தொழில் முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடி கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் செல்ல சிலரின் சந்திப்பு பலன் தரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.
9.4.2021 முதல் 15.4.2021 வரை
உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தள்ளிவைத்த பணி ஒன்றை உடனே செய்ய வேண்டியதிருக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் அவசரம் கருதி, முக்கிய வேலையை விரைவாகச் செய்து கொடுப்பீர்கள். குடும்பத்தில் திட்டமிட்ட சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்த வாரம் புதன்கிழமை பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வழிபடுங்கள்.
பங்குனி மாத ராசிபலன்கள் 14.3.2021 முதல் 13.4.2021 வரை
ரிஷப ராசி அன்பர்களே!
சார்வரி வருடம் பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் தன பஞ்சமாதிபதியான புதனோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். எனவே இந்த மாதம் முழுவதும் நல்ல வாய்ப்புகள் வரும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அதிகார வர்க்கத்தினரின் பழக்கத்தால் அதிக நன்மைகளை அடைவீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும் நேரம் இது.
உச்ச சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிநாதன் சுக்ரன், மார்ச் 18-ந் தேதி மீன ராசியில் உச்சம் பெறுகின்றார். எனவே தொட்ட காரியங்கள் வெற்றி பெறும். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். நிதிநிலை சீராகும். திருமணம், வீடு மாற்றம் போன்றவற்றில் இருந்த தடை அகலும். தொழில் சூடுபிடிக்கும். அரசு வழியில் கடன்கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.
பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். பிரபலமானவர்களால் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.
மீன புதன் சஞ்சாரம்
மார்ச் 25-ந் தேதி, மீன ராசிக்கு புதன் செல்கின்றார். இது அவ்வளவு நல்லதல்ல. தன பஞ்சமாதிபதியான புதன் நீச்சம் பெறுவதால் பணப்பற்றாக்குறை ஏற்படும். பாகப்பிரிவினை இழுபறியாகும். உறவினர்கள் உதாசீனப்படுத்துவர். கடன்சுமை தீர்ந்தாலும், புதிய கடன்களும் உருவாகும். கல்விக்காக எடுத்த முயற்சியில் சில தடைகள் ஏற்படும். உடன்பிறப்புகள் உங்களை விட்டு விலகுவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை ஏற்படும்.
கும்ப குருவின் சஞ்சாரம்
ஏப்ரல் 5-ந் தேதி குரு பகவான், கும்ப ராசிக்கு அதிசாரமாகச் செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களைப் பார்க்கின்றார். எனவே குடும்பத்தில் சில மங்கல நிகழ்வுகள் நடைபெறும். ‘தொழில் தொடங்க பணம் இல்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது பணம் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.
மேஷத்தில் புதன், சுக்ரன் சஞ்சாரம்
ஏப்ரல் 10-ந் தேதி மேஷ ராசிக்குப் புதன் செல்கின்றார். அதேபோல் ஏப்ரல் 11-ந் தேதி மேஷ ராசிக்கு சுக்ரன் வருகிறார். இரண்டும் ஒன்று சேரும் பொழுது, ‘புத சுக்ர யோகம்’ உருவாகின்றது. தனாதிபதியான புதன், விரய ஸ்தானத்தில் சஞ்சாரிக்கும் பொழுது, பல வழிகளிலும் விரயங்களை ஏற்படுத்தும். பக்குவமாகப் பேசினாலும் பகை உருவாகலாம். இதுபோன்ற காலங்களில் சுப விரயங்களை மேற்கொள்வது நல்லது.
மிதுன செவ்வாய் சஞ்சாரம்
ஏப்ரல் 13-ந் தேதி, மிதுன ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். ஓரளவு நன்மை செய்யும் காலமாகவே இது அமையப் போகின்றது. விரயாதிபதி செவ்வாய் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், விரயத்திற்கேற்ற தனலாபம் வந்து கொண்டேயிருக்கும். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கலாம். இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மார்ச்: 15, 16, 22, 23, 27, 28, மார்ச்: 10, 11மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் வசதி வாய்ப்புகள் பெருகும். வாழ்க்கைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். கணவன் - மனனவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் கல்யாண காரியங்களில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடத்தில் சலுகைகள் கிடைக்கும். புதிய வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். நந்தி வழிபாடு நன்மை தரும்.
14.4.2021 முதல் 13.4.2022 வரை
ரிஷபம்
சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
ரிஷப ராசி நேயர்களே!
10-ம் இடத்தில் குருவோடும், விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன், சந்திரன் ஆகியவற்றின் சஞ்சாரத்தோடும், புதிய ‘பிலவ’ தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. தா்ம கர்மாதிபதி யோகத்தைக் கொடுக்கும் சனி, பாக்கிய ஸ்தானத்தில் பலம்பெற்றுச் சஞ்சரிக்கின்றார். அப்புறமென்ன கவலை?, வெற்றிக்கொடி பறக்கப் போகும் இந்த ஆண்டில், வியக்கவைக்கும் தகவல்கள் ஏராளமாக உங்களை வந்தடையப் போகின்றது. தடுமாற்றங்கள் அகலும். நிலைமை சீராகி நிம்மதி கொடுக்கும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், செவ்வாய் வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கின்றார். பூமிகாரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பரிவா்த்தனை யோகம் பெறுவதால், பூமி வாங்கும் யோகம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே ‘இடம் வாங்க முடியவில்லையே?’ என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இப்பொழுது காலம் கனியப் போகின்றது. வருடத் தொடக்கத்திலேயே, யோக பலம் பெற்ற நாளில் உங்கள் ஜாதகத்திற்கு சகல பாக்கியங்களையும் வழங்கும் தெய்வத்தைக் கண்டறிந்து வணங்குங்கள்.
புத - ஆதித்ய யோகம், புத -சுக்ர யோகம் ஆகிய இரண்டு யோகங்களும், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே உருவாகின்றது. மகர குருவின் சஞ்சார காலத்தில் நீச்ச குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்கும் குருபகவான் நீச்சம் பெற்றுச் சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வையால் கிடைக்கும் பலன்கள் மிகுந்த நன்மை தருவதாக அமையும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது ஆதாயம் தரும் தகவல்கள் வாழ்க்கைத் துணை வழியே வரலாம். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். கடமையை சரிவரச் செய்து நிலைமையை சீராக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
குருவின் வக்ர இயக்கம்
ஆண்டின் தொடக்கம் முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் அதிசார கதியில் குருபகவான் சஞ்சரிக்கின்றார். அதோடு 16.6.2021 முதல் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். மீண்டும் 14.9.2021 முதல் 12.10.2021 வரை, மகர ராசியில் குருபகவான் வக்ரம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்.
உங்கள் ராசியைப் பொறுத்தவரை 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு பகவான். அஷ்டமாதிபதி நீச்சம் பெறுவது யோகம்தான். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்கும் குருபகவான் வக்ரம் பெறும்பொழுது அதிகபட்சமான நன்மைகள் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி பிரமிக்கதக்கதாக இருக்கலாம். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
குருப்பெயா்ச்சி காலம்
ஆண்டின் தொடக்கத்தில் கும்ப ராசியில் அதிசார கதியில் சஞ்சரிக்கும் குரு பகவான், மீண்டும் வக்ர கதியில் மகர ராசிக்கு வந்து, அதன் பிறகு 13.11.2021 அன்று முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதன் பிறகு மீண்டும் 13.4.2022-ல் மீன ராசிக்கு பெயா்ச்சியாகிச் செல்கின்றார். கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்களெல்லாம் புனிதமடைகின்றன. குரு பார்வை 2-ம் இடத்தில் பதிவதால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் படிப்படியாக மாறும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆதாயம் தரும் தகவல் வந்துசேரும். புகழ்மிக்கவர்களின் தொடர்பால் சில காரியங்கள் முடிவடையும்.
குருவின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் எதிரிகள் உதிரியாவர். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள், அதுவாகவே விலக்கப்படும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். வெளிநாட்டில் இருந்து அனுகூலமான தகவல் கிடைக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும்.
ராகு-கேது பெயா்ச்சி காலம்
21.3.2022 அன்று மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். உங்கள் ராசியைப் பொறுத்தவரை 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் வரப்போகிறார்கள். 12-ம் இடம் என்பது விரய ஸ்தானம். எனவே, விரயங்கள் கூடுதலாகவே இருக்கும். 6-ல் கேது இருப்பதால் உத்தியோகத்தில் சில பிரச்சினைகள் உருவாகலாம். சா்ப்ப சாந்திப் பரிகாரங்களை செய்து கொள்வதன் மூலம் தடைகள் அகன்று தக்க பலன் கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, மகர ராசியில் சனிபகவான் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனிபகவான். அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. எனவே இக்காலத்தில் கொஞ்சம் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும். உறவினா் பகை உருவாகலாம்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை, 4.6.2021 முதல் 2.7.2021 வரை மற்றும் 24.10.2021 முதல் 7.12.2021 வரை, செவ்வாய் - சனி பார்வை உள்ளது. இக்காலத்தில் பகைக் கிரகங்களின் பார்வை இருப்பதால், எதையும் திட்டவட்டமாகச் செய்ய இயலாது. எதிரிகளின் பலம் மேலோங்கி இருக்கும். எவ்வளவு விழிப்புணர்ச்சியோடு இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கத்தான் செய்யும். ‘வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லையே’ என்று ஆதங்கப்படுவதோடு, சொத்துக்களை விற்கவும் நேரிடும். மருத்துவச் செலவுகளும், மனக்கலக்கங்களும் உருவாகும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சுபச்செலவுகளை உருவாக்கும் ஆண்டாகும். உடல்நலனில் ஒவ்வாமை நோய் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். 10-ல் குரு இருப்பதால் பதவி மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம். கணவன் - மனைவிக்குள் அன்பும், ஆதரவும் பெருகும். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு, பிரபலமானவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சனி-செவ்வாய் பார்வை காலத்தில் விரயங்கள் அதிகரிக்கும். பிறரை நம்பிச் செயல்படுவது இயலாது. வெள்ளிக்கிழமை தோறும் அம்பிகையை வழிபடுங்கள்.
வளா்ச்சி தரும் வழிபாடு
பிரதோஷ விரதமிருந்து நந்தீஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்வதோடு, வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரரை யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் யோகங்கள் படிப்படியாக வந்து சேரும். நினைத்தது நிறைவேறி நிம்மதி கிடைக்கும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஒன்பதாமிடத்தில் சனி, உயர்வுகள் வந்திடும் இனி! ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 9-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகிவிட்டது. எனவே இனி தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. தொழில் ஸ்தானத்திற்கும், பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியானவர் என்பதால், சனி பகவான் தன் சொந்த வீடான மகர ராசியில் சஞ்சரிக்கும் பொழுது எண்ணற்ற நற்பலன்களை வழங்குவார். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கின்றார். அந்த குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. மேலும் அங்குள்ள குருவோடு இப்பொழுது சனியும் சேர்ந்து ‘நீச்சபங்க ராஜயோகம்’ ஏற்படப் போகின்றது. மகரத்தில் குரு இருக்கும் பொழுது, சனி சாதகமான பலன்களை ஏராளமாக கொடுக்கலாம்.
பொன் பொருள் சேர்க்கை உண்டு
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பிதுர்ரார்ஜித ஸ்தானத்திற்கு சனி வருகின்றார். அதுமட்டுமல்லாமல் 9-ம் இடம் பாக்கிய ஸ்தானமாகவும் கருதப்படுகின்றது. அதே நேரத்தில் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி விளங்குவதால், இதுவரை தடைப்பட்ட உயர்வுகள் தானாக வந்து சேரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும் விதத்திலேயே இந்த சனிப்பெயர்ச்சி அமைகின்றது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும், எதிர்பார்த்த ஊதிய உயர்வும் வந்து சேரும். கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். பிதுர்ரார்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். உடல்நலம் சாதாரண சிகிச்சையிலேயே குணமாகி உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 3, 6, 11 ஆகிய மூன்று இடங்களையும் முறையாகப் பார்க்கின்றார். எனவே இதுவரை பிரச்சினையுடன் வாழ்ந்த உங்களுக்கு மன அமைதி கிடைக்கப்போகின்றது. 3-ம் இடத்தை சனி பார்ப்பதால் முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். உடல் ஆரோக்கியம் சீராகும். மேலும் யோககாரகனாக சனி விளங்குவதால், உத்தியோகத்தில் திடீரென புதிய பொறுப்புகளும், அதற்கேற்ற விதம் சம்பள உயர்வுகளும் கூட கிடைக்கலாம்.
சனியின் பார்வை 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் பதிவதால், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரிய சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். சுக ஸ்தானாதிபதி சூரியன் என்பதால், சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். குடும்பத்தில் விரிசல்கள் அகன்று உறவு பலப்படும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி தொடரும்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, திருமண வாய்ப்புகள் கைகூடும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். இடையில் கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கப் போகின்றார். எனவே ‘சொந்த வீடு கட்டியும் அதில் வசிக்க முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதில் குடியேறும் முயற்சி கைகூடும்.
குருப்பெயர்ச்சிக் காலம்
சனிப்பெயர்ச்சி காலத்தில், மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 10-ல் குரு வருவதால் பதவி மாற்றங்களும், இடமாற்றங்களும் உருவாகலாம். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘விபரீத ராஜயோக’ அடிப்படையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் ராகு-கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. அப்போது மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மனநிம்மதி குறையும். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். வாங்கிய இடத்தை விற்க நேரிடும். தூரதேசத்தில் உள்ள சொந்தங்களால் சில நன்மைகள் ஏற்படும். குடும்ப ரகசி யங்களை வெளியில் சொல்வதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படலாம்.
8.10.2023-ல் நடைபெறும் பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். அப்பொழுது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம் பலம்பெறுகின்றது. வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். பிள்ளைகள் வெளிநாடு செல்ல எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இதுவரை கேட்டுக் கிடைக்காத சலுகைகள் இப்பொழுது கிடைக்கலாம்.
வெற்றிக்குரிய வழிபாடு
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபட்டு வருவதோடு, இல்லத்து பூஜை அறையில் அபிராமி அம்மன் படம் வைத்து, அபிராமி அம்மன் பதிகம் பாடி வழிபட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எளிதில் வெற்றி கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரம் அடைகிறார்.
இந்த காலத்தில் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளை நம்பி செயல்பட இயலாது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். இக்காலத்தில் யாரையும் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுதும் கவனம் தேவை.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி, உங்கள் ராசிக்கு சாதகமான பெயர்ச்சியாகவே இருக்கின்றது. கல்யாணம் மற்றும் குழந்தை பாக்கியம் போன்றவற்றில் இதுவரை இருந்த தடைகள் அகலும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பொருளாதார நிலை உயரும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகளும் எளிதில் கிடைக்கும். சனியின் வக்ர காலத்தில் பிறருக்குப் பொறுப்புச் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
ராசிக்கு வருகிறார் ராகு..யோசித்துச் செயல்படுவது நல்லது..
ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருந்த ராகு பகவான், செப்டம்பர் 1-ந் தேதி முதல் உங்கள் ராசியிலேயே பிரவேசிக்கப் போகின்றார். அதே நேரத்தில் சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப் போகின் றார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்தில் சஞ்சரித்து அந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் பவனி வருகின்ற பொழுது அதன் பாதசாரத்திற்கேற்ற பலன்களை வழங்குவர்.
நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். மேலும் 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்கு சனி செல்கின்றார். அஷ்டமத்துச் சனி விலகி விடுகின்றது. மேலும் 2021 நவம்பர் மாதத்தில் கும்பத்திற்கு குரு செல்கின்றார். அங்கிருந்து கொண்டு உங்கள் ராசிக்கு 2, 4, 6 இடங்களை பார்க்கப் போகின்றார்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு, இப்பொழுது ஜென்ம ராசிக்கு மாறுகின்றார். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கப் போறார். இதன் அடிப்படையில் பலன்களைப் பார்ப்போம்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். செவ்வாய், உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே இடமாற்றம், வீடு மாற்றங்கள் வரலாம். உத்தியோகத்தில் எதிர் பார்க்காத மாற்றங்கள் வந்தாலும், அதுவும் நீங்கள் விரும்பத்தக்கதாகவே அமையும். பூர்வீக சொத்துக்களையோ அல்லது புதிதாக வாங்கிய சொத்துக்களையோ ஒருசிலர் விற்க நேரிடலாம். வெளிநாட்டில் இருக்கும் உறவினர் அல்லது நண்பர்கள் மூலம் ஒருசிலருக்கு உதவிகள் கிடைக்கலாம்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12.9.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திற்கு அதிபதியாவார். மூன்றாமிடம் என்பது வெற்றிகள் ஸ்தானம். அதோடு உடன்பிறப்புகள் மற்றும் தேக பலம், பணியாளர்கள், தைரியம், தன்னம்பிக்கை போன்றவற்றைக் குறிக்கும் இடமாகும். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். கடல் வணிகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கை கூடும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவோடு ஒரு நல்ல காரியம் நடைபெறும். இக்காலத்தில் எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். சூரியன் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு அதிபதியாவார். வீடு, வாகனம், தாய், இடம், பூமி, சவுகர்யம், கல்வி, சந்தோஷம் அனைத்தையும் குறிப்பது 4-ம் இடமாகும். எனவே அதற்குரிய இடத்தின் கிரக சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி கைகூடும். தாயின் உடல் நலம் சீராகும். ஒருசிலருக்கு வீடு கட்டும் யோகமோ அல்லது வாங்கும் யோகமோ ஏற்படும். எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும் நேரமிது.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
கேதுபகவான் முதலில் புதன் சாரத்திலும், பிறகு சனி சாரத்திலும், அதன்பிறகு குரு சாரத்திலும் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக கிடைக்கும் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, தனவரவு தாராளமாக வந்து சேரும். புதன், உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். தன பஞ்சமாதிபதியின் சாரத்தில் கேது உலா வரும் பொழுது, வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். குடும்பப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வேலை கிடைக்காத பிள்ளைகளுக்கும் வேலை கிடைக்கும். மாலை கிடைக்காத பிள்ளைகளுக்கும் மாலை கிடைக்கும். உதிரி வருமானங்கள் வரக்கூடிய நேரமிது. புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவருடைய சாரத்தில் கேது பவனி வரும் பொழுது, தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வளம் அதிகரிக்கும். முன்னோர்கள் கட்டிய ஆலயத் திருப்பணிகளை தொடர்ந்து செய்யத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தொழிலை விரிவு செய்ய நினைத்து புதிய பணியாளர்களைச் சேர்க்கும் முயற்சியிலும் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாகவே வந்து சேரும்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
குரு பகவான், உங்கள் ராசிக்கு 8, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே அவரது சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, இழப்புகளை ஈடு செய்ய புதிய வாய்ப்புகள் வரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். முன்னேற்றப் பாதையில் செல்ல முக்கியப் புள்ளிகள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சிக்கு வெளி மாநிலங்களிலிருந்தும், தூர தேசங்களில் இருந்தும் கூட அழைப்புகள் வரலாம். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கும். ஒருசிலர் பூர்வீகச் சொத்துக்களை விற்றுவிட்டுப் புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஜென்ம ராகுவால் சிறப்பான பலன்களைப் பெறவும், சப்தம கேதுவால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையவும், இல்லத்துப் பூஜையறையில் சிவன் படம் வைத்து திருவாசகம் படித்து வழிபடுவது நல்லது. வாய்ப்பிருக்கும் பொழுது ஆலயங்களுக்குச் சென்று பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும்.
பெண்களுக்கு...
இந்த ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக ஜென்ம ராகுவாக சஞ்சரிப்பதால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை உங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. ஜனவரி 2021-க்கு மேல் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் கருமாரியம்மன் வழிபாடும், பாராயணமும் செய்ய வேண்டும்.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
ஒன்பதில் வந்தது குருபகவான், உன்னத வாழ்வு இனி அமையும்!
ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 9-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அங்கு சுமார் ஓராண்டு காலம் வீற்றிருந்து, அதன் பார்வை பலனால் உங்கள் விருப்பங்கள் நிறைவேற உறுதுணையாக இருப்பார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகை கிரகமான குரு, இப்பொழுது உங்கள் ராசியைப் பார்க்கப் போகின்றார். ஆனால் குரு பகவான் இருக்குமிடம் நீச்ச வீடாகும். இருப்பினும் வலிமை இழந்த குரு பார்ப்பதால், சுக்ரன் ஆதிக்கம் பெற்ற உங்கள் ராசிக்கு நன்மைகளே கிடைக்கும்.
இடையில் சில மாதங்கள் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு செல்கின்றார். குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். ‘ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்’ என்பது பழமொழி. சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றவர்களுக்கு பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். மிஞ்சும் அளவிற்கு பலன் கிடைக்கும். இடையில் ஏதேனும் இடையூறுகள் வருமேயானால், வியாழக்கிழமைதோறும் விரதமிருந்து குருவை வழிபடுவதன் மூலம் நன்மைகளை வரவழைத்துக்கொள்ளலாம்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசியையும், 3, 5 ஆகிய இடங்களையும் பார்க்கப் போகின்றார். குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் உடல்நலம் சீராக இருக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் வெற்றிகள் ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழில், உத்தியோகம், பொதுநலம், அரசியல் போன்றவற்றில் நீங்கள் நினைத்தவை நடைபெறும். பணியாளர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் புனிதமடைகின்றது. இதன் பலனாக உங்களுக்கு கிடைக்கும் யோகங்கள் அனைத்தும் படிப்படியாக வந்து சேரும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சூரியன். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, சுகங்களும், சந்தோஷங்களும் வந்து சேரும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். தாய்வழி ஆதரவு கிடைக்கும். ‘வீடு கட்ட வேண்டும், இடம் வாங்க வேண்டும், கட்டிய வீட்டைப் பழுது பார்க்க வேண்டும்’ என்றெல்லாம் கனவு கண்டவர்களுக்கு அவை கைகூடும் நேரமிது. அதற்காக கடன்கேட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாலும் சரி, வங்கிகளின் ஒத்துழைப்பை நாடினாலும் சரி உடனடியாக பலன் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். பயணங்கள் பலன்தருவதாக அமையும். நீண்ட நாட்களாக புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்று நினைத்தவர்கள், இப்பொழுது அதைச் செயல்படுத்த எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத் தில் இதுவரை மறுக்கப்பட்ட சலுகைகள் இப்போது கிடைக்கும். உழைப்புக்கு ஏற்ப பலன் கிடைப்பதோடு, உடன் பணிபுரிபவரால் ஏற்பட்ட உபத்திரவங்களும் குறையும்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு சகாய ஸ்தானாதிபதி ஆவார். எனவே எதிர்பார்த்த நன்மைகள் எளிதில் கிடைக்கும். உடன்பிறப்புகள் பகை மறந்து செயல்படுவர். தொழில் புரிவோர், வளர்ச்சியை முன்னிட்டுப் புதிய பணியாளர்களை சேர்த்துக்கொள்வர். திறமை பளிச்சிடும். தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
இக்காலத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாயின் சாரத்தில் சஞ்சரிப்பதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். விலகிச்சென்ற வரன்கள் கூட விரும்பி வரலாம். மனமுறிவு ஏற்படும் அளவிற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட தம்பதியர் கூட மனம் மாறி ஒற்றுமையாக வாழ வழிபிறக்கும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம் (5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அதன் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும் வாய்ப்பு உண்டு. ‘நடக்குமோ, நடக்காதோ’ என்று நினைத்த சில காரியங்கள் துரிதமாக நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். வேலைவாய்ப்புக்காக புதிய இடத்தில் முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவி சாய்ப்பர். கேட்ட சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு அஷ்டம லாபாதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் இக்காலம், ஒரு பொற்காலமாகும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகம் என்பதால் பகைவன் வலிமை இழக்கும் போது நன்மைகள் அதிகம் நடைபெற வேண்டுமல்லவா?. எனவே பொருளாதார நிலை உயரும். புதியவர்களின் சந்திப்பால் புதிய திருப்பங்கள் ஏற்படும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கிடைக்கும். மாற்று மருத்துவத்தால் உடல்நலத்தை சீராக்கிக்கொள்ளலாம். தொழில் வளம் பெருகும். உத்தியோக முன்னேற்றம் எதிர்பார்த்தபடி நடைபெறும். பிரதோஷ வழிபாட்டின் மூலம் பெருமைகள் சேரும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் சிவ குடும்பப்படம் வைத்து, தினமும் திருவாசகம் பாடி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமை அன்று குரு கவசம் பாடி குரு பகவானையும் வழிபட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு, இந்தக் குருப்பெயர்ச்சி இனிய பெயர்ச்சியாக அமையப்போகின்றது. மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்பும், ஆதரவும் கூடும். குடும்ப முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வர். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும். தாய்- தந்தையர்களின் ஆதரவு திருப்தி தரும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு முன்னேற்றத்துடன் கூடிய இடமாற்றம் கிட்டும். குரு வழிபாடு குதூகலம் வழங்கும்.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
4/11/2021 8:31:26 AM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Taurus