சினிமா செய்திகள்

திருமணங்களில் தோற்றேன்.. சினிமாவில் ஜெயித்தேன்.. - நடிகை சாந்தி கிருஷ்ணா + "||" + Lost in weddings I won in cinema

திருமணங்களில் தோற்றேன்.. சினிமாவில் ஜெயித்தேன்.. - நடிகை சாந்தி கிருஷ்ணா

திருமணங்களில் தோற்றேன்.. சினிமாவில் ஜெயித்தேன்.. - நடிகை சாந்தி கிருஷ்ணா
தென்னிந்திய சினிமாக்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களை சிலிர்க்கவைத்த நடிகை சாந்தி கிருஷ்ணாவின் குடும்ப வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
தென்னிந்திய சினிமாக்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து, ரசிகர்களை சிலிர்க்கவைத்த நடிகை சாந்தி கிருஷ்ணாவின் குடும்ப வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 16 வயதில் பன்னீர்புஷ்பங்கள் சினிமாவில் அறிமுகமான இவர், 19 வயதில் நடிகர் ஸ்ரீநாத்தை திருமணம் செய்துவிட்டு சினிமாவில் இருந்து விடைபெற்றார். 26 வயதில் மம்முட்டியின் கதாநாயகியாக மீண்டும் நடிக்கவந்தார். அதை தொடர்ந்து முதல் திருமணம் முறிந்தது. அடுத்து தொழிலதிபர் ஒருவரை மறுமணம் செய்துகொண்டு, மீண்டும் சினிமாவில் இருந்து விலகினார். அந்த வாழ்க்கையும் வெகுகாலம் நீளவில்லை. பிரிவு ஏற்பட்டது. தற்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகன் மிதுல், எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் மிதாலி ஆகியோருடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அதோடு சினிமாவில் மூன்றாவது ரவுண்டாக அடியெடுத்துவைக்கிறார், அம்மா வேடத்தில்! அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை சொல்கிறார்:

நான் வாழ்க்கையில் வேதனையை அனுபவிக்கும்போதெல்லாம் என் கண்ணீரை துடைத்துவிட சினிமா என்னை தேடி வந்திருக்கிறது. நான் திரு மணத்திற்கு பிறகு சினிமா நினைவே இல்லாமல் குடும்பப் பெண்ணாக வாழ்ந்து கொண்டிருந்தேன். திடீரென்று தாம்பத்ய வாழ்க்கை தகர்ந்தது. அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தேன். விவாகரத்துக்காக நீதிமன்ற படிகளை ஏறவேண்டியதானது. நான் மன அழுத்தத்திற்கு உள்ளானேன். அந்த நேரத்தில் சினிமா என்னை தேடி வந்து, மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 19 வருடங்கள் கழித்து மீண்டும் நடித்துக்கொண்டிருக் கிறேன்.

சினிமாவிற்கு வந்ததே எதிர்பாராமல் நடந்ததுதான். எனது அண்ணன் சுரேஷ் கிருஷ்ணா டைரக்டர் பாலசந்தரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்துகொண்டிருந்தார். அப்போது நான் மும்பையில் படித்துக்கொண்டிருந்தேன். நடனத்திலும், நாடகத்திலும் மிகுந்த ஆர்வமாக ஈடுபட்டேன். கலைக் காக மத்திய அரசின் உதவிப்பணமும் பெற்றுக்கொண்டிருந்தேன். அதை பற்றி தினத்தந்தியில் கட்டுரையும், படமும் வெளிவந்தது. அதை பார்த்துவிட்டு மலையாளப் பட டைரக்டர் பரதன், என் அண்ணனிடம் என்னை பற்றி விசாரித்தார். என் அண்ணன்தான் அவர் மிகப் பெரிய டைரக்டர், அவரது படத்தில் நடிக்கலாம் என்றார். நான் சென்னைக்கு புறப்பட்டு வந்தேன். அப்போது பன்னீர்புஷ்பங்களில் நடிக்கும் வாய்ப்பும் தேடிவந்தது. அப்படி ஒரே நேரத்தில் நான் தமிழிலும், மலையாளத்திலும் அறிமுகமானேன். மோகன்லாலுடன் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தேன். காதலியாக, மனைவியாக நடித்த நான் பின்பு அவருக்கே அம்மாவாகவும் நடித்தேன்.

நான் பிசியாக நடித்துக்கொண்டிருந்தபோது 19-வது வயதில் திருமணம் நடந்தது. இப்போதுகூட அதை நினைத்துப்பார்க்க முடியவில்லை. எப்படியோ அது நடந்துவிட்டது. திருமணம் முடிந்து நான் ஸ்ரீநாத்துடன் ஒரு குக்கிராமத்தில் போய் வசித்தேன். மும்பையில் நாகரிகமாக வாழ்ந்த நான் அந்த கிராமத்தில் முண்டுகட்டிய கிராமத்து பெண்ணாக வாழ்ந்தேன். வீட்டில் கியாஸ் கிடையாது. விறகு அடுப்புதான். அந்த வாழ்க்கையையும் நான் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தேன்.

அங்கு போன்கூட கிடையாது. அதனால் எந்த தொடர்பும் இல்லை. சினிமா சிந்தனையும் என்னைவிட்டு போய்விட்டது. பின்பு திருவனந்தபுரத்திற்கு குடி வந்தோம். சினிமா வாய்ப்புகள் தேடிவந்தன. நான் விரும்பினேன். அவர் விரும்பவில்லை. நான் நடிக்க போனால் அதைவைத்து பிரச்சினை வளரும் என்பதால் நான் நடிக்காமல் இருந்தேன். நடன பள்ளி ஆரம்பித்தேன். நாளடைவில் அதுவும் நின்று போனது. அப்போது நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தது. மனஅழுத்தத்தில் இருந்தேன். அந்த நேரத்தில் சினிமா வாய்ப்பு வந்தது. ஏற்றுக்கொண்டேன். நான் கண்ணீர்விடும்போதெல்லாம் சினிமா அழைப்பு வந்து என் கண்ணீரை துடைத்திருக்கிறது. முதல் படத்தில் அறிமுகமாகும்போதுதான் நான் மகிழ்ச்சியாக சினிமாவிற்கு வந்தேன். இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் நான் வந்தபோது என் வாழ்க்கையில் கவலையும் கண்ணீரும்தான் நிரம்பியிருந்தது.

இனிமேல் பிரிவே வரக்கூடாது என்ற முடிவோடுதான் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதித்தேன். முதலில் நடந்ததுபோல் ஆகி விடக்கூடாது என்று நினைத்து மிகுந்த கவனமாக இருந்தேன். ஆனால் இரண்டு பிரிவும் வெவ்வேறு சூழ் நிலைகளால் உருவாகிவிட்டது. நான் இதயத்தை வைத்து முடிவுஎடுத்துவிடுவேன். அதுதான் என் முடிவுகள் தவறாக அமைந்திட காரணமாகிவிட்டது.

என் தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லாம் தவறாகிப் போனது. அதில் கிடைத்த அதிர்ஷ்டம் என் குழந்தைகள். என் வாழ்க்கையில் அவர்கள்தான் எல்லாம். இரண்டு வருடங்கள் அவர்களும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டார்கள். அமெரிக்காவில் நானும், குழந்தைகளும் தனியாகத்தான் இருந்தோம். கணவர் வந்து போய்க்கொண்டிருந்தார் அவ்வளவுதான்! இன்னொரு சூழ்நிலையில் அவர் எங்களைவிட்டு விலகிவிட்டார். பெற்றோரை பிரியும் நிலை எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இன்னொரு திருமணம் பற்றி நான் நினைத்துப்பார்க்கவே இல்லை. இனி என் வாழ்க்கையில் நடிப்பும், நடனமும்தான். ஆனால் ஒரு விஷயம் நாம் நினைத்ததுபோல் வாழ்க்கை அமைவதில்லை. காலம் இனியும் எனக்காக எதை எல்லாம் வைத்துக்கொண்டு காத்திருக்கிறதோ எனக்கு தெரியாது..!