ப புதன் சஞ்சாரம்
ஏப்ரல் 5-ந் தேதி குரு பகவான், கும்ப ராசிக்கு அதிசாரமாகச் செல்கின்றார். இதன் விளைவாக அவரது பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே ஆரோக்கியம் சீராகும். வசதி வாய்ப்புகள் பெருகும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும். புனிதப் பயணங்கள் உருவாகும். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். வெளிநாட்டில் வசிக்கும் உறவினர்களின் ஆதரவு உண்டு.
மேஷத்தில் புதன், சுக்ரன் சஞ்சாரம்
ஏப்ரல் 10-ந் தேதி மேஷ ராசிக்குப் புதன் செல்கின்றார். அதேபோல் ஏப்ரல் 11-ந் தேதி சுக்ரனும் அங்கு வருகிறார். இரண்டும் ஒன்று சேரும்பொழுது, ‘புத சுக்ர யோகம்’ உருவாகின்றது. புதன் உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். அவர் ராசிநாதன் சுக்ரனோடு சேரும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். தொழில் முன்னேற்றம் உண்டு. தடைபட்டு வந்த திருமணம் நடைபெறும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
மிதுன செவ்வாய் சஞ்சாரம்
ஏப்ரல் 13-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்தில் இருந்து விலகுவது நன்மைதான். இப்பொழுது பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். சொத்துக்கள், வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. தந்தை வழி உறவிற்கு தடை விதித்தவர்கள் தானாக விலகுவர். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 21, 23, 26, 27, ஏப்ரல்: 1, 2, 3, 8, 9, 10மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ராகு-கேதுக்களின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால், ஏற்றமும் - இறக்கமும் கலந்த வாழ்க்கையே அமையும். வரவுக்கு பின்னாலேயே செலவு நிற்கும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். மருத்துவச் செலவும் உண்டு. கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். தாய் வழி ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். பணிபுரியும் பெண்களுக்கு திருப்தி இல்லாத இடமாற்றம் உண்டு.
14.4.2021 முதல் 13.4.2022 வரை
துலாம்
விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)
துலாம் ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கத்தோடும், அஷ்டமத்தில் ராகு, செவ்வாய் சோ்க்கையோடும், இரண்டில் கேதுவின் சஞ்சாரத்தோடும் பிறப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இடமாற்றங்களும் தானாக வந்து சேரும். தடைகளையும், தாமதங்களையும் தகர்த்து எறிய வேண்டுமானால் அவ்வப்போது திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுங்கள். ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், புதனோடும், சூரியனோடும் இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். புத-சுக்ர யோகம், புத -ஆதித்ய யோகம் ஆகியவற்றோடு, செவ்வாய், சுக்ரன் பரிவர்த்தனை யோகமும் பெற்றிருக்கின்றது. அஷ்டமாதிபதி பரிவா்த்தனை பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எதிரிகளை நம்பி ஏமாறும் சூழ்நிலையும், தொழிலில் இழப்புகளும் ஏற்படலாம். வரவைக் காட்டிலும் செலவு இருமடங்காகும். ‘வாங்கிய சொத்தை விற்க நேரிடுகிறதே’ என்று கவலைப்படுவீர்கள். முன்னேற்றத்தில் குறுக்கீடு சக்திகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
2-ல் கேது இருப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஆரோக்கியத் தொல்லைகளும், வைத்தியச் செலவுகளும் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். சென்ற ஆண்டில் சேமித்த சேமிப்புகள் இப்பொழுது கரையத் தொடங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் பணியாளர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்கள் பக்கபலமாக இருப்பது அரிது.
5-ல் குரு சஞ்சரிப்பதால் அதன் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. ‘ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமான குருவின் பார்வை பலன் தருமா?’ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பதற்கு ஏற்ப, ஓரளவாவது தீமைக்கு நடுவில் நன்மை உருவாகும். மேலும் புத்திரகாரகன் குரு புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, படிப்பிற்கேற்ற வேலை சம்பந்தமாகவோ நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். ‘எண்ணற்ற வரன்கள் வந்தும் இதுவரை ஒன்றும் முடிவடையவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்போது திருமண வாய்ப்பு கைகூடும்.
அா்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் சுக ஸ்தானம் பலமிழக்கின்றது. எனவே ஆரோக்கியத்தில் தொல்லைகள் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்த வேண்டும். எந்த வேலையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பிறரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் பொழுதோ, பொறுப்புச் சொல்லி தொகை வாங்கிக் கொடுக்கும் பொழுதோ ஒருகணம் சிந்திப்பது நல்லது.
குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். மீண்டும் 14.9.2021 முதல் 12.10.2021 வரை மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குருபகவான். அவர் வக்ரம் பெறுவது யோகம்தான். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். சகோதரர்கள் உங்கள் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக முடியும்.
குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குருபகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன்பிறகு 13.4.2022-ல் மீன ராசிக்குப் பெயா்ச்சியாகி செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும்பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகின்றது. எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உற்சாகத்துடன் பணிபுரிந்து உழைப்பால் உயர்வீர்கள். நல்ல இடமாற்றம், பணி மாற்றம் ஏற்படுவதோடு நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பேட்டி கொடுக்கும் அளவிற்கு பெரிய நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 6-ம் இடத்தில் குரு வருவதால் மீண்டும் பழைய பிரச்சினை தலைதூக்கலாம். நட்பு பகையாகும். இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி குறையலாம். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. முக்கியப் பிரமுகர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ஜென்மத்தில் கேதுவும், 7-ம் இடத்திற்கு ராகுவும் வருகிறார்கள். எனவே சர்ப்ப தோஷத்தின் ஆதிக்கத்தில் உங்கள் ராசி அமைகின்றது. ஏற்றமும், இறக்கமும் கலந்த வாழ்க்கையே அமையும். வரவைக் காட்டிலும், செலவு அதிகரிக்கலாம். ஒருதொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை வந்து சேரும். வாய்ப்புகளில் ஒன்று இரண்டு கைநழுவிப் போகலாம். தொழில் கூட்டாளிகளிடம் கொஞ்சம் விழிப்புணா்ச்சியோடு இருப்பது நல்லது. பயணங்களால் இடையூறுகள் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். முறையாக சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் முன்னேற்றத்திலுள்ள இடையூறுகள் அகலும்.
ஜென்ம கேதுவால் இடமாற்றம், ஊா்மாற்றம், வீடுமாற்றங்கள் வரலாம். இல்லத்தில் உள்ளவர்களின் அனுசரிப்பு குறையும். தொழில் ரீதியாக நீங்கள் எடுத்த முயற்சி, பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாக பாதியிலேயே நின்று போகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எதையும் யோசித்து முடிவெடுப்பது நல்லது. இன்னல்கள் அனைத்தும் விலக ஒவ்வொரு வாரமும் நவக்கிரகத்தில் உள்ள கேது பகவானை நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் ஓரளவு நன்மை கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. சுகஸ்தானம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான இவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் இழுபறி நிலையில் இருக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் மாற்றங்கள் பலவற்றையும் சந்திக்க நேரிடும். விரயங்கள் கூடும். வீண் பிரச்சினைகள் பலவற்றையும் எதிர்கொள்ளும் சூழ்நிலை உண்டு. சனி பகவான் வழிபாடு உங்கள் சஞ்சலங்களைத் தீர்க்கும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 21.7.2021 வரை மற்றும் 26.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் - சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் சகோதர ஒற்றுமை குறையும். வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஊா் மாற்றங்களும், வீடு மாற்றங்களும் திருப்தி அளிக்காது. பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையால் பிரச்சினைகள் ஏற்படும். அரைகுறையாக பல பணிகள் நிற்கலாம். பிறரிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகலாம். எதையும் யோசித்துச் செய்வதன் மூலமே காரியங்களில் வெற்றி காண இயலும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு அதிக விரயங்களைச் சந்திக்கும் ஆண்டாக அமைகின்றது. மனக்குழப்பம் அதிகரிக்கும். உறவினர்களின் பகையால் ஒருசில நல்ல காரியங்கள் தடைபடலாம். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளாலும், தொல்லைகள் ஏற்படலாம். பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவு, சென்ற ஆண்டைக் காட்டிலும் கொஞ்சம் குறைவாகவே கிடைக்கும். தன்னம்பிக்கையைத் தளர விட வேண்டாம். பணிபுரியும் இடத்தில் பக்கத்தில் இருப்பவர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். சனீஸ்வரர் வழிபாடு சந்தோஷம் வழங்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்த ஆண்டு முழுவதும் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவதோடு, மூலம் நட்சத்திரம் வரும் நாளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும். தகுந்த பலன் கிடைக்கும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
நான்காமிடத்தில் சனி, நல்ல விரயங்கள் இனி! துலாம் ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று நான்காமிடத்திற்கு செல்கின்றார். இதை ‘அர்த்தாஷ்டமச்சனி’ என்று சொல்வது வழக்கம். அஷ்டமத்துச் சனி நடைபெறும் பொழுது, ஏற்படும் கெடுபலன்களில் சரிபாதி அளவு இக்காலத்தில் உருவாகும் என்பர். ஆனால் உங்கள் ராசிக்கான அதிபதி சுக்ரன், சனி பகவானுக்கு நட்பு கிரகமாவார். எனவே பெரிய அளவில் கெடுபலன்களைக் கொடுக்கமாட்டார். மேலும் கும்பம் அவருக்குச் சொந்த வீடு. உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், சுக ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கப் போவதால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவான் சேர்வதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது. எனவே குடும்ப முன்னேற்றம் கூடும். சுகாரியப் பேச்சுக்கள் முடிவிற்கு வரும்.
தேவைக்கேற்ற பணம் வரும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப்போகின்றார். இது தாய், சுகம், கல்வி விருத்தி, வீடு, இடம், வாகனம் போன்றவற்றைக் குறிப்பதாகும். அந்த இடத்தில் அடியெடுத்து வைக்கும் சனி பகவான் நல்ல பலன்களை வழங்குவார். மகர ராசி அவருக்கு சொந்த வீடாகும். ஆயுள்காரகன் என்று சனியை வர்ணிப்பதால், உங்களுக்கும், உங்கள் தாய்க்கும், உடன்பிறப்புகளுக்கும், உடன் இருப்பவர்களுக்கும் உடல்நிலையில் சிறுசிறு தொல்லைகள் வந்து விலகும். பொருளாதாரத்தில் தேவைக்கேற்ற பணம் வரும். எதிலும் கூட்டு முயற்சி உகந்தது. கல்வி, கட்டிடப்பணி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடிவரும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியையும் 6, 10 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். உடல் ஆரோக்கியம், செயல்திறன், கவுரவம், எதிர்ப்பு, வியாதி, கடன் சுமை, மனக்குழப்பம், பங்காளிப் பகை, தைரியம், தொழில், ஜீவனம், அரசுப்பணி, வணிகம், போன்றவற்றை எடுத்துரைக்கும் இடங்களில் எல்லாம் சனியின் பார்வை பதிவதால், அதற்கு ஏற்ப பலன்கள் உங்களுக்கு வந்து சேரும். குறிப்பாக உங்கள் ராசியைச் சனி பார்ப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் மிகவும் கவனம் தேவை. அலைச்சலை குறைத்துக்கொள்ளுங்கள்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால், உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் வாக்குவாதங்கள் வந்து அலைமோதும். இருப்பினும் சனி உங்கள் ராசிநாதனுக்கு நட்பு கிரகம் என்பதால் கடைசியில் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். ‘உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே’ என்று ஒருசிலர், உத்தியோக மாற்றத்திற்கு ஏற்பாடு செய்யலாம். விருப்ப ஓய்வு பெற்று வெளிவந்து கூட்டுமுயற்சியில் சுயதொழில் தொடங்கவும் வாய்ப்புகள் கைகூடி வரும். கூட்டாளிகள் ஜாதகத்தில் சஷ்டாஷ்டம தோஷம் இல்லாமல் இருப்பதை கவனித்துக் கொள்வது நல்லது.
சனியின் பார்வை பத்தாமிடத்தில் பதிவதால் தொழில் ஸ்தானம் புனிதமடைகின்றது. பழைய தொழிலில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். சூரியன் உங்களுக்கு லாபாதிபதியாகவும் விளங்குவதால் தொழில் சீராகவும், சிறப்பாகவும் நடைபெறும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபகாரியங்கள் மிகவிரைவில் முடியும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதி என்பதால், குடும்ப ஒற்றுமை பலப்படும். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். ‘வீடு கட்டி வைத்தும் வாடகைக்கு ஆள் வரவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, நல்ல தகவல் வரப்போகின்றது. இக்காலத்தில் சனியும் கும்ப ராசிக்கு வருகின்றார். பஞ்சம ஸ்தானம் புனிதமடைவதால் நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறையவே நடை பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்பதவி எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, 5-ம் இடத்திற்கு குரு வருகின்றார். அப்பொழுது குரு உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘ஆறில் குரு ஊரில் பகை’ என்பதால் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் வந்து சேரும். குருவின் நேரடிப்பார்வை பதிவதால் தொட்டது துலங்கும், தொல்லைகள் அகலும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சிக்காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். ஜென்மத்தில் கேதுவும், 7-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சப்தம ராகுவின் ஆதிக்கத்தால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைந்த ராகுவால் நிறைந்த பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், சலுகைகளும் கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்து பூஜை அறையில் பஞ்சமுக அனுமன் படம் வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபடுவது நல்லது. ராமதூதன் வழிபாடு சேமிப்பை உயர்த்தும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். இக்காலத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். வீண் பழிகள் ஏற்படும். குடும்பப் பிரச்சினைகள் தலைதூக்கும். கொடுக்கல் - வாங்கல்களில் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். பிள்ளைகளாலும் பிரச்சினைகள் உருவாகலாம். இல்லம் கட்டுவதில் தடை ஏற்படலாம். எதையும் துணிந்து செய்ய இயலாது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய பெயர்ச்சியாகும். அதிக விரயத்தைச் சந்திக்கும் பெயர்ச்சியாகவும் அமையப் போகின்றது. தன்னம்பிக்கை, தைரியம், தளராத உழைப்பு ஆகிய மூன்றும் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். தாய் மற்றும் சகோதரர்களையும் அனுசரித்துச் செல்வதன் மூலமே ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் வழியிலும் விரயம் உண்டு. கடன் பிரச்சினை ஏற்படாமல் இருக்க சிக்கனத்தைக் கையாளுங்கள். பணிபுரியும் பெண்கள் கொடுத்த வேலையை முறையாகச் செய்தால் நல்ல பெயர் எடுக்கலாம். பிறரிடம் ஒப்படைத்தால் பிரச்சினைகள் உருவாகும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
எட்டில் வருகிறது ராகு..எதிலும் இனி கவனம் தேவை..
துலாம் ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், செப்டம்பர் 1-ந் தேதியன்று உங்கள் ராசிக்கு 8-ம் இடத்திற்கு வரப்போகின்றார். அதே நாளில் கேது பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலிருந்து 2-ம் இடமான வாக்கு, தனம், குடும்பம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு வரப்போகின்றார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுகின்றார். டிசம்பர் 26-ந் தேதி சனி, பெயர்ச்சியாகி மகர ராசிக்குச் செல்கின்றார். இக்காலத்தில் அர்த்தாஷ்டமச்சனி யின் ஆதிக்கம் வருகின்றது. 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி குரு, கும்ப ராசிக்குச் செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்க்கின்றார். அதுமட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கின்றார். இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டும், உங்கள் சுய ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் பலமறிந்து செயல்படுவதன் மூலமும் வெற்றிக் கனியை எட்டிப்பிடிக்கலாம். கிரகங் களின் சஞ்சாரம் பலமிழந்திருக்கும் பொழுது, பரிகாரங்களும், வழிபாடுகளும் ஓரளவு கைகொடுக்கும்.
அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் ராகு
தனவரவைத் தரும் கேது
ராகு, இப்பொழுது சஞ்சரிக்கப்போவது எட்டாமிடமாகும். ‘அஷ்டமத்தில் சஞ்சரிக்கப் போகின்றாரே’ என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். ‘மறைந்த ராகுவால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்’ என்பது பழமொழி. மேலும் மகரத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் குருவின் பார்வையில் ராகு இருப்பதால் பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது. விரயம் வந்தாலும் வருவதற்கு முன்னதாகவே வரவு வந்து விடும். இதுபோன்ற சமயங்களில் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ளலாம். புதிய கூட்டாளிகளை இணைத்து தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்க கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. யாருக்கேனும் வாக்குறுதி கொடுத்தால் அதைப் பிரயாசை எடுத்துதான் காப்பாற்ற இயலும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனம். நீங்கள் செய்யும் பொறுப்பான பணி களை மற்றவர்களிடம் ஒப்படைத்தால் முறையாக நிறைவேறாது. எதிலும் கொஞ்சம் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய நேரமிது.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். பொருளதாரப் பற்றாக்குறை அகலும். பூமி வாங்கும் யோகம் முதல் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் வரை ஒருசிலருக்கு அமையும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். நெருக்கமான உறவினர்கள் உங்கள் பணிக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொடுப்பர். பழுதடைந்த வீட்டை சீர்படுத்தும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
சந்திரன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணியாளர் தொல்லை அகலும். முயற்சிகளில் இருந்த இடையூறுகள் அகலும். எதிர்நீச்சல் போட்டு இதுவரை காரியம் சாதித்த நீங்கள் இனி எளிய முறையில் காரியம் சாதிப்பீர்கள். மனக்கவலைகள் அகல உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். அரசு சார்ந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கலாம். வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்். சந்திரன் சாரத்தில் ராகு செல்வதால் இக்காலத்தில் நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது நல்லது.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார விருத்தி அதிகரிக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்ய வழிபிறக்கும். இளைய சகோதரத்துடன் இணக்கம் ஏற்படும். எதிர்பார்த்த சில காரியங்களில் இதுவரை இருந்த தடை அகலும். குறிப்பாக பணி நிரந்தரம் பற்றிய நல்ல செய்தி வரலாம். ‘வேலைக்கு உரிய சம்பளம் கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து அதன் மூலம் உதிரி வருமானங்களும் வந்து சேரும்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் ‘நிழல் கிரகம்’ என்று வர்ணிக்கப்பட்டாலும், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்நிற்பவர் ஆவார். பாதசார அடிப்படையில் பலன்களை அறிந்துகொண்டு செயல்படுவது நல்லது. பகை கிரகத்தின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, அதற்குரிய பரிகாரங் களையும், வழிபாடுகளையும் செய்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது வரவும், செலவும் சமமாக இருக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். ‘வருமானப் பற்றாக்குறை அகல என்ன செய்யலாம்?’ என்று யோசிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் பாகப்பிரி வினை சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும். ஒத்து வராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்துவருவர். இடமாற்றங்கள் இப்பொழுது எதிர்பார்த்த விதத்தில் அமை யும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை உட்கொள்ள வேண்டாம். பங்காளிப் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடியே அதிகப்பொறுப்புகள் வந்து ஆச்சரியப்பட வைக்கும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 4, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார் சனி பகவான். அவரது சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார ரீதியாக வந்த நெருக்கடிகள் அகலும். குடும்ப வருமானம் கூடுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், வேலைவாய்ப்பு போன்றவை சிறப்பாக இருக்கும். ‘வாங்கிய சொத்தை விற்றுவிட்டோமே’ என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவர். கடமையில் இருந்த தொய்வு அகலும். கணிசமான தொகை கைகளில் புரளும்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகம் என்பதால் இக்காலத்தில் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பெண் குழந்தைகளின் சுபச்சடங்குகள் நடைபெறும் நேரமிது. பிரச்சினைகளை அதிகம் சந்தித்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
எட்டாமிடத்து ராகுவால் இனிய பலன் கிடைக்கவும், தன ஸ்தானத்து கேதுவால் வருமானம் திருப்திகரமாக அமையவும் இல்லத்து பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து லட்சுமி கவசம் பாடி வழிபடுவது நல்லது. நிலைமை சீரான பிறகு பிரதோஷ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும்.
பெண்களுக்கு...
ராகு- கேது பெயர்ச்சியின் விளைவாக நற்பலன்கள் வந்து சேர நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. அஷ்டமத்து ராகுவால் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்ப ஒற்றுமை அதிகரிக்க விட்டுக்கொடுத்துச் செல் லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சொத்துக்கள் உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் கவனம் தேவை. இடமாற்றம், விரயம் உண்டு. அறுபத்து மூவர் வழிபாடு அமைதியை வழங்கும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
நான்கில் வந்தது குரு பகவான், நலம்பெறக் கவனம் மிகத்தேவை!
துலாம் ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று நான்காமிடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். 4-ம் இடத்தை ‘அர்த்தாஷ்டம ஸ்தானம்’ என்று சொல்வது வழக்கம். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், மனக்கவலைகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு நிம்மதிக் குறைவு உருவாகும். சொந்தம், சுற்றங்களின் பகைகளை வளர்த்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்கள், வேலையின்மை காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப நேரிடும். வாகனங்களில் செல்லும் பொழுதும் கவனம் தேவை. இடையில் சில மாதங்கள் குரு பகவான் 5-ம் இடத்திற்கு செல்கின்றார். அப்பொழுது நற்பலன்கள் ஏற்படும். குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் திசா புத்தி பலமிழந்தவர்கள், வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருவை வழிபடுவது நல்லது.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களை பார்க்கப் போகின்றார். குரு பகவான் இருக்குமிடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கே பலன் அதிகம். அந்த அடிப்படையில் குரு பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால், புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ‘அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று சொன்ன மருத்துவர்கள், சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கிவிடுவர். உங்கள் ராசி நாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகைக் கிரகமாவார். அந்த குரு நீச்சம் பெற்று பார்ப்பதால், அந்த பார்வைக்கு நல்ல பலன்கள் அதிகம் கிடைக்கும். இதற்கு நீங்கள் தொடர்ந்து குருவை வழிபட வேண்டும். அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றங்கள் உறுதியாகலாம்.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் செயல் ஸ்தானம் புனிதமடைகின்றது. முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ‘தொழிலை விரிவு செய்ய வங்கிகளிலும் கடன் கிடைக்கவில்லை, வள்ளல்களிடமும் கடன் கிடைக்கவில்லை’ என்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல பதில் கிடைக்கப்போகின்றது. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு, புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் சுபவிரயங்கள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள், திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளாக வாங்க சந்தர்ப்பங்கள் கைகூடி வரும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலத் தகவல் உண்டு. உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கான மாறுதல் ஒருசிலருக்கு கிடைக்கலாம்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சூரியன். அதாவது லாபாதிபதி. அவரது சாரத்தில் குரு வலம் வரும்பொழுது, தொழிலில் லாபம் இரு மடங்காக உயரும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். கிளைத்தொழில் தொடங்கும் முயற்சியில் ஒருசிலர் ஆர்வம் காட்டுவர். ஒப்பந்தங்கள் தேடி வரும். இருப்பினும் அவற்றை ‘உரிய காலத்தில் நிறைவற்ற முடியுமா?’ என்று ஆராய்ந்து, அதன்பிறகு கையெழுத்திடுவது நல்லது. மூத்த சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். கவுரவப் பதவிகள் ஒருசிலருக்கு கிடைக்கலாம். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும். கூட்டு முயற்சியில் இருந்து விலகித் தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சந்திரன். அவரது சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். ‘வியாபாரத்தை விரிவு செய்ய நண்பர்களை கூட்டாகச் சேர்த்துக் கொள்ளலாமா?’ என்று யோசிப்பீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். ஒருசிலருக்கு இப்பொழுது பணி நிரந்தரமாகி நிலையான வருமானத்திற்கு வழிகிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவானின் சஞ்சாரம் மிகச்சிறப்பாக இருக்கின்றது. உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்களுக்கோ, உங்கள் உடன்பிறந்தவர்களுக்கோ, திருமண வாய்ப்பு கைகூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். எனவே எந்த காரியத்தைச் செய்ய நினைக்கிறீர்களோ, அதை அந்த நேரத்தில் செய்ய இயலும். வாங்கல்- கொடுக்கல்கள் திருப்தி தரும். உதாசீனப்படுத்தி விலகிச்சென்ற உறவினர்கள் ஓடிவந்து ஒட்டிக்கொள்வர். குடும்ப முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், கூடுதல் சம்பளம் கிடைக்குமிடத்தில் வேலை செய்ய முயற்சிப்பர். நட்பால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கப் போவதால், அவர் 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சம் பலன் தரும்’ என்பதால், இக்காலத்தில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கும்ப குருவின் ஆதிக்க காலத்தில் பொன், பொருட்கள் சேரும். புகழ்கூடும். உடல்நலம் சீராகும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த அனுகூலத் தகவல் வந்து சேரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். வசதிகள் பெருகும் நேரமிது. தொழில் முன்னேற்றம் உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இக்காலம் ஒரு இனிய காலமாகும். எதைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்பதால், அது வலிமை இழக்கும் இந்த நேரம் வளர்ச்சி கூடுதலாக இருக்கும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களின் அனுகூலத்தோடு வருங்காலத்தை நலமாக்கிக்கொள்வீர்கள். பணிபுரியும் இடத்திலிருந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தை பெருக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். மறைமுகப் பகை மாறும். தொழில் செய்யுமிடம் வாடகை செலுத்துமிடமாக இருந்தால், அதை விலை கொடுத்து வாங்குமளவிற்கு உங்களுக்கு வளர்ச்சி ஏற்படும். திருமணத்தடை அகலும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து முல்லைப்பூ மாலை சூட்டி, கவசப் பாராயணங்களை படித்தால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். மேலும் வெள்ளிக்கிழமை சுக்ரனுக்குரிய துதிப்பாடல்களை பாடி வழிபடுவது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு, சுபகாரியங்கள் இல்லத்தில் நடைபெறும் நேரமிது. கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. ஊர் மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றங்கள் தானாக வந்து சேரும். குடியிருக்கும் வீட்டால் ஒருசிலருக்கு பிரச்சினைகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
4/11/2021 10:21:17 AM
http://www.dailythanthi.com/astrology/AstroBenefits/Libra