14.1.2021 முதல் 12.2.2021 வரை
மீன ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்பொழுது, உங்கள் ராசிநாதன் குரு பகவான் நீச்சம் பெற்று லாப ஸ்தானத்தில் சனியோடு இணைந்து ‘நீச்ச பங்க ராஜயோகம்’ அடைகின்றார். எனவே பொருளாதார வளர்ச்சி திருப்தி தரும். மூடிக்கிடந்த தொழிலை இனி தொடர்ந்து நடத்துவீர்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதம் இது.
மூன்றாமிடத்தில் ராகு
இம்மாதம், ராகு - கேதுக்களுக்கு மத்தியில் அனைத்து கிரகங்களும் இருக்கின்றன. சர்ப்பக் கிரகங்களின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். நண்பர்கள், ஒருசில சமயத்தில் உதவி செய்வார்கள். ஒருசில சமயங்களில் உதவி செய்வதாகச் சொல்லிவிட்டு நழுவி விடுவார்கள். எனவே சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். 9-ல் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர உறவில் இருந்த விரிசல் மறையும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். சொத்துக்கள் ஆதாயம் தரும்.
லாப ஸ்தானத்தில் கூட்டுக் கிரகம்
இம்மாதத் தொடக்க நாளில் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில், சந்திரன், சூரியன், குரு, புதன், சனி ஆகிய ஐந்து கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இது யோகம்தான். லாபாதிபதி சனி தன் சொந்த வீட்டில், ராசிநாதன் குருவோடு கூடியிருப்பதால், யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். புத -ஆதித்ய யோகம் இருப்பதால் பிள்ளை களின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கைகூடும். திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை, மகர ராசியில் புதன் வக்ரம் பெறுகின்றார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் அடையும் போது யோகம் செய்யும். விலகிச் சென்ற வரன்கள் மீண்டும் வரலாம். குடும்பத்தில் ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அனுகூலமாக நடந்துகொள்வர். பழைய பாக்கிகள் வசூலாகும்.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், சனியோடு இணைந்திருப்பதால் ‘நீச்ச பங்க ராஜயோக’த்தை உருவாக்குகின்றார். எனவே தொழில் மற்றும் உத்தியோகத்தில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். ஜனவரி 22-ந் தேதி குரு அஸ்தமனம் அடைவதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் தொல்லை ஏற்படும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு குறையும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி மகரத்திற்கு சுக்ரன் செல்கின்றார். இதனால் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். கடன் சுமை குறையும். உறவுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க சலுகைகளும் கிடைக்கலாம்.
இம்மாதம் வியாழக்கிழமை தோறும், குரு கவசம் பாடி குரு பகவானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 14, 15, 21, 22, 25, 26, பிப்ரவரி: 5, 6, 7, 11, 12, மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் புதிய பாதை புலப்படும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகளின் வழியில் சுபகாரியம் முடிவாகும். சகோதரர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவர். நீண்டநாள் கனவு நனவாகும். பணிபுரிபவர்களுக்கு, அலுவலகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும். பிரதோஷ வழிபாடு பெருமை சேர்க்கும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
தொழில் வளம் சிறப்பாக அமையும்
(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கு)
மீன ராசி நேயர்களே! புத்தாண்டு தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில், ராசிநாதன் குருவும், லாப - விரயாதிபதி சனியும் இணைந்திருக்கின்றார்கள். எனவே சென்ற ஆண்டில் ஏற்பட்ட இன்னல்களும், இடர்பாடுகளும் விலகும். தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்போடு, வரும் மாற்றங்களை நல்ல மாற்றங்களாக வரவழைத்துக்கொள்வீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
குருச்சந்திர யோகம் மற்றும் நீச்சபங்க ராஜயோகம் போன்ற யோகங்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்படுகின்றது. உங்கள் ராசிநாதன் குரு நீச்சம் பெற்றாலும் சனியின் சேர்க்கையால் அவர் பங்கம் அடைகின்றார். எனவே எதிர்பாராத நல்ல திருப்பங்கள் வரப்போகின்றது. பொருளாதாரநிலை திருப்தி தரும். அருளாளர்களின் ஆலோசனைகள் அவ்வப்போது கைகொடுக்கும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உள்ள கிரக அமைப்பை உங்கள் சுய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துப் பலன்களை அறிந்துகொள்ளலாம். சுயஜாதகம் பலம் பெற்றிருந்தால் கோட்சார பலன்களினால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் நடைபெறும் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடும்போது நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். ஆண்டின் தொடக்கத்தில் 2-ம் இடத்தில் செவ்வாய் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். 2-ம் இடம் என்பது தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றைக் குறிப்பதாகும். அங்கு ஆட்சி பெற்று விளங்கும் செவ்வாய் இருப்பதால், குடும்ப முன்னேற்றம் கூடும். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
பாம்பு கிரகமான ராகு-கேதுக்களுக்கு நடுவில் உங்களுக்கு ராசி இருப்பதால் சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை முறையாக செய்துகொள்வது நல்லது. வழக்குகளில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். அரசியல் துறையைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். கூடுதல் பொறுப்பும் பதவியும் தேடி வரும்.
9-ல் கேது இருப்பதால் தந்தைவழி உறவில் பிரச்சினைகள் உருவாகலாம். முன்னோர்கள் கட்டி வைத்த ஆலயத் திருப்பணிகளை முறையாக செய்ய முன்வருவீர்கள். தொழில் தொடங்கும் முயற்சியில் புதிய கூட்டாளிகள் வந்திணையலாம். பத்தாமிடத்தில் சூரியன் இருப்பதால் ‘தொழிலை விரிவு செய்ய போதுமான தொகை இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அரசு வழியில் ஒத்துழைப்பு கிடைக்கலாம். லாப ஸ்தானத்தில் புதன், சனி, குரு ஆகிய மூன்று கிரகங்களும் இருக்கின்றன. இந்தக் கூட்டுக்கிரக யோகம் உங்களுக்குச் சாதகமாக அமைந்து வழிகாட்டும். குறிப்பாக மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். சென்ற ஆண்டில் முடங்கிப்போன தொழில் இப்பொழுது மீண்டும் தலைதூக்கும்.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். அங்கு குரு நீச்சம் பெறுவதால் நன்மைகளும் கிடைக்கும். பொதுவாக கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறுவது யோகம்தான். ராசி நாதனாகவும், 10-க்கு அதிபதியாகவும் விளங்கும் குரு, 11-ம் இடத்தில் வலிமை இழப்பதால் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளை நெறிப்படுத்தி வல்லவர்களாக மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். கூட்டு முயற்சியில் இருந்து தனித்து இயங்க முற்படுவீர்கள். வளைகாப்பு, நிச்சயதார்த்தம், திருமணம், சஷ்டியப்த பூர்த்தி என்று பல நல்ல நிகழ்வுகள் நடை பெறுவதற்காக செலவிடுவீர்கள்.
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு அதிபதியான குரு, 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம். பணியாளர்களை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆதாயம் தரும் தகவல் வெளிநாட்டில் இருந்து வரலாம். பாகப்பிரிவினைகளில் இருந்த தடை அகலும். தேகநலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் பிரச்சினைகளால் சிலருக்கு கவலை அதிகரிக்கும். பணியாற்றும் இடத்தை விட சொந்த ஊரில் இடம் வாங்கி வீடுகட்ட வேண்டுமென்ற ஆசை நிறைவேறும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பழக்கம் ஏற்படும். தனியார் துறையிலிருந்து அரசு வேலைக்கு மாறிக்கொள்ள முயற்சி எடுத்தவர்களுக்கு, இப்பொழுது நல்ல நேரம் வந்துவிட்டது. தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் லாப ஸ்தானமான மகரத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே அந்த இடங்கள் புனிதமடைந்து நல்ல பலன்களை அள்ளி வழங்கும். குறிப்பாக இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். சொல்லை செயலாக்கிக் காட்டுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பிள்ளைகளை நெறிப்படுத்தும் முயற்சிகளில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்தது என்று பலரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தேக நலனும் சீராகும். செல்வ நிலையும் உயரும். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தகவல் அனுகூலமானதாக இருக்கும். ‘வந்த பணம் அனைத்தும் வட்டி கட்டியே செலவாகிவிட்டதே. இனியேனும் சேமிக்க முடியுமா?’ என்று நினைத்தவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். எனவே கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடத்தில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். குறிப்பாகத் தாய்வழி ஆதரவு கிடைக்கும். தன்னிச்சையாக இயங்க முன்வருவீர்கள். ‘பழைய வாகனங்கள் அடிக்கடி பழுதாகி செலவு வைக்கின்றதே.. அதைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கலாமா?’ என்று சிந்தித்தவர்களுக்கு, அதற்கான சூழல் உருவாகும். இழப்புகளை ஈடுசெய்யப் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். அது அவ்வளவு நல்லதல்ல. தொழில் ஸ்தானாதிபதியாகவும், ராசிநாதனாகவும் விளங்கும் குருபகவான் விரய ஸ்தானத்தில் வரும்பொழுது, தொழில் மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். தொல்லை தரும் எதிரிகளின் பலம் கூடும். விரயங்கள் அதிகரிக்கும். சங்கிலித் தொடர்போல கடன்சுமை வரலாம். நம்பிக்கைக்குரிய நண்பர்களைப் பார்க்க இயலாது. நடக்கும் செயல்கள் அனைத்தும் நன்மைக்கே என்று நினைத்து அமைதி காண வேண்டிய நேரம் இது. நிச்சயித்த காரியங்களில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இனிமை தராத இடமாற்றங்கள் வரலாம். உறவினர் பகை அதிகரிக்கும்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு குறையும். சகோதரர்கள் பிரச்சினைகளுக்கு அடித்தளமிடுவர். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வந்து அகலும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வெளிநாட்டு முயற்சிகளில் விழிப்புணர்ச்சி தேவை. உங்களோடு தோள் கொடுத்து உதவிய பணியாளர்கள் விலக நேரிடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊர் மாற்றங்கள் உருவாகி மனக்கலக்கத்தை ஏற்படுத்தும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அதாவது லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதி. விரயாதிபதியாக விளங்குபவர் வக்ரம் பெறுவது நன்மைதான். ஆனால் லாபாதிபதியாகவும் அவர் விளங்குவதால் சனி வக்ரம் பெறும் பொழுது பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். உறவினர்கள் பகை உருவாகும். அரசு வழிப் பிரச்சினைகளும் ஏற்படும். ‘வங்கி சேமிப்பு கரைகிறதே’ என்று கவலைப்படுவீர்கள். வீடு மாற்றச் சிந்தனைகளும், ஊர் மாற்றச் சிந்தனைகளும் உருவாகும். ‘கொடுத்த பணம் வசூலாகவில்லையே’ என்று கவலைப்படுவீர்கள்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரை செவ்வாய்-சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. உறவினர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும், அது தீமையாகவே தெரியும். குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கொடுக்கல் -வாங்கல்களில் ஏமாற்றம் உண்டு. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழிகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பெரும் தொகை செலவு செய்வீர்கள். வருமானப் பற்றாக்குறை அதிகரிக்கும். கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுங்கள். சொத்துக்களால் பிரச்சினைகள் வரலாம். சொந்தங்களின் அரவணைப்பு குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் மறுக்கப்படலாம். சக ஊழியர்களால் தொல்லை உருவாகலாம்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்தப் புத்தாண்டில் எல்லா நாட்களும் குரு பகவானை வழிபடுவது நல்லது. இல்லத்தில் தென்முகக் கடவுள் படம் வைத்து, குரு கவசம் பாடி வழிபட்டால், நல்ல தகவல்கள் வந்து சேரும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. உறவினர்களின் மனக்கசப்பு மாறும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வரலாம். பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் உண்டு. வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு, பழைய இடத்திலேயே பணிபுரிய அழைப்புகள் வரலாம். சனி-செவ்வாய் பார்வை காலத்தில் மிகுந்த கவனம் தேவை.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
பதினோராமிடத்தில் சனி! பண வரவுதான் இனி! மீன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சனி. அவர் லாப ஸ்தானத்தில் தனது சொந்த வீடான மகரத்தில் சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளம் மிகச் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் வந்து குதூகலத்தை வழங்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். சுபகாரியங்கள் மளமளவென்று நடைபெறும். பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
மகர ராசியில், உங்கள் ராசிநாதன் குரு பகவான் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அவரோடு இப்பொழுது சனி பகவானும் இணைந்து ‘நீச்சபங்க ராஜயோக’த்தை உருவாக்குகிறார்கள். 10-க்கு அதிபதி குரு 11-ல் சஞ்சரிப்பதால் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகளும் கிடைக்கும். அரசியல் சார்ந்த பிரமுகர்களால் ஆதாயம் உண்டு.
லாப ஸ்தானச் சனியின் ஆதிக்கம்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கப் போகின்றார். அந்த இடம் லாப ஸ்தானம் என்று சொல்லப்படுவதால் இதுவரை எவ்வளவு முயற்சி செய்தும் முடிவடையாத தொழில் தொடர்புகள், இப்பொழுது முடிவடைந்து பெருந்தொகை கையில் புரளும். புதிய ஒப்பந்தங்கள் வந்து கொண்டே இருக்கும்.
சனியின் பார்வைப் பலன்கள்
உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்கள் ராசியையும், 5, 8 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். உடல் நலம், குடும்பம், புகழ், ஆரோக்கியம், பூர்வ புண்ணியம், பிள்ளைகள், பூர்வீகச் சொத்துக்கள், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம் போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளும் விதத்தில் சனியின் பார்வை பதிவதால், அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு வந்துசேரும். குறிப்பாக சனி ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். உங்களுக்கோ, உங்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கோ உடல்நலப் பாதிப்பும், மருத்துவச் செலவும் உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும்.
சனியின் பார்வை 5-ல் பதிவதால் பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகளின் மேற்படிப்பை முன்னிட்டு நீங்கள் செய்த ஏற்பாடுகள் பலன் தரும். படித்து முடித்த பிள்ளைகள் வேலை வாய்ப்பிற்காகச் செய்த முயற்சியும் கைகூடும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகளில் மட்டுமல்லாமல் பெற்றோர்களின் முத்துவிழா, பவளவிழா போன்ற விழாக்கள் மற்றும் புதுமனை புகுவிழாக்கள் நடத்தும் யோகம் உண்டு. ‘பூர்வீக இடம் கையை விட்டுப் போய்விட்டதே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, புது இடம் சொந்த ஊரிலேயே வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால் இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் கைகூடிவரும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை:சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, எதிரிகளின் தொல்லை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். திட்டமிட்ட காரியத்தை திடீர் திடீரென மாற்றுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-க்கு அதிபதியாக சூரியன் விளங்குவதால் அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளில் தாமதம் ஏற்படும். ஆதரவுக்கரம் நீட்டுவதாகச் சொன்னவர்கள் விலகிக்கொள்வர். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். நீங்கள் என்ன செய்தாலும் குடும்பப் பெரியவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு.
28.12.2021 முதல் 26.1.2023 வரை:சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, திட்டமிட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். திடீர் முன்னேற்றம் வந்து சேரும். கல்யாணச் சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்து மகிழ்ச்சி காண்பீர்கள். ‘வெளிநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக்கொள்ளலாமா?’ என்று சிந்திப்பீர்கள்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை:செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, வாழ்க்கைப் பாதையில் நல்ல மாற்றங்கள் வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் லாபம் உண்டு. வீண் கவலைகள் அகலும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். உறவினர்களின்் மனவருத்தங்கள் மாறும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் நட்பால் அனைத்து வழிகளிலும் நன்மை கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ‘விருப்ப ஓய்வில் வெளிவந்து தொழிலைத் தொடங்கலாமா?’ என்று யோசிப்பர். இக்காலத்தில் சனியும் கும்பத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். எனவே வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பதில் இருந்த தடைகள் அகலும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் விரய ஸ்தானத்தில் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் உருவாகும். தொழிலில் கவனம் தேவை. குடும்பச் சுமை கூடும். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ராசிநாதன் ராசியிலேயே சஞ்சரிப்பதால் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரும். எதிரிகள் விலகுவர்.
மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடு உன்னத நிகழ்வு இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உயர் பதவி உண்டு.
ராகு- கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகின்றனர். மேஷ ராகுவின் ஆதிக்க காலத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். பற்றாக்குறை மாறும். விலகிச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்திணைவர். அஷ்டமத்தில் கேது இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். விரயங்கள் கூடும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடலாம். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடி செய்ய இயலாது.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து தட்சிணாமூர்த்தியை வழிபடுவதோடு, இல்லத்து பூஜை அறையில் வள்ளி-தெய்வானை உடனாய முருகன் படம் வைத்து முருகப்பெருமானுக்குரிய பதிகங்களை பாடி வழிபடுவதன் மூலம் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்லலாம்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார். இக்காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். தொழிலில் விரயங்கள் அதிகரிக்கும். அயல்நாடு சென்று வேலை கிடைக்காமல் திரும்பும் சூழ்நிலையும் உண்டு. கடன் சுமையின் காரணமாக கட்டிய வீட்டைக் கொடுத்துவிட்டு வேறு இடம் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். நெருக்கடி நிலை அதிகரிக்கும். எதிலும் கவனம் தேவைப்படும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி நன்மை தரும் பெயர்ச்சியாகவே அமைகின்றது. குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். உடன்இருப்பவர்களின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். திருமணம், புத்திரப்பேறு ஆகியவற்றில் இருந்த தடைகள் அகலும். தாய் மற்றும் சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சேமிப்பு உயரும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். மேலதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள். வாகனம் வாங்க, வீடு கட்ட உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
மூன்றில் ராகு வருகிறது..முன்னேற்றப் பாதை தேடிவரும்..
மீன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், செப்டம்பர் 1-ந் தேதியன்று உங்கள் ராசிக்கு 3-ம் இடமான வெற்றிகள் ஸ்தானத்திற்கு வரப்போகின்றார். அதேபோல கேது பகவான் அதே நாளில் உங்கள் ராசிக்கு 9-ம் இடம் எனப்படும் பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு வரப்போகிறார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி உங்கள் ராசிநாதன் குரு, மகர ராசிக்குச் செல்கின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுகின்றார். ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் குரு, நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். டிசம்பர் 26-ந் தேதி சனி, பெயர்ச்சியாகி மகர ராசிக்குச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி. 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி குரு, கும்ப ராசிக்குச் செல்கின்றார். அங்கிருந்து கொண்டு அவர் 4, 6, 8 ஆகிய இடங்களை பார்க்கப் போகின்றார்.
இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்துக்கொண்டும், உங்கள் சுய ஜாதகத்தில் ராகு-கேதுக்களின் பலமறிந்தும் செயல்படுவதன் மூலம் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்கலாம். கிரகங்களின் சஞ்சாரம் பலமிழந்திருக்கும் பொழுது பரிகாரங்களும், வழிபாடுகளும் ஓரளவு கைகொடுக்கும்.
மூன்றாமிடத்தில் ராகு! ஓன்பதாமிடத்தில் கேது!
ராகு இப்பொழுது சஞ்சரிக்கப் போகுமிடம் மூன்றாம்இடமாகும். ‘வெற்றிகள் ஸ்தானம்’ என்றும், ‘சகோதர ஸ்தானம்’ என்றும் குறிக்கப்படும். அந்த இடத்திற்கு ராகு வரும்பொழுது வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்படுவீர்கள். வெற்றிக்குரிய வாய்ப்புகள் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பங்காளிப் பகைமாறும். கூடப்பிறந்தவர்களில் ஒரு சிலர் உங்களை விட்டு விலகி இருந்திருக்கலாம். அவர்கள் இப்பொழுது தானாக தேடிவருவர். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.
இதுவரை பத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த கேது பகவான், இப்பொழுது ஒன்பதாம் இடத்திற்கு வரப்போகின்றார். பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு கேது வரும்பொழுது பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங் கள் அகலும். பரம்பரை சொத்துக்களில் கிடைக்க வேண்டிய பங்கு முறையாகக் கிடைக்கும். பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். கடன் சுமை முற்றிலும் குறையக்கூடிய வாய்ப்பு உண்டு. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மாற்றங்கள் நன்மை தருவதாக அமையும். கால்நடை வளர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, நல்ல பலன்கள் உங்களுக்கு வரப்போகின்றது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் வந்து உங்களை மகிழ்விக்கும். புகழ்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு புதிய திருப்பங் களைக் காண்பீர்கள். உடல்நலக் குறைபாடுகள் உங்களை விட்டு அகலும். பெற்றோருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தொழில் முன்னேற்றமும், வருமானமும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாகவே அமையும்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
சந்திரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளால் பெருமை சேரும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்பால் ஒரு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். பூர்வீக சொத்துக்களைப் பிரித்துக்கொள்வதில் இருந்த பிரச்சினைகள் அகலும். தேகநலன் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களை கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்கள், வீடாக வாங்கும் அமைப்பு உண்டு. பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். அவர்களின் படிப்பிற்கேற்ற வேலையும் கிடைக்கும். இக்காலத்தில் எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. வருமானம் உயரவும் வழி பிறக்கும்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோகத்தில் எதிர்பார்த்த நல்ல முன்னேற்றம் உண்டு. சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சந்தோஷத்தை ஏற்படுத்தும். பழைய பிரச்சினைகள் அகலும். வீடு கட்ட, வாகனம் வாங்க பணம் கேட்டு விண்ணப்பித்திருந் தால் அந்த முயற்சி கைகூடும். செலவுகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். செய்தொழிலில் புதிய பணியாளர்களை சேர்த்துக்கொள்ள விரும்புவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நேரமிது.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் ‘நிழல் கிரகம்’ என்று வர்ணிக்கப்பட்டாலும், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்நிற்பவர் ஆவார். பாதசார அடிப்படையில் பலன்களை அறிந்துகொண்டு செயல்படுவது நல்லது. பகைக்கிரகத்தின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதற்குரிய பரிகாரங் களையும், வழிபாடுகளையும் செய்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, கல்யாண வாய்ப்புகள் கை கூடும். செய்தொழில் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும். ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன் என்பதால் சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். தாய்வழி உறவு திருப்தி தரும். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி கைகூடும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவரது சாரத்தில் கேது வரும்பொழுது தொழிலில் லாபம் திருப்திகரமாக இருக்கும். வெளிநாட்டு முயற்சியில் அனுகூலம் உண்டு. குடும்ப வருமானம் உயரும். உடன்பிறந்தவர்களால் சில செலவுகள் உண்டு. குறிப்பாக அவர்கள் இல்லங்களில் நடைபெறும் சுபநிகழ்வுகளை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்மறையாகப் பேசியவர்கள் இப்பொழுது உங்களை விட்டு விலகுவர். பணிவும், துணிவும் உங்கள் வெற்றிக்கு வித்திடும்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் குரு. அவரது சாரத்தில் கேது வரும்பொழுது தொழில் முன்னேற்றம் உண்டு. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். புதிய பதவிகள் கிடைக்கும். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்களாக சமூகத்தில் விளங்குவீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பர். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். செல்வாக்கு உயரும் நேரமிது.
வளர்ச்சி தரும் வழிபாடு
மூன்றாமிடத்து ராகுவால் முன்னேற்றம் கூடவும், 9-ம் இடத்து கேதுவால் உன்னத வாழ்க்கை அமையவும் செவ்வாய்க்கிழமை தோறும் இல்லத்துப் பூஜை அறையில் கந்தப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. நிலைமை சீராகும் பொழுது தேய்பிறை அஷ்டமி அன்று மார்த்தாண்ட பைரவரை பதிகம் பாடி வழிபட்டால் மகத்தான பலன்கள் கிடைக்கும்.
பெண்களுக்கு...
இந்த ராகு-கேது பெயர்ச்சி ஒப்பற்ற வாழ்க் கையை அமைத்துக் கொடுக்கப்போகிறது. பிள்ளைகள் வழியில் சுபகாரியங்கள் நடைபெறும். பெற்றோர்களும், உடன்பிறப்புகளும் உங்களுடன் பிரியமாக இருப்பர். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சதுர்த்தி விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால் சந்தோஷ வாய்ப்புகள் வந்துசேரும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
பதினோராம் இடத்தில் குரு பகவான், பார்க்கும் தொழிலில் லாபம் உண்டு!
மீன ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகின்றார். எனவே தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். லாபம் எதிர்பார்த்ததைப் போல வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களும் ஒருசிலருக்கு நிறைவேறும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். உடன்பிறந்தவர்களோடு நல்லுறவு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிலிருந்தபடியே தனித்து தொழில் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். அதிகார வர்க்கத்தினர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் அக்கறை காட்டுவீர்கள். வெளிநாட்டில் வாழும் உறவினர்கள் மூலம் அனுகூலத் தகவல் வரலாம்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களை குரு பகவான் பார்க்கின்றார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் பதிவதால் தைரிய ஸ்தானம் புனிதமடைகின்றது. துணிந்து சில முடிவுகளை எடுத்து உறவினர்களை ஆச்சரியப்படுத்துவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். அடகுவைத்த தங்க நகைகளை மீட்டுக்கொண்டு வருவீர் கள். தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலன்தரும். நீண்ட நாட்களாக விலகியிருந்த உடன்பிறப்புகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள். அதன்மூலம் பாகப்பிரிவினையை சுமுகமாக முடித்துக்கொள்ள வழிபிறக்கும்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுகிறது. எனவே பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வரப்போகின்றது. சண்டை போட்ட உறவினர்கள் சமாதானம் அடைவர். நீடித்த நோய் அகலும். தாய்வழி அனுகூலமும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ எடுக்கும் முயற்சிகள் பலன் தரும் நேரமிது.
குருவின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றது. இல்லற வாழ்க்கை இனிமையாக அமையும். தம்பதியர்களுக்குள் ஏற்பட்ட பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும். வாழ்க்கைத் துணைக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டிலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும். தொழிலில் பழைய பங்குதாரர்கள் வந்திணைந்து பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் கிடைக்கும்.
நட்சத்திரப் பாதசாரப் பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். விரயங்கள் அதிகரிக்கும். முடிவிற்கு வந்த பிரச்சினைகள் கூட மீண்டும் தலைதூக்கலாம். தொழில் ரீதியாக பெரும் தொகையைக் கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் வரலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அதிரடியாக இடமாற்றங்கள் வரலாம். அருகில் இருப்பவர்களிடம் உங்கள் முன்னேற்றத்தை முன்கூட்டியே சொல்வதன் மூலம் காரியங்களில் தாமதம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் உண்டு.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு அதிபதியானவர், சந்திரன். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான சந்திரன் சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிந்து பூர்வீக சொத்துக்களை முறையாகப் பெற்றாலும், அவற்றில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைப்பட்ட பதவிகள் தானாக வந்துசேரும். உயர் அதிகாரிகளின் கெடுபிடி குறையும். உங்கள் திறமையைக் கண்டு சகப் பணியாளர்கள் வியப்பர். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அற்புதமான பலன்கள் வந்து சேரும். இக்காலத்தை ஒரு பொற்காலமாகக் கருதலாம். பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். என்றைக்கோ மலிவு விலையில் வாங்கிப்போட்ட சொத்துக்கள் இப்பொழுது விலை உயரும். அதை விற்பனை செய்து வந்த தொகையை மேலும் முதலீடு செய்ய முன்வருவீர்கள். ஆரோக்கியம் சீராவதோடு அன்றாடப் பணிகளையும் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கலாம்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில்செவ்வாய், மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவரது பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிகின்றது. அப்பொழுது சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். இருப்பினும் செலவுகள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். சில நேரங்களில் வீண் விரயங்களையும் சந்திப்பீர்கள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. வெளிநாட்டுத் தொடர்பால் எதிர்பார்த்த நல்ல தகவல் உண்டு. இருப்பினும் 12-ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் இனம்புரியாத கவலை மேலோங்கும். எதையும் தீர்மானமாக செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்களை திடீர், திடீரென மாற்ற நேரிடும். உத்தியோகத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட தூரத்திற்கான இடமாறுதல்கள் ஒரு சிலருக்கு கிடைக்கும். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கிடைக்கும் நேரமிது.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். மகரம், கும்பம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதனாக விளங்கும் குரு வக்ரம் பெறுவதால், இக்காலத்தில் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் வரலாம். உடலில் சிறு தொல்லை வந்தாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதே நல்லது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்களை அனுசரித்துக் கொண்டால்தான் ஆதாயம் கிடைக்கும். குடும்ப ரகசியங்களையும், தொழில் வளர்ச்சியையும் மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். அதே நேரத்தில் கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் குரு என்பதால், ஒருசில நன்மைகளையும் குரு பகவான் செய்வார். பெற்றோர் வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, குரு கவச பாராயணம் செய்து வருவது நல்லது. செவ்வாய்க்கிழமை தோறும் வள்ளி மணாளனை வழிபட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடும் பலன் தரும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. பகையான உறவு நட்பாகும். கணவன்- மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். சகோதரர்களின் பாசமழையில் நனையப் போகிறீர்கள். தாயின் உடல்நலம் சீராகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கும். குருவின் வக்ர காலத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதலான விரயம் ஏற்படும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/18/2021 12:08:01 AM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Pisces