சினிமா செய்திகள்

பெப்சி, பட அதிபர்கள் மோதல் நீடிப்பு சினிமா படப்பிடிப்புகள் 12-வது நாளாக நிறுத்தம் + "||" + Cinema shooting 12th day stop

பெப்சி, பட அதிபர்கள் மோதல் நீடிப்பு சினிமா படப்பிடிப்புகள் 12-வது நாளாக நிறுத்தம்

பெப்சி, பட அதிபர்கள் மோதல் நீடிப்பு
சினிமா படப்பிடிப்புகள் 12-வது நாளாக நிறுத்தம்
பெப்சி, பட அதிபர்கள் மோதலால் சினிமா படப்பிடிப்புகள் 12-வது நாளாக நிறுத்தப்பட்டு உள்ளன. ரஜினிகாந்தின் ‘காலா’ உள்பட 30 படங்கள் முடங்கி உள்ளன.
சென்னை, 

சம்பள பிரச்சினையில் படப்பிடிப்புகளை தன்னிச்சையாக நிறுத்தி பட அதிபர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக பெப்சி தொழிலாளர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றம் சாட்டி இனிமேல் பெப்சியுடன் இணைந்து பணியாற்றுவது இல்லை என்று அறிவித்தது. பெப்சிக்கு போட்டியாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி படப்பிடிப்புகளை நடத்த ஆட்களையும் தேர்வு செய்ய முடிவு செய்தது.

இதற்கு பெப்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. புதிதாக ஆட்கள் தேர்வு செய்யும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நடவடிக்கையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது. கடந்த 1-ந்தேதி முதல் இந்த வேலை நிறுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது. கேமரா மேன்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், நடன கலைஞர்கள், மேக்கப் மேன்கள், தயாரிப்பு நிர்வாகிகள், லைட்மேன்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் படப்பிடிப்புகளை புறக்கணித்து வருகிறார்கள்.

படப்பிடிப்புகள் ரத்து

இதனால் நேற்று (12-ந்தேதி) 12-வது நாளாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. 30-க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த படப்பிடிப்பும் பெப்சி வேலை நிறுத்தத்தால் 12 நாட்களாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பெப்சி நிர்வாகிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதில் சில பிரச்சினைகளில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என்றும் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிப்பதால் போராட்டம் தொடர்கிறது.

22 சங்கங்கள்

தயாரிப்பாளர்கள் பரிந்துரைத்துள்ள முடிவுகளை பெப்சியில் உள்ள 22 சங்கத்தினரையும் ஏற்க வைப்பதற்காக அவர்களுடன் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருவதாகவும் ஓரிரு நாளில் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் பெப்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.