சகோதரர்களால் நன்மை கிட்டும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் சிலகுழப்பங்கள் ஏற்படலாம்.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
தனுசு ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் நீச்சம் பெற்றிருக்கின்றார். இருப்பினும் அவர் சனியோடு இணைந்து ‘நீச்ச பங்க ராஜயோகத்தை உருவாக்குகின்றார். அதே நேரத்தில் ஏழரைச் சனியில் இப்பொழுது ஜென்மச் சனி விலகி குடும்பச்சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே நன்மைகள் அதிகம் நடைபெறும். அனைத்து முயற்சிகளும் வெற்றியாகும் நேரம் இது.
ஆறாமிடத்தில் ராகு
இம்மாதம் 6-ம் இடத்தில் ராகுவும், 12-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். இந்த பாம்பு கிரகங்களுக்கு மத்தியில் அனைத்து கிரகங்களும் அடங்கியிருக்கின்றன. சர்ப்ப தோஷத்தின் பின்னணியில் உங்கள் ராசி இருப்பதால், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். ராகுவின் பலத்தால் வருமானம் திருப்திகரமாக இருக்கும். வழக்குகள் சாதகமாகும். வாரிசுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். 12-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர் பாராத விரயங்கள் உண்டு.
கூட்டுக்கிரக யோகம்
இம்மாதம் குடும்ப ஸ்தானத்தில், சந்திரன், சூரியன், குரு, புதன், சனி ஆகிய ஐந்து கிரகங்களின் சஞ்சாரம் இருக்கின்றது. இது யோகம்தான். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். பிரச்சினைகள் படிப்படியாக மாறும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். ஏழரைச் சனியில் இப்பொழுது குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. எனவே குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கக் கூடிய வாய்ப்பு உருவாகும். தன ஸ்தானத்தில் தனாதிபதி சனியோடு, குருவும் இணைந்திருப்பதால் தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை, மகர ராசியில் புதன் வக்ரம் பெறுகின்றார். அது ஒரு வழிக்கு நன்மைதான். என்றாலும், பாக்ய ஸ்தானத்திற்கும் புதன் அதிபதி என்பதால் குடும்பச்சுமை கூடும். சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் குரு நீச்சம் பெற்றிருந்தாலும் சனியோடு இணைந்து ‘நீச்ச பங்க ராஜயோகம்’ அடைகின்றார். அவர் ஜனவரி 22-ந் தேதி மேலும் வலிமை இழக்கின்றார். எனவே மனக் குழப்பங்கள் அதிகரிக்கும். விரயங்கள் ஏற்படும். வாக்குவாதங்களைத் தவிர்த்திடுங்கள். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு அகலும்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்த தடை அகலும். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் சீராகும்.
இம்மாதம் வியாழக்கிழமை தோறும் குரு கவசம் பாடி, குருபகவானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 15, 16, 19, 20, 30, 31, பிப்ரவரி: 5, 6, 7 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.
பெண்களுக்கான பலன்கள்!
இம்மாதம் பற்றாக்குறை அகலும். பணத்தேவை பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். ஆரோக்கிய பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளில் அனுகூலம் உண்டு. தாய்வழி ஆதரவும் உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பும் திருப்தி தரும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. அனுமன் வழிபாடு அல்லல் தீர்க்கும்.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
நினைத்த காரியம் நிறைவேறும்
(மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கு)
தனுசு ராசி நேயர்களே! விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் ஆண்டாக, இந்த புத்தாண்டு அமையப்போகின்றது. ஜென்மச் சனியும், ஜென்ம குருவும் விலகிவிட்டது. இனி நன்மைகள் ஒவ்வொன்றாக நடைபெறப்போகின்றது. இதுவரை ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் பிடியில் சிக்கி மனஅமைதி குறைவோடு வாழ்ந்த உங்களுக்கு, இப்பொழுது குடும்பச்சனி தொடங்கி விட்டதால் குதூகலங்கள் அதிகரிக்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். மூடிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பால், தொழில் வளர்ச்சி அடைவீர்கள். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கத்தால் நன்மைகள் வந்து சேரும். 2-ல் சஞ்சரிக்கும் குரு பகவான் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சந்திரனைப் பார்ப்பதால், சந்திராஷ்டமத்தோடு ஆண்டு தொடங்குகிறது. இருப்பினும் குருவின் பார்வை நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொடுக்கும்.
குருச்சந்திர யோகத்தோடு தொடங்கும் இந்த ஆண்டில், நீச்சம் பெற்ற குருவோடு ஆட்சி பெற்ற சனி சேர்ந்து நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்குகிறார். எனவே குடும்பத்தில் பிரச்சினைகள் வந்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு. புதிய திருப்பங்களைத் தரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
பொதுவாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே சூரியன் சஞ்சரிக்கின்றார். பிரகாசமான எதிர்காலம் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், அதிகாரப் பதவிகளும் கிடைக்கலாம்.
வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் ஆட்சி பெறுகின்றார். எனவே வாக்கு வலிமை அதிகரிக்கும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். அவரோடு குரு, புதன் ஆகிய இரண்டு கிரகங்கள் இணைந்திருப்பது யோகம்தான். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் சீராகும். வாரிசுகளால் வந்த தொல்லை அகலும். கடந்த காலத்தில் ஏற்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திறமைக்கேற்ற பொறுப்புகளை காண்பர். மேலதிகாரிகளின் ஆதரவோடு நினைத்த இடத்திற்கு மாறுதல் பெறும் யோகம் கூட உண்டு. திட்டமிட்ட காரியங்களைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் பலம் பெற்றிருப்பதால், பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களின் எதிர்கால நலன்கருதி நீங்கள் செய்ய நினைத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். 12-ல் கேதுவும், 6-ல் ராகுவும் சஞ்சரிக்கின்றார்கள். கேதுவோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். சர்ப்பக் கிரகத்தின் ஆதிக்கம் கூடுதலாக இருப்பதால், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில் மகர ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு பகவான் உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியாவார். அவர் வலிமை இழக்கும் பொழுது மிகுந்த நன்மைகளை உங்களுக்குச் செய்வார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெறுவது யோகம்தான். எனவே இதுவரை உங்கள் உடல்நலத்திலோ, உடன் இருப்பவர்களின் உடல்நலத்திலோ திடீர் தாக்குதல்கள் ஏற்பட்டு ரண சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொன்ன மருத்துவர்கள், இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கி விடுவதாகச் சொல்வார்கள். சோதனைக் காலம் முடிந்து, இனி சாதனைக் காலம் வரப்போகிறது.
4-ம் இடத்திற்கு அதிபதியாக குரு பகவான் விளங்குவதால், தாயின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வாகனங்களை மாற்ற வேண்டுமென்று பலமாதங்களாக சிந்தித்தவர்களுக்கு, இப்பொழுது அதற்கான வாய்ப்பு உருவாகும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக முயற்சி செய்து சென்ற ஆண்டில் தாமதம் ஏற்பட்டவர்கள், இந்த ஆண்டு எதிர்பார்த்த இலக்கை அடைவர். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்பட்டாலும் சேமிக்க இயலுமா? என்பது சந்தேகம்தான். சுக ஸ்தானாதிபதி நீச்சம் பெற்றிருப்பதால் தவிர்க்க முடியாத விதத்தில் மருத்துவச் செலவு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களை அனுசரித்துச் செல்லுங்கள்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை பதியும் இடங்கள் புனிதமடைந்து நன்மைகளை உங்களுக்கு வழங்கும் என்பது நியதி. எனவே எதிரிகள் விலகி இனிய பலன் கிடைக்கும். உதிரி வருமானங்கள் உண்டு. அதிரடியாக சில முடிவுகளை எடுத்து அருகில் உள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். நீண்ட நாள் கனவு நனவாகும். தொழிலில் சென்ற வருடம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட, புதிய பாதையில் பயணிப்பீர்கள். சட்டத்துறை வல்லுநர்கள் உங்களுக்குச் சரியான பாதையை வகுத்துக் கொடுப்பர். எல்லாவற்றிலும் ஏறுமுகமாக அமையப் போகின்றது.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில், அதன் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே இல்லம் தேடி சுபச் செய்திகள் வந்து சேரும். மங்கல ஓசை மனையில் கேட்கும். அதுமட்டுமல்லாமல் மழலையின் ஓசையும் கேட்கும். தங்கு தடைகள் தானாக விலகும். தடம்புரண்டு சென்ற உறவினர்கள், இப்பொழுது தானாக வந்திணைவர். தந்தை வழி ஆதரவு திருப்தி தரும். பூர்வீகச் சொத்துக்களில் ஒரு பகுதியை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். கூட்டாளிகளை விலக்கிவிட்டு தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இதுவரை இருந்த மனக்குழப்பம் அகலும். ‘இங்கேயே நீடிக்கலாமா? அல்லது வேறு இடத்திற்கு செல்லலாமா?’ என்று யோசித்தவர்களுக்கு இப்பொழுது விடை கிடைக்கும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் 3-ம் இடத்தில் வக்ரம் பெறுகின்ற இந்த நேரத்தில், உடன்பிறப்புகளின் குணத்தில் மாறுதல்கள் ஏற்படும். பண நெருக்கடி அதிகரிக்கலாம். வழக்குகளில் திடீர் மாற்றங்கள்் ஏற்படும். சில காரியங்களை, பெரும் முயற்சி எடுத்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். உடன்பிறப்புகளால் மன அமைதி குறையலாம். ஒரு சிலர் ‘தொழில் செய்யும் இடத்தை மாற்றலாமா?’ என்று யோசிப்பீர்கள். உறவினர்களின் பேச்சு, உங்களை மனச் சங்கடத்தில் ஆழ்த்தும். சில பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கலாம். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளும், அருளாளர்களின் கருத்துக்களும் உங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும். விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லை வந்து சேரும். சகோதர வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஒருதொகை கொடுத்து உதவி செய்யும் சூழ்நிலை உருவாகும்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இதன் விளைவாக குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். பண வரவில் தாமதம் உண்டு. பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்க நேரிடும். பிள்ளைகள் உங்கள் சொற்களைக் கேட்டு நடப்பது சந்தேகம்தான். அருகில் உள்ள அனைவரிடமும் அனுசரித்துச் சென்றால் தான், ஆதாயம் கிடைக்கும். பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். இந்த காலகட்டத்தில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கொள்கைப் பிடிப்புடன் செயல்படவும் முடியாது. பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். இருப்பினும் சனி உங்களுக்கு யோகம் செய்யும் கிரகம் என்பதால், முடிவில் காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். நிதிநிலை குறைந்தாலும் தேவைக்கேற்ப பணம் வந்துகொண்டே இருக்கும். இதுபோன்ற நேரங்களில் மனத் தெளிவுதான் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பணியாளர்களால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திருப்தியற்ற தன்மை உருவாகும். சகப்பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
செவ்வாய் - சனி பார்வைக் காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மகர ராசியில் சஞ்சரிக்கும் சனியைப் பார்க்கின்றார். அதே சமயம் கும்பத்தில் சஞ்சரிக்கும் குரு செவ்வாயை பார்த்துப் புனிதப்படுத்துகின்றார். 4.6.2021 முதல் 21.7.2021 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் நீச்சம்பெற்ற செவ்வாய், மகரத்தில் சஞ்சரிக்கும் சனியை சப்தமப் பார்வையாக பார்க்கின்றார். இதன் விளைவாக எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படப்போகின்றது. உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சனியைப் பார்க்கும் பொழுது, பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படும். கல்யாண வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். பூர்வீக சொத்துக்களைப் பிரித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டாலும் பாகப்பிரிவினைகள் திருப்தியாக அமையாது. இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை எதிர்பாராத விதத்தில் அமையும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீடு கட்டும் முயற்சி அல்லது வாங்கும் முயற்சி வெற்றியாகும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பொருளாதார விருத்தியை அதிகரிக்கும் ஆண்டாக அமையப் போகிறது. ஜென்மச் சனி விலகியதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். தாயின் ஆதரவு உண்டு. உடன்பிறந்தவர்களில் ஒருசிலர் மட்டும் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. குறிப்பாக பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் மற்றும் திருமணங்கள் நிறைவேறி நிம்மதியைக் கொடுக்கும். பணிபுரியும் பெண்களுக்கு யோகமான நேரம் இது. மேலிடத்தின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். மனப்பயம் விலகும். மாருதி வழிபாடு மகிழ்ச்சியை வழங்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்துப் பூஜை அறையில் கண்ணன் - ராதை படம் வைத்து கண்ணன் கவசம் படித்து வழிபடுவது நல்லது.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
குடும்பச் சனியின் ஆதிக்கம், வாழ்வில் கடுமை இனிக்குறையும்! தனுசு ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசியிலேயே ஜென்மச் சனியாக உலா வந்த சனிபகவான், இப்பொழுது 26.12.2020 அன்று இரண்டாமிடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். ஏழரைச்சனியில், ஜென்மச்சனி விலகி விட்டது. இப்பொழுது ‘பாதச்சனி’ என்று அழைக்கப்படும் குடும்பச்சனியின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. எனவே குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மங்கல ஓசை மனையில் கேட்கும். செல்வ வளம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு சனி சேர்வதால் ‘நீச்சபங்க ராஜயோகம்’ ஏற்படுகிறது. மேலும் உங்கள் ராசிநாதன் 2-ம் இடத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பண வரவு திருப்தி தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும்.
சுபகாரியங்கள் நிறைவேறும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் அகலும். தள்ளிப்போன கல்யாண காரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். எதிரிகளின் தொல்லை குறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறலாம். இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றது. கல்வி முன்னேற்றம், சுகம், வாகனம், தாய்வழி உறவு, இழப்புகளை ஈடுசெய்யும் அமைப்பு, எதிர்பாராத இடமாற்றம், ஆரோக்கிய நிலை, வெளிநாட்டு முயற்சி, தொழிலில் லாபம், உத்தியோக உயர்வு போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ளும் இடங்களில் உங்களுக்கு யோகம் தரும் சனியின் பார்வை பதிகிறது. எனவே, அவைகளில் எல்லாம் உங்களுக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. 4-ம் இட பார்வையால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தாய்வழி ஆதரவு உண்டு.
சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால், ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
சனியின் பார்வை பதினோராமிடத்தில் பதிவதால், தொழிலில் திருப்திகரமான லாபம் வந்து சேரும். இந்த நேரத்தில் ஒருசிலருக்கு கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகமும் உண்டு. இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். வெளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கலாம். அரசு சார்ந்த பணிகளில் சேர விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல் பிரமுகர்களுக்கு மேலிடத்தின் ஆதரவும், நல்ல பொறுப்புகளும் கிடைக்கலாம். வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து மகிழ்வீர்கள். வாகன யோகம் உண்டு.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அரசியல் அனுகூலம் பெற்றவர்களின் ஆதரவோடும், உங்கள் வாக்கு வன்மையாலும் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பெற்றோர் வழியில் இருந்த மனவருத்தங்கள் மறையும். தந்தை வழியில் ஆதாயம் தரும் தகவல் உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த பஞ்சாயத்துகள், நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவுகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். ‘வீடு வாங்க வேண்டும்’, ‘வாகனம் வாங்க வேண்டும்’ என்ற உங்களின் கனவு நனவாகப் போகின்றது. உஷ்ணாதிக்க நோய்கள் வந்து போகும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகவே அமைகின்றது. அஷ்டமாதிபதியாக சந்திரன் விளங்குவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்போது, பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த கல்யாண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவும், வெளிமாநிலம் செல்லவும் நீங்கள் செய்த முயற்சி கைகூடும். இக்காலத்தில் கும்ப ராசிக்குச் சனி செல்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாங்கிய சொத்தை விற்றுவிட்டு புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராகும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குரு வருகின்றார். எனவே சகோதரர்களால் நன்மை கிடைக்கும். வாழ்க்கைப் பாதையில் புதிய திருப்பம் உண்டாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். தைரியத்தோடு எதையும் செய்வீர்கள். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கப்போகின்றார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டாகும். மித மிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதியப் போவதால் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ் சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத் தக்கதாக இருக்கும். கேது பலத்தால் வருமானம் திருப்தி தரும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சகோதர ஒத்துழைப்பு குறையலாம். வாகன மாற்றம் வருவற்கான அறிகுறி தென்படும். தேக நலனுக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு. கேது பலத்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
வெற்றி பெற வைக்கும் வழிபாடு
வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதோடு இல்லத்துப் பூஜை அறையில் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அனுமன் படத்தை வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபட்டால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார்.
இக்காலத்தில் சகோதர பாசம் குறையலாம். உங்களைச் சார்ந்து இருப்பவர்களால் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையாமலும், உடன் இருப்பவர்களுடன் பகை ஏற்படாமலும் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சியால் பெண்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்ப உறவு பலப்படும். மங்கல காரியம் இல்லத்தில் நடைபெறலாம். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். கடன்சுமை குறையும். தாய் மற்றும் சகோதரர்கள் தக்க விதத்தில் உதவி செய்வர். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாறுதல்களும், ஊதிய உயர்வும் உண்டு. பாதச்சனி நடைபெறுவதால் ஆரோக்கியத்தில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு அகலும். எதிலும் கவனமுடன் இருந்து கொள்வது நல்லது.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
ஆறில் ராகு வருகிறது..அனைத்திலும் யோகம் தருகிறது..
தனுசு ராசி நேயர்களே!
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த கேது, செப்டம்பர் 1-ந் தேதியன்று விரய ஸ்தானம் எனப்படும் 12-ம் இடத்திற்குச் செல்கின்றார். அதே நாளில் இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு ஆறாமிடத்திற்கு வரப்போகின்றார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி குரு, மகர ராசிக்கு செல்கின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுகின் றார். உங்கள் ராசிநாதன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல என்றாலும் கூட, சனிப்பெயர்ச்சிக்குப் பின்னால் அவர் நீச்ச பங்க ராஜயோகத்தை உருவாக்குகின்றார். அதுமட்டுமல்ல அவரது பார்வையும் 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவாகின்றது.
அதன் பிறகு டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு சனி செல்கின்றார். இப்பொழுது ஏழரைச்சனியில் குடும்பச்சனியின் ஆதிக்கம் தொடங்குகின்றது. 2021-ம் வருடம் நவம்பர் மாதம் 13-ந் தேதி கும்ப ராசிக்கு குரு செல்கின்றார். இந்தக் கிரகப் பெயர்ச்சிகளைஅடிப்படையாக வைத்தும், உங்கள் சுய ஜாதகத்தில் ராகு, கேதுக்களின் பலமறிந்தும் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டம் தரும் ராகு! சுபவிரயம் தரும் கேது!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான் இப்பொழுது 6-ம் இடத்திற்கு வருகின்றார். இதனால் எதிர்ப்புகள், இன்னல்கள் தீரும். ஆரோக்கியம் சீராகும். அதிக வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். முன்னோர்கள் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். உத்தியோகத்தில் திடீர் உயர்வுகள் கிடைக்கும்.
விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் விரயம் ஏற்படும் என்றாலும் அதை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கலாம். மேலும் 12-ம் இடம் பயண ஸ்தானமாக கருதப்படுவதால் இடமாற்றம், ஊர் மாற்றம் போன்றவை ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய நல்ல மாற்றம் கிடைக்கும்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். குடும்பத்தினரை திருப்திப்படுத்தவும், குழந்தைச் செல்வங்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் ஒரு தொகையைச் செலவிட வேண்டியதிருக்கும். தெய்வத் திருப்பணிக்காகவும் செலவிடும் சூழ்நிலை உருவாகும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட இடத்திற்கு விரும்பியபடியே மாறுதல் கிடைக்கலாம். தொழில் புரிபவர்கள் வாடகைக் கட்டிடத்திலிருந்து சொந்தக்கட்டிடத்திற்கு மாறும் யோகம் உண்டு.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
சந்திரன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த கவனம் தேவை. எதிர்மறைச் சிந்தனைகள் அதிகரிக்கும். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். ஊர் மாற்றங்களும், இடமாற்றங்களும் திருப்தியளிக்காது. தொழிலில் ஏமாற்றங்களும், இழப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் இருந்து திடீரென விலக நேரிடலாம்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும்பொழுது, எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார விருத்தி யுண்டு. அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். பங்காளிப் பகை மாறும். தந்தை வழியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. சொந்த பந்தங்களின் அரவணைப்போடு சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்று பணிபுரிய வேண்டுமென்ற ஆர்வம் உண்டாகலாம். எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் முதலில் புதன் சாரத்திலும், பிறகு சனி சாரத்திலும், அதன்பின்பு குரு சாரத்திலும் சஞ்சரிக்கப்போகின்றார். ‘நிழல் கிரகம்’ என்று வர்ணிக்கப்படும் கேது பகவான், இந்த காலகட்டத்தில் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வாரா என்பதைப் பற்றிப்பார்ப்போம். பாத சார அடிப்படையில் சஞ்சரிக்கும் பொழுது பகை கிரகத்தின் சாரமாகவே இருக்குமேயானால் அதற்குரிய பரிகாரங்களையும், வழிபாடுகளையும் செய்துகொண் டால் ஓரளவேனும் நற்பலன்களைப் பெறமுடியும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தரும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டுவந்து அணிந்து அழகு பார்க்கும் சூழ்நிலை உருவாகும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். ‘நேர்முகத் தேர்விற்கு பலமுறை சென்றும் அழைப்பு வரவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு வேலை கிடைப்பது பற்றிய விபரம் வரலாம். பொதுவாக இக்காலத்தில் செய்யும் செயல்களில் வெற்றி அதிகம் கிடைக்கும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 2, 3 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். வாக்கு, தனம், குடும்பம், சகோதரம், வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களுக்கெல்லாம் அதிபதியாக சனி விளங்குவதால், அவரது சாரத்தில் கேது வரும்பொழுது குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். பணநெருக்கடி அகலும். துரித கதியில் வளர்ச்சி ஏற்படும். நீண்டகால எண்ணங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். ஒவ்வொரு செயல்பாடுகளிலும் குறை கண்டுபிடித்த உறவினர்கள் இப்பொழுது உறுதுணையாக இருப்பர். வெற்றிப் படிக்கட்டில் ஏற எடுத்த முயற்சிகள் அனைத்திலும் அனுகூலம் கிடைக்கும்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு பகவான் உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர். எனவே ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். என்றைக்கோ கொடுத்த தொகை இப்பொழுது வசூலாகும். இடம் வாங்கி மனைகட்ட வேண்டுமென்ற எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியில் வீடாகவே வாங்கும் யோகம் வந்து சேரும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனைகள் தொழில் முயற்சிக்கு கைகொடுக்கும். தாய்வழி ஆதரவு உண்டு. தடைகற்கள் எல்லாம் படிக்கற்களாக மாறும் நேரமிது. கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
6-ம் இடத்து ராகுவால் அனுகூலங்கள் கிடைக்கவும், 12-ம் இடத்து கேதுவால் சுபவிரயங்கள் அதிகரிக்கவும் ராகு-கேதுக்களுக்குரிய கவசம் பாடி வழிபடுவது நல்லது. பூஜையறையில் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து வியாழக்கிழமை தோறும் இனிப்புப் பொருள் நைவேத்தியமிட்டு குரு கவசம் பாடி வழிபட்டால் குடும்ப முன்னேற்றம் கூடும்.
பெண்களுக்கு...
ராகு-கேதுக்களின் பெயர்ச்சியின் மூலம் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். ஜென்மச் சனி விலகிய பிறகு காரியங்கள் தடையின்றி நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமை தோறும் பூஜையறையில் நாககவசம் பாடி வழிபடுவதன் மூலம் சர்ப்ப கிரகங்கள் சந்தோஷத்தை வழங்கும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
இரண்டில் வந்தது குரு பகவான், இனிமேல் வெற்றிகள் வந்திணையும்!
தனுசு ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசியிலேயே சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று தன ஸ்தானம் எனப்படும் 2-ம் இடத்திற்கு வருகின்றார். ஜென்மச் சனி மற்றும் ஜென்ம குருவின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த உங்களுக்கு, அற்புதமான பெயர்ச்சியாக இந்தக் குருப்பெயர்ச்சி அமையப் போகின்றது. வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்தில் இப்பொழுது குரு பகவான் சஞ்சரிப்பதால், எதிர்பார்த்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
குரு நீச்சம் பெறுவது ஒருவழிக்கு நன்மைதான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நீச்சம் பெற்றதால், மனக்குழப்பங்கள் அகலும். இடையில் மூன்றாம் இடத்திற்கும் குரு செல்கின்றார். வக்ர இயக்கத்திலும் சில மாதங்கள் இருக்கின்றார். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும் ஏழரைச் சனியால் இடர்பாடுகள் வரும்பொழுது, சனிக்கிமையில் அனுமன் வழிபாடும், வியாழக்கிழமையில் குரு வழிபாடும் செய்வதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக்கொள்ள இயலும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் அந்த இடம் புனிதமடைகின்றது. எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றை குறிப்பது 6-ம் இடமாகும். எனவே அவை மூன்றின் தொல்லையும் உங்களுக்கு ஏற்படாது. எதிரிகள் உதிரிகளாவர். உங்கள் மீது தொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்கிக்கொள்வர். பஞ்சாயத்துக்கள் சாதமாக முடியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இனிய மாற்றங்கள் வந்து சேரும். உயர் அதிகாரிகள் கேட்ட சலுகைகளைக் கொடுப்பர். உடல்நலம் பற்றிய பயம் அகலும்.
குருவின் பார்வை 8-ம் இடத்தில் பதிவதால், இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். இழந்த பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கலாம். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல் வரலாம். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள், மீண்டும் வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகள் கைகூடலாம். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.
குருவின் பார்வை 10-ம் இடத்தில் பதிவதால் முத்தான தொழில் வாய்க்கும். முன்னேற்றம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் பங்குதாரர்களை தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்வீர்கள். அரசு வழி தொல்லைகள் மறைந்து போகலாம். ஆயினும் ஏழரைச்சனியில் இன்னும் பாதச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது. உங்கள் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் என்பதால் நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். பிதுரார்ஜித ஸ்தானம் மற்றும் பாக்ய ஸ்தானம் என்று அழைக்கப்படும் இடத்திற்கு அதிபதியான சூரியன் சாரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்து நன்மைகளும் படிப்படியாக வந்துசேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு திடீரென அதிகாரப் பதவியும், பொறுப்புகளும் வரலாம். பிள்ளைகள் வழியில் விஸ்வரூபம் எடுத்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் இருந்த தடைகள் அகலும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியானவர், சந்திரன். எனவே இக்காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது. ‘நினைத்தது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருக்கின்றதே’ என்று கவலைப்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் கூட உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. உங்கள் முன்னேற்றத்தை அல்லது முக்கியத் தகவல்களை உடனிருப்பவர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளக்கூடாது. வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். இந்தச் சோதனை காலத்தை சாதனைக் காலமாக மாற்ற, குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சில நல்ல பலன்கள் நடைபெறும். ‘குருமங்கள யோகம்’ செயல்படும் நேரமிது. இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் கைகூடிவரும். உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ, பேரன் பேத்திகளுக்கோ, உடன்பிறப்புகளுக்கோ, காலாகாலத்தில் நடைபெற வேண்டிய கல்யாணங்கள் நல்லவிதமாக முடியும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் மேற்படிப்பு, வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. வீடு கட்டுதல், கட்டிய வீட்டைப் பழுது பார்த்தல் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள்். பகையாக இருந்த நண்பர்கள் உறவாக மாறுவர். தங்க நகைகள் வாங்கும் யோகம் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில்செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு அனைத்து வழிகளிலும் நன்மைகளை வழங்குவார். தொட்டது துலங்கும். துணையாக இருப்பவர்கள் தோள்கொடுத்து உதவுவர். வெற்றி வாய்ப்புகள் வீடு தேடிவரும். சுற்றமும், நட்பும் பாராட்டும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. எனவே வரன்கள் வாசல் தேடி வரும். வாங்கல் - கொடுக்கல்கள் திருப்தி தரும். வருமானம் உயரும். வாகன யோகம் முதல் அனைத்து யோகங்களும் வந்துசேரும். தேக நலனில் மட்டும் அப்போதைக்கப்போது கொஞ்சம் கவனம் செலுத்துவது நல்லது. தந்தைவழி உறவில் இருந்த விரிசல் அகலும்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். மகரம், கும்பம் இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். இந்த வக்ர காலம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப்போகின்றது. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறும்பொழுது யோகத்தை வழங்கும். எனவே வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். வருமானம் உயரும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி ஆடம்பரப் பொருட்களையும் வாங்கி மகிழ்வீர்கள். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நேரமிது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்துப் பூஜை அறையில் ராமர் பட்டாபிஷேகப் படம் வைத்து விஷ்ணு கவசம் பாடி திங்கட்கிழமை தோறும் வழிபாடு செய்வது நல்லது. வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குரு கவசப் பாராயணம் செய்து தென்முகக் கடவுளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
தனுசு ராசியில் பிறந்த பெண்களுக்கு, தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். இடமாற்றம், வீடு மாற்றங்கள் இனிமை தரும். ஏதேனும் ஒரு துறையில் சாதனை நிகழ்த்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு திடீரென எதிர்பார்த்த முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடும் உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/17/2021 11:05:04 PM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Sagittarius