மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்வீர்கள். கொடுத்தபாக்கிகள் வசூலாகும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை.
14.1.2021 முதல் 12.2.2021 வரை
கன்னி ராசி நேயர்களே!
சார்வரி வருடம் தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் பஞ்சம ஸ்தானத்தில் நான்கு கிரகங்களோடு கூடியிருக்கின்றார். தற்சமயம் அர்த்தாஷ்டமச் சனி விலகிவிட்டது. விலகிய சனியோடு குரு இணைந்து இருப்பதால், தடைக்கற்கள் இனி படிக்கற்களாகும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது.
மூன்றில் கேது, ஒன்பதில் ராகு
இம்மாதம் சகோதர மற்றும் சகாய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கின்றார். எனவே உடன்பிறப்புகளின் குணத்தில் மாற்றம் ஏற்படும். வழக்குகளில் இழுபறி நீடிக்கும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும்பொழுது, சில எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 9-ல் ராகு இருப்பதால் தந்தை வழி அனுகூலங்கள் குறையலாம். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்க முயற்சிப்பீர்கள். முன்னோர்கள் கட்டி வைத்த ஆலயத் திருப்பணிகளை தொடர்ந்து செய்ய முன்வருவீர்கள்.
பலம் பெறும் பஞ்சம ஸ்தானம்
இம்மாதம் பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன், சூரியன், குரு, சனி, புதன் ஆகிய ஐந்து கிரகங்கள் ஒன்றுகூடி, கூட்டுக் கிரக யோகத்தை உருவாக்கு கிறார்கள். இது யோகம்தான். நற்பலன்அதிகம் கிடைக்கும். விரயாதிபதி சூரியன், சனியோடு கூடியிருப்பதால் விரயங்கள் அதிகரித்தாலும், பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படாது. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
மகர - புதன் வக்ரம்
ஜனவரி 21-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை மகர ராசியில் புதன் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதனாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதி யாகவும் விளங்குபவர் புதன். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் நன்மை செய்யும் என்றாலும், புதன் உங்கள் ராசிநாதனாகவும் இருப்பதால் ஆரோக்கிய தொல்லை ஏற்படும். அதே சமயம் தொழில், உத்தியோகம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகளிலும் வெற்றி உண்டு.
மகர - குரு சஞ்சாரம்
தற்சமயம் மகரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் நீச்சம் பெற்றிருந்தாலும், சனியோடு இணைந்திருப்பதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது. ஜனவரி 22-ந் தேதி குரு பகவான் மேலும் வலிமை இழக்கின்றார். இருப்பினும் அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவது யோகம்தான். புத்திக்கூர்மை யுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மகர - சுக்ரன் சஞ்சாரம்
ஜனவரி 29-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 2, 9-க்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானத்திற்கு செல்வது யோகம்தான். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. பூர்வீக சொத்து விற்பனையால் லாபம் ேசரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைய வழிபிறக்கும். விட்டுப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம்.
இம்மாதம் புதன்கிழமை தோறும் அனுமனை வழிபட்டு வருவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 24, 25, 28, 29, பிப்ரவரி: 3, 4, 8, 9 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிளிப்பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். பொருளாதா ரத்தில் நிறைவு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் உருவாகும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். சகோதரர்களை அனுசரித்துச் செல்லுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெற்றோர்களின் ஆதரவு உண்டு. கூட்டுக்கிரக யோகத்தால் கூடுதல் நன்மை கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் உண்டு.
1.1.2021 முதல் 31.12.2021 வரை
தடைகள் அகன்றோடும்
(உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை)
(பெயரின் முதல் எழுத்துக்கள்: பா, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)
கன்னி ராசி நேயர்களே! குருவின் பார்வையோடு பிறக்கும் இந்தப் புத்தாண்டு, உங்களுக்கு குதூகலத்தை தரும் ஆண்டாகவே அமையப்போகின்றது. அர்த்தாஷ்டமச் சனி, அர்த்தாஷ்டம குரு இரண்டும் விலகி விட்டது. எனவே, இனி உங்கள் எண்ணங் கள் பூர்த்தியாகும். முயற்சிகள் அனைத்தும் எளிதாக கைகூடும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலும். துணிந்து எடுத்த முடிவுகளால் துயரங்களை போக்கிக்கொள்வீர்கள். விவேகமாகச் செயல்பட்டு வெற்றிகளை வரவழைத்துக் கொள்ளும் விதத்தில் கிரக நிலைகள் சாதகமாகவே இருக்கின்றன. வம்புகள் அகலும். வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிந்து மற்றவர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் உத்தியோகத்தில், இதுவரை இருந்த பிரச்சினை அகலும். இனி மன உறுதியோடு செயல்பட்டு நல்ல மாற்றங் களை வரவழைத்துக்கொள்வீர்கள்.
ஆண்டின் தொடக்கம் குருச்சந்திர யோகத்தோடும், நீச்சபங்க ராஜயோகத்தோடும் அமைகின்றது. சந்திரன், உங்கள் ராசிக்கு லாபாதிபதியாவார். அந்த லாப ஸ்தானத்தைக் குரு பார்த்து புனிதமடைய வைப்பதால் சேமிப்பு உயரும். கரைந்த பொருளாதாரத்தை நிறைவு செய்ய புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். வீண் பழிகள் அகலும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். முகஸ்துதி பாடும் நண்பர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பொதுவாக இந்த ஆண்டு ஒரு திருப்பம் தரும் ஆண்டாக அமையும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
உங்கள் ராசிநாதன் புதன், பஞ்சம ஸ்தானத்தில் குரு மற்றும் சனியோடு இணைந்திருக்கின்றார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், நன்மைகள் குறைவில்லாமல் கிடைக்கும். சனி 6-க்கு அதிபதியாகவும் இருப்பதால், உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வரலாம். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள், மீண்டும் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும். மேலதிகாரிகளால் மறுக்கப்பட்ட சலுகைகள் இப்பொழுது கிடைக்கும். பிரபலமானவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து பல காரியங்களை முடித்துக்கொடுப்பர். அஷ்டமத்தில் செவ்வாய் இருப்பதால், நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட வகையில் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். அதே நேரத்தில் உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்களா? என்பது சந்தேகம்தான்.
விரயாதிபதியான சூரியன், உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் இருக்கின்றார். 4-ம் இடம் என்பது வீடு, வாகனம், தாய், சுகம், கல்வி ஆகியவற்றைக் குறிப்பதாகும். எனவே அவை சம்பந்தப்பட்ட வகையில் விரயங்கள் ஏற்படலாம். குறிப்பாக ‘இடம் வாங்கிப் போட்டும், நீண்டகாலமாக அதில் வீடு கட்ட முடியவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதற்கான யோகம் வரும். கட்டிய வீட்டைப் பழுதுபார்த்தல், வீட்டை விரிவு செய்து கட்டுதல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டும் நேரம் இது. ராகு-கேதுக்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. 9-ல் ராகு இருப்பதால் தந்தை வழி உறவில் திருப்தி ஏற்படாது. பூர்வீக சொத்துக்களை பாகப்பிரிவினை செய்துகொள்ளும் முயற்சியில், மூன்றாம் நபரின் தலையீடு அதிகரிக்கும். 3-ல் கேது இருப்பதால் பஞ்சாயத்துக்கள் சாதகமாக அமையுமா? என்பது சந்தேகம்தான். பொறுமையும், நிதானமும் தேவை. மேலும் சர்ப்பக் கிரகங்களுக்குரிய வழிபாடுகளையும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களையும் செய்துகொள்வது அவசியமாகும். சுயஜாதகத்தில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களையும் வழிபடுங்கள்.
மகர குருவின் சஞ்சாரம்
ஆண்டின் தொடக்கத்தில், மகர ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம், நீச்சம் பெறுவது யோகம்தான். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, பிள்ளைகளுக்கோ ‘விரும்பும் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லையே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதற்கான வாய்ப்பு உருவாகும். அதுமட்டுமல்லாமல் மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கலாம். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். அகால நேரத்தில் உணவு உண்பது, உடல்நலத்திற்கு ஒவ் வாத உணவுகளை உட்கொள்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம். தாய்வழி ஆதரவு திருப்தி தரும்.
குரு, உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானத்திற்கும் அதிபதியானவர். எனவே கொடிகட்டிப் பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக மாறும். பெற்றோர்களின் மணி விழா மற்றும் பிறந்தநாள் விழாக்களை கொண்டாடி மகிழ்வீர்கள். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். ஆதரவு தரும் நண்பர்களின் எண்ணிக்கையும் உயரும்.
குருவின் பார்வை பலன்கள்
புத்தாண்டில் மகரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கிறார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உள்ளத்தில் உற்சாகம் குடிகொள்ளும். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டு, தனித்து இயங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் மாறும். கடமையில் கண்ணும், கருத்துமாக இருப்பீர்கள். தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக முடிவிற்கு வரும். பங்காளிப் பகை முடிவுக்கு வரும். தாய் வழி உறவுகளின் ஒத்துழைப்போடு சில நல்ல காரியங்களை முடிப்பீர்கள். பொருளாதார முன்னேற்றம் திருப்தி தரும். அடகுவைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வருவீர்கள். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர்.
கும்ப குருவின் சஞ்சார காலத்தில், அதன் பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே நினைத்த காரியம் நிறைவேறும். தன ஸ்தானம் புனிதமடைவதால் தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும். எந்த காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சியில் புதியவர்களை பங்கு சேர்த்துக்கொள்வீர்கள். பழைய தொழிலை கொடுத்து விட்டு ஒருசிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர். வாகன மாற்றங்கள் செய்வதில் துரிதமாகச் செயல்படுவீர்கள். புதிய வாகனங்கள் வாங்கி பயணிக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்டபடியே இடமாற்றங்களும், இலாகா மாற்றங்களும் கிடைக்கும்.
குருவின் வக்ர காலம்
16.6.2021 முதல் 13.9.2021 வரை, கும்ப ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் குரு பகவான் வக்ரம் பெறுவதால் உத்தியோகத்தில் கொஞ்சம் கவனம் தேவை. மனஅமைதி குறையலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகக் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, மின்சாதனப் பொருட்களை மாற்றுவது போன்றவற்றின் மூலம் விரயங்களை சுபவிரயங்களாக மாற்றிக்கொள்ள இயலும். ஆரோக்கியத்தில் சிறுசிறு தொல்லைகள் வந்து அகலும்.
14.9.2021 முதல் 13.10.2021 வரை, மகர ராசியில் குரு வக்ரம் பெறுகின்றார். இக்காலத்தில் கூடுதல் கவனம் தேவை. பொதுவாக பிள்ளைகளால் சில பிரச்சினைகள் வரலாம். வாக்குவாதங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள், உங்கள் முடிவைக் கேட்டு செயல்பட மாட்டார்கள். அதனால் உங்களுக்கு கோபம் அதிகரிக்கும். முன்கோபத்தின் காரணமாக மனநிம்மதி குறையும். திட்டமிட்ட காரியங்கள் சில நடைபெறாமலும் போகலாம். பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும். பஞ்சாயத்துகளில் நல்ல முடிவு கிடைக்கும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை மகரத்தில் சனி வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். 5-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நல்லதல்ல. பிள்ளைகள் வழியில் சுபநிகழ்ச்சிகளில் தடை ஏற்படும். அவர்களின் உத்தியோக வாய்ப்புகள் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் திருப்தியற்ற சூழ்நிலை நிலவும். சொத்துக்களால் பிரச்சினைகள் உருவாகலாம். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். ‘பல வேலைகள் பாதியில் நிற்கிறதே’ என்று கவலைப்படுவீர்கள். கடன் சுமை சங்கிலித் தொடர் போல கூடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மாற்று உத்தியோகத்திற்கு செய்த ஏற்பாடு மனக்கலக்கம் தரும். மேலிடத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். இதுபோன்ற காலங் களில் சனி பகவானுக்குரிய சிறப்பு தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவதோடு, இல்லத்து பூஜை அறையில் சனி கவசம் பாடி வழிபடுவது நல்லது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
14.4.2021 முதல் 3.6.2021 வரை மற்றும் 4.6.2021 முதல் 21.7.2021 வரையான காலகட்டங்கள், செவ்வாய் - சனி பார்வை காலமாகும். இக்காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகும். உடனிருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கமாட்டார்கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். எனவே உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது. வரவு செலவுகளில் ஏமாற்றத்தைச் சந்திப்பீர்கள். தொழில் கூட்டாளிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். பண பரிவர்த்தனையால் சிக்கல்கள் உருவாகும். பல பணிகள் செய்ய இயலாமல் போகலாம்.
வளர்ச்சி தரும் வழிபாடு
புதன்கிழமை தோறும் அனுமன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. இல்லத்து பூஜை அறையில் வாலில் மணி கட்டிய அனுமன் படம் வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபடுவது பலன் தரும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டு நல்ல பலன்களை இல்லம் தேடி வரவழைத்துக் கொடுக்கப் போகின்றது. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ் நிலை உருவாகும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல்படுவது நல்லது. உடன்பிறப்புகளை நீங்கள்தான் அனுசரித்துச் செல்ல வேண்டும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், கூடுதல் பொறுப்பும் கிடைக்கும். சனியின் வக்ர காலத்திலும், சனி- செவ்வாய் பார்வை காலத்திலும் கடன் சுமை கூடும். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும். வழிபாட்டின் மூலம் நிலைமையை சீராக்கிக் கொள்ள இயலும்.
27-12-2020 முதல் 20-12-2023 வரை
ஐந்தில் வந்தது சனிபகவான், அற்புதப் பலன்கள் இனிசேரும்! கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டமச் சனியாகச் சஞ்சரித்து வந்த சனி பகவான், 26.12.2020 அன்று 5-ம் இடத்திற்குச் செல்கின்றார். 5-ம் இடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் தனது சொந்த வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் இனிய பலன்கள் ஏராளமாக வரப்போகின்றது. தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வருமானம் உயரும்.
மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு பகவான் இருக்கின்றார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே குடும்பத்தில் சந்தோஷ வாய்ப்புகளை அதிகம் சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்
டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தை அடையும் சனி பகவானால், நல்ல மாற்றங்கள் வரப்போகின்றது. இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறும். பிரிந்து சென்ற உறவினர்கள் பிரியமுடன் வந்திணைவர். செய்தொழில் எதுவாக இருந்தாலும் முன்னேற்றம் கூடும்.
சனியின் பார்வை பலன்கள்
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 2, 7, 11 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கப் போகின்றார். வாக்கு, தனம், குடும்பம், களத்திரம், வெளிநாட்டு முயற்சி, இளைய சகோதரம், பொருளாதாரம், மாமன், மைத்துனர் வழி ஒத்துழைப்பு, சேமிப்பு, கவுரவப்பதவி போன்றவற்றைப் பற்றி எடுத்துரைக்கும் இடங்களில் சனியின் பார்வை பதிவதால், அந்த ஆதிபத்யங்களில் எல்லாம் மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். 2-ம் இடத்தை சனி பார்ப்பதால், பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சனியின் பார்வை 7-ம் இடத்தில் பதிவதால் தம்பதியர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். சனியின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால், தொழிலில் இதுவரை இருந்த இழப்புகளை ஈடுகட்டும் விதத்தில் வியாபாரம் சூடுபிடிக்கும்.
சனியின் பாதசாரப் பலன்கள்
27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் இயல்பாக வந்து சேரும்.
28.12.2021 முதல் 26.1.2023வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை உயரும். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். சந்திரன் உங்கள் ராசிக்கு லாபாதிபதியாக இருப்பதால் இக்காலத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் மீது சுமத்திய குற்றங்களில் இருந்து விடுபட்டு மீண்டும் பணியில் சேருவர்.
27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. செவ்வாய் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். எனவே முன்னேற்றத்தில் சிறுசிறு சறுக்கல்கள் வரலாம்.
குருப்பெயர்ச்சிக் காலம்
கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கும் பொழுது, ‘சகட யோக’ அடிப்படையில் பலன் கிடைக்கும். ஒரு தொகை செலவழிந்த பிறகே அடுத்த தொகை உங்கள் கரங்களில் புரளும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது மிகச்சிறந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. வருமானம் மிதமிஞ்சியதாக இருக்கும். மேஷ குருவின் சஞ்சார காலத்தில் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும்.
ராகு-கேது பெயர்ச்சிக் காலம்
21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைவிடங்களில் பாம்பு கிரகங்கள் சஞ்சரிக்கும் பொழுது நன்மைகளையே செய்யும். சுயபலமற்ற கிரகம் என்பதால் இருக்கும் இடத்தைப் பொறுத்தே பலன் கிடைக்கும். பண விரயம் அதிகரித்தாலும், அதற்காகப் பயப்பட வேண்டியதில்லை. தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் எந்த வகையிலாவது உங்களுக்கு வருமானம் வந்து சேரும். தேங்கிய காரியங்கள் நடைபெறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. தொழிலில் மாற்றம் செய்தால் நல்லது என்று நினைப்பீர்கள். குடும்பச்சுமை கூடும்.
8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின் போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத மாற்றங்கள் இல்லம் தேடி வரும். ஜென்மத்தில் கேது இருப்பதால் ஆரோக்கியத்தில் மட்டும் அதிக தொல்லைகள் ஏற்படலாம். நினைத்த காரியத்தை செய்துமுடிக்க இயலாமல் உடல்நலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் கூடும். எதையும் யோசித்துச் செய்வது நல்லது.
வெற்றி பெறவைக்கும் வழிபாடு
வியாழன் தோறும் விரதம் இருந்து குரு வழிபாட்டை மேற்கொள்வதோடு, இல்லத்துப் பூஜை அறையில் குரு பகவான் படம் வைத்து, குரு கவசம் படித்து வழிபடுவது நல்லது. குடும்ப முன்னேற்றம் கூடும்.
சனியின் வக்ர காலம்
12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார்.
உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். எனவே நெஞ்சம் மகிழும் சம்பவங்களும், அஞ்சும்படியான சம்பவங்களும் நடைபெறும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. தொழிலில் ஏற்றங்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சி தரும் பெயர்ச்சியாகவே அமையும். பொருளாதார நிலை உயரும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் கனிவும், பாசமும் கூடும். விலகிச்சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தாய், தந்தை உறவு மேம்படும். சகோதரர்கள் உங்கள் எண்ணங்களைப் பூர்த்தி செய்வர். பிள்ளைகளின் கல்யாண வாய்ப்பு கைகூடும். மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன்தரும். பணிபுரியும் பெண்களுக்கு இனி வேலைப்பளு குறையும். எதிர்பார்த்த இடமாற்றம், இலாகா மாற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.
01.09.2020 முதல் 20.03.2022 வரை
ஒன்பதில் வருகிறது ராகு..உயர்நிலை வரும் வாழ்வினிலே..
கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்து வந்த ராகு பகவான், செப்டம்பர் 1-ந் தேதி 9-ம் இடத்திற்கு வரப்போகின்றார். கேது பகவான் அதே நாளில் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் இருந்து வெற்றிகள் ஸ்தானமான 3-ம் இடத்திற்கு செல்கின்றார்.
இதற்கிடையில் நவம்பர் 15-ந் தேதி மகர ராசிக்கு குரு மாறுகின்றார். அப்பொழுது அவரது பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. அதுமட்டுமல்லாமல் 9, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகின்றது. டிசம்பர் 26-ந் தேதி மகர ராசிக்குச் சனி பெயர்ச்சியாகிச் செல்கின்றார். உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திற்கு செல்லும் சனி, பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை வழங்குவார். 2021-ம் ஆண்டு நவம்பர் 13-ந் தேதி குரு, கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகிச் செல்கின்றார். அப்பொழுது அவர் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகின்றார். இவற்றை எல்லாம் அடிப்படையாக வைத்து ராகு, கேதுக்களின் பெயர்ச்சி பலன்களை பார்ப்போம்.
ஒளிமயமான வாழ்வு தரும் ராகு
முன்னேற்றம் தரும் கேது
‘9-ல் ராகு வந்தால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்’ என்பார்கள். ஒன்பதாமிடம் என்பது தகப்பனாரைப் பற்றியும், தந்தை வழி சொத்துக்கள், தர்மம் செய்யும் யோகம், ஆலயத் திருப்பணி, பங்காளிகள், கடல் கடந்த வாய்ப்பு போன்றவற்றையும் குறிக்கும் இடமாகும். பொதுவாக தந்தைவழி அனுகூலம் உண்டு. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். உத்தி யோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. புதுவாகனம் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு கிடைக்கும்.
மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் முன் னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப்போகிறீர்கள். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவியாக இருப்பர். வாங்கல்-கொடுக்கல்களில் ஒருசில சமயங்களில் ஏமாற்றம் ஏற்பட்டாலும் மற்றொரு சமயத்தில் இரு மடங்கு லாபம் கிடைக்கும். கேது வலிமையான கிரகம் என்பதால் அதற்குரிய விநாயகப் பெருமான் வழிபாட்டை முறையாக செய்வது நல்லது. மேலும் சித்ர குப்தன் வழிபாடும் சிறப்பான பலன்களை உங்களுக்கு வழங்கும்.
செவ்வாய் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 4.1.2021 வரை)
மிருகசீர்ஷ நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, உடன்பிறப்புகளின் வழியே பகை உருவாகலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் மூட்டுவலி போன்றவற்றால் தொல்லைகள் ஏற்படலாம். கடன் சுமை குறைந்தாலும் மீண்டும் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். இடம், பூமி விற்பனை மூலம் எதிர்பார்த்த தொகை கிடைக்கும். உத்தியோகத்தில் திடீர் மாறுதல்கள் உருவாகும். அதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடலாம்.
சந்திரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (5.1.2021 முதல் 12. 9.2021 வரை)
சந்திரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது மிகுந்த நற்பலன்கள் ஏற்படும். லாப ஸ்தானாதிபதியாக சந்திரன் விளங்குவதால் சேமிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். பணியிலிருந்து நீக்கப்பெற்றவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். வாகன யோகம் முதல் அனைத்து யோகங்களும் வந்து சேரும். குழந்தைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். உடல்நலக் குறைபாடுகள் அடிக்கடி வரலாம்.
சூரியன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம் (13.9.2021 முதல் 20.3.2022 வரை)
கார்த்திகை நட்சத்திரக்காலில் சூரியனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, விரயம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். வாழ்க்கைத்துணை ஓர் இடத்திலும், தான் ஒரு இடத்திலும் இருந்து வேலை பார்க்கும் சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகும். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும். பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்களை வாங்கி மகிழும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கலாம்.
பாதசார அடிப்படையில் கேது தரும் பலன்கள்
வெற்றிகள் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் ‘நிழல் கிரகம்’ என்று வர்ணிக்கப்பட்டாலும், நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முன்நிற்பவர் ஆவார். எனவே பாதசார அடிப்படையில் பலன்களை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது. பகை கிரகத்தின் சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதற்குரிய பரிகாரங்களையும், வழிபாடுகளையும் வைத்துக்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.
புதன் சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (1.9.2020 முதல் 9.5.2021 வரை)
கேட்டை நட்சத்திரக்காலில் புதன் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். வருமானப் பற்றாக்குறை அகலும். வசதிமிக்க செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் புதிய முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு மீண்டும் பணியில் சேர அழைப்புகள் வரலாம். உறவினர்களிடையே நிலவிய மனச்சங்கடங்கள் அகலும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். கொடுத்த கடன்களும் வசூலாகும்.
சனி சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (10.5.2021 முதல் 16.1.2022 வரை)
உங்கள் ராசிக்கு 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவரது சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். அவர்களின் உயர்கல்வி, படிப்பிற்கேற்ற வேலை சம்பந்தமாக நீங்கள் ஏதேனும் முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். ‘பூர்வீக சொத்துக்களில் இதுவரை பாகப்பிரிவினை ஏற்படவில்லையே’ என்ற கவலை அகலும். இக்காலத்தில் தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும்.
குரு சாரத்தில் கேதுவின் சஞ்சாரம் (17.1.2022 முதல் 20.3.2022 வரை)
உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. தாய் ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு அதிபதியானவர். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். உற்றார், உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் வரலாம். ‘வாங்கிய இடத்தை விற்று விட்டோமே’ என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது புதிதாக இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷமான செய்தி வந்து சேரும். வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
பெயர்ச்சியாகும் ராகுவால் ஒளிமயமான எதிர்காலம் அமையவும், கேதுவால் முன்னேற்றம் பெறவும், ஏகாதசி தோறும் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டு வரவும். புதன்கிழமை தோறும் பூஜை அறையில் கண்ணன் படம் வைத்து மாலை சூட்டியும், விளக்கேற்றியும் கண்ணன் கவசம் பாடி வழிபட்டு வருவது நல்லது.
பெண்களுக்கு...
ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவும், மற்றவர்களின் ஆதரவும் உங்களுக்கு வந்து சேரும். கடன் சுமை குறையும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கலாம். உங்கள் கனவுகள் நனவாக விநாயகப் பெருமானையும், மகாலட்சுமியையும் இல்லத்துப் பூஜையறையில் பதிகம் பாடி வழிபடுவது நல்லது.
15-11-2020 முதல் 13-11-2021 வரை
ஐந்தில் வந்தது குரு பகவான், அனைத்து நன்மையும் இனி கிடைக்கும்!
கன்னி ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 15.11.2020 அன்று 5-ம் இடத்திற்கு வருகின்றார். அங்கிருந்து கொண்டு 9-ம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கின்றார். ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்பதற்கேற்ப, இனி அடுக்கடுக்கான நன்மைகள் உங்களைத் தேடிவரப்போகின்றது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் குருவால், போராட்டமான வாழ்க்கை இனி பூந்தோட்டமாக மாறும். இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். இல்லம் கட்டிக் குடியேறும் நிகழ்ச்சி இனிதே நடைபெறும்.
இந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் சில மாதங்கள் 6-ம் இடத்திற்கு குரு சென்று சஞ்சரிக்கின்றார். சில காலங்கள் வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். அதற்கேற்ற பலன்கள் உங்களுக்கு அமையும். சுய ஜாதகத்தில் திசாபுத்தி பலம் பெற்றிருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். முன்னேற்றப் பாதையில் ஏதேனும் முட்டுக்கட்டை வருமேயானால் வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதன் மூலம் நற்பலன்களை வரவழைத்துக்கொள்ள இயலும்.
குருவின் பார்வை பலன்
இந்தக் குருப்பெயர்ச்சியின் விளைவாக, குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 9, 11 ஆகிய இடங்களையும் பார்க்கின்றார். இதனால் உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகம் உள்ளத்தில் குடிகொள்ளும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கூட்டு முயற்சியில் இருந்து விடுபட்டு, தனித்து இயங்க முற்படுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். உறவினர்களும், நண்பர்களும் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
குருவின் பார்வை 9-ம் இடத்தில் பதிவதால், தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் விலகும். சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இதுவரை சகோதரர்களுக்குள் இருந்த பிரச்சினைகள் அகலும். தொழில் வளம் மிகச்சிறப்பாக இருக்கும். ‘அஞ்சும், ஒன்பதும் மிஞ்சும் பலன்தரும்’ என்பதால் புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும். வீட்டை விரிவு செய்து கட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். முன்னோர்கள் செய்த தர்ம காரியங்களை, ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள்.
குருவின் பார்வை 11-ம் இடத்தில் பதிவதால் லாப ஸ்தானம் புனிதமடைகின்றது. எனவே தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வங்கிகளின் ஒத்துழைப்பு உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு இப்பொழுது கிடைக்கும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள்
உத்ராடம் நட்சத்திரக்காலில் சூரியன் சாரத்தில் குரு சஞ்சாரம் (15.11.2020 முதல் 4.1.2021 வரை)
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியானவர் சூரியன். பயண ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு அதிபதியான இவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விரயங்கள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மனை, வீடு, நிலம் வாங்குவது அல்லது கட்டிய வீட்டைப் பழுது பார்ப்பது, கல்யாணம் போன்ற சுபகாரியங்களை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்குவது போன்ற சுபவிரயங்கள் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் மூலம் தொழில் தொடங்க உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். மேலதிகாரிகள் உங்களுக்கு திடீரென இடமாற்றத்தைக் கொடுக்கலாம். தொழில் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
திருவோணம் நட்சத்திரக்காலில் சந்திரன் சாரத்தில் குரு சஞ்சாரம் (5.1.2021 முதல் 1.3.2021 வரை)
சந்திரன், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானாதிபதி ஆவார். அவரது சாரத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, பல நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். ‘வெளிநாட்டில் தொழில் புரிய வேண்டும், ஏற்றுமதி வணிகம் செய்ய வேண்டும்’ என்று நினைத்தவர்களுக்கு, அந்த முயற்சி இப்பொழுது கைகூடும். கூட்டாளிகள் பலரும் உங்களோடு வந்திணைய காத்திருப்பர். விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தியில் கவனம் செலுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் கேட்ட சலுகைகளை வழங்க காத்திருப்பர். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு.
அவிட்டம் நட்சத்திரக்காலில் செவ்வாய் சாரத்தில் குரு சஞ்சாரம் (2.3.2021 முதல் 4.4.2021 வரை, மீண்டும் 14.9.2021 முதல் 13.11.2021 வரை)
உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். சகாய ஸ்தானம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான இவரது சாரத்தில் குரு உலா வரும்பொழுது, நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். போட்டிகளுக்கு மத்தியில் உங்கள் முன்னேற்றம் உருவாகும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்க நிலை இல்லாமல் இருக்க, அங்காரக வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. குடும்பத்தில் தேவைகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொண்டாலும் கூட, திடீர் திடீரென சச்சரவுகளும் ஏற்படும். என்றைக்கோ வாங்கிப்போட்ட இடத்தை அத்தியாவசியமாக விற்கும் சூழ்நிலை இப்பொழுது ஏற்படலாம். பணிபுரிவோருக்கு நீண்ட தூரத்திற்கான மாறுதல் கிடைத்து மனக்குழப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.
அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் செவ்வாய் மற்றும் ராகு சாரத்தில் குரு சஞ்சாரம்(5.4.2021 முதல் 13.9.2021 வரை)
இக்காலத்தில் கும்ப ராசியில் குரு சஞ்சரிக்கின்றார். அப்பொழுது அவர் பார்வை 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. ‘கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் 6-ல் வரும்பொழுது யோகம் செய்யும்’ என்பார்கள். இருப்பினும் இக்காலத்தில் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். மனக்குழப்பமும், புதிய பிரச்சினையும் வந்து அலைமோதும். ‘ஆறில் குரு, ஊரில் பகை’ என்பது பழமொழி. எனவே மறைமுக எதிர்ப்புகள் உங்களுக்கு இக்காலத்தில் இருக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. இருப்பினும் குரு பார்வையால், மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும். மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு கிட்டும். தொழிலில் புதிய தொழிலாளர்கள் வந்திணைவர்.
குருவின் வக்ர இயக்கம்
16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்தில் இருக்கின்றார். கும்பம், மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் வக்ரம் பெறுகின்றார். உங்களைப் பொறுத்தவரை இந்த வக்ர காலம், நன்மைகள் அதிகம் நடை பெறும் காலமென்றே கருதலாம். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புகழ்மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். ‘வாங்கிப்போட்ட இடத்தில் வீடு கட்ட முடியவில்லையே, பிரச்சினை மேல் பிரச்சினை வந்து கொண்டு இருக்கின்றதே, எப்பொழுதுதான் இதற்கு விடிவுகாலம் வருமோ’ என்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது கட்டிடப் பணி தொடரும். கவலைகள் தீரும். குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் வேலை கிடைத்து, அதன் மூலம் உதிரி வருமானங்களும் உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு
இல்லத்து பூஜை அறையில் மகாலட்சுமி படம் வைத்து, அஷ்டலட்சுமி வருகைப் பதிகம் பாடி வழிபடுவது நல்லது. மேலும் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு கவசம் பாடி, குரு பகவானையும் வழிபட்டால் இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு, குரு பார்வை இருப்பதால் மகிழ்ச்சியும், பூரிப்பும் அதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் எந்தவொரு காரியமும் எளிதில் முடிந்துவிடும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். கணவன்-மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நடப்பதன் மூலமும், விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலமும் அமைதி குடிகொள்ளும். தாய்வழி ஆதரவு திருப்தி தரும். சகோதர ஒத்துழைப்பு பட்டும்படாமலும் இருக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். எதிர் பார்த்த உயர்வுகளும் உண்டு.
எங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு
Paper Ad Tariff | Web Ad Tariff | Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2021, © Daily Thanthi | Powered by VishwakAstrology
1/17/2021 11:45:23 PM
http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Virgo