துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்


துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
x
தினத்தந்தி 6 Jan 2018 10:00 AM GMT (Updated: 2018-01-06T15:19:01+05:30)

ரெஸ்லிங் போட்டிகளில் ‘ராக்’ என்ற பெயரில் அறிமுகமாகி, இன்று ஹாலிவுட்டின் விலை மதிப்புமிக்க ஆக்‌ஷன் நடிகராக உயர்ந்திருப்பவர், டிவென் ஜான்சன். இன்று ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறுபவரும் இவர் தான்.

வித்தியாசமான கதாபாத்திரங்களிலும், கதைகளிலும் நடித்துக் கொண்டிருக்கும் ராக்கிற்கு, ‘ஜுமான்ஜி’ திரைப்படம் சவாலாக அமைந்திருந்ததாம். கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி அதிரடி நாயகன் பகிர்ந்து கொள்ளும் சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

* ‘ஜுமான்ஜி’ என்பது குழந்தைகளுக்கான திரைப்படம். அதில் ஆக்‌ஷன் ஹீரோவான உங்களை எப்படி உள் நுழைத்தார்கள்?

இந்தக் கேள்வியை தான் நானும் இயக்குனரிடம் கேட்டேன். அதற்கு அவர், குழந்தைகளாக இருந்தவர்கள் இன்று இளைஞர்களாகி விட்டனர். அதனால் குழந்தைகள் சிறுவயதில் பார்த்து ரசித்த ‘ஜுமான்ஜி’ திரைப்படத்தை, ஆக்‌ஷன் கலந்து கொடுக்க இருப்ப தாகவும், அதற்கு சரியான ஆள் நான் என்றும் கூறி என்னை இதற்குள் இழுத்துவிட்டார். ஆனால் ஜுமான்ஜி திரைப்படத்தில் ஆக்‌ஷனை விட, வசனக் காட்சிகள் தான் அதிகம். இதுவரை ஆக்‌ஷனிலும், கம்பீரமான உடலிலும் கலக்கிய என்னை, ஜுமான்ஜி திரைப்படத்தில் நல்ல நடிகனாக பார்க்கலாம்.

* பேன்டஸி வகை படங்களில் நடித்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

எதிரில் நிற்கும் நடிகர்களை பார்த்தபடி நடிப்பது சுலபம். இதுவரை அப்படிப்பட்ட திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறேன். ஆனால் ‘ஜுமான்ஜி’ திரைப்படம் அப்படியில்லை. பேன்டஸி கலந்த காமெடி படம். அதில் கிராபிக்ஸ் விலங்குகள் உண்டு. செயற்கையான எரிமலை வெடிப்பு உண்டு. ஆகாயத்தில் இருந்து குதிப்பது போன்ற காட்சிகளும் உண்டு. அதுபோன்ற கற்பனை காட்சிகளில் நடிக்க சிரமமாக இருந்தது. அதனால் ஒரு சில காட்சிகளை 50 டேக்குகள் வரை எடுத்தனர். நான் நன்றாக நடித்தால், உடன் நடிப்பவர்கள் சொதப்பி விடுவார்கள். அவர்கள் நன்றாக நடித்தால் நான் சொதப்பி விடுவேன். இதனால் ‘ஜுமான்ஜி’ படப்பிடிப்பு முடிய வெகு காலம் பிடித்தது.

* ‘ஜுமான்ஜி’ திரைப்படத்தின் கருத்து?

அது காமெடி கலந்த பேன்டஸி திரைப்படம் என்றாலும், இயக்குனர் அதில் சமூக கருத்தையும் உள் நுழைத்திருந்தார். உலக வெப்பமயமாதலையும், காடு அழிப்பையும் திரைக்கதையோடு சொல்லியிருக்கிறார். அவரது முயற்சியால், சமூக கருத்துள்ள திரைப்படத்தில் நடித்த பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆக்‌ஷன், அதிரடி, கார் பந்தயம் போன்ற கதைகளோடு, இனி சமூக கருத்துள்ள திரைப்படங்களிலும் நடிக்க இருக்கிறேன்.* உங்களுடைய மகள், ‘ஜுமான்ஜி’யை ரசித்தாரா?

இன்றைய தலைமுறையை ஏமாற்ற முடியாது. நீங்களும், நானும் தான் பேன்டஸி திரைப்படங்களைப் பார்த்து ரசிக்கிறோம். ஆனால் இன்றைய தலைமுறையினர், அது எப்படி இங்கு வந்தது?, இது எப்படி அங்கே சென்றது? என திரைப்படத்தில் இருக்கும் ஓட்டைகளை கண்டுபிடித்து, கேள்வி கேட்கிறார்கள். உலகளவில் வசூல் மழை பொழிந்த ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்7’ திரைப்படத்தை என்னுடைய மகள் சிமொன் அலெக்சாண்ட்ராவுடன் கண்டுகளித்தேன். ஒரு காட்சியில் கதாநாயகன் ஓட்டும் கார், மிக உயர்ந்த இரண்டு கட்டிடங்களை உடைத்து கொண்டு வானில் பறக்கும். அந்தக் காட்சியை ரசித்து நான் கைத்தட்டினேன். ஆனால் என்னுடைய மகளோ முறைத்தபடி, கார் எப்படி கட்டிடத்தை இடித்து உடைக்கும் என்று கேள்வி கேட்டாள். அவளது அடுத்த கேள்வி, கார் எப்படி உடையாமல், சிதையாமல் ஓடியது. இதுபோன்ற ஏராளமான கேள்விகளை திரையரங்கில் சந்தித்தேன். அவளது கேள்விக்கு வலுசேர்க்கும் விதமாக, பல்வேறு யூ-டியூப் சேனல்களும் திரைப்படங்களை வசைப்பாடுகின்றன. அதனால் என்னுடைய மகளிடம் நான் நடித்த திரைப்படங்களின் விமர்சனத்தை கேட்பதில்லை. ஏனெனில் அவளது விமர்சனம், என்னை வறுத்தெடுத்துவிடும்.

* யாருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

ஜாக்கிசானுடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறது. இதற்கு முன்பு ஒருசில தொலைக்காட்சி தொடர்களில் சிறுசிறு வேடங்களில் அவருடன் நடித்திருந்தாலும், முழுநீள திரைப்படம் ஒன்றில் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய ஆசை நிறைவேறினால், அது ‘ஆக்‌ஷன் காம்போ’ திரைப்படமாக இருக்கும். மேலும் காமெடி நடிகர் மிஸ்டர் பீனுடன் சேர்ந்து நடிக்கவும் ஆசைப்படுகிறேன். ஏனெனில் அவர் வசனம் பேசாமல், முகபாவனைகளிலேயே பட்டையைக் கிளப்புபவர். அவரோடு சேர்ந்து நடித்தால் தான், முகபாவனைகளைக் கற்றுக்கொள்ள முடியும்.

* ஹாலிவுட்டில் உங்களது மார்க்கெட் சரிந்து விட்டால், என்ன செய்வீர்கள்?

சினிமா வாழ்க்கைக்கு பிறகு, குட்டிக் குழந்தைகளை பராமரிக்கும் ‘பேபி டே கேர்’ நிறுவனத்தை ஆரம்பிக்க இருக்கிறேன். நடிப்பு, சண்டை என என்னுடைய இளமை காலத்தை தொலைத்துவிட்டதால், என்னுடைய மகளின் மழலை பருவத்தை ரசிக்க முடியவில்லை. அதனால் ‘பேபி டே கேர்’ நிறுவனத்தை ஆரம்பித்து, அதன்மூலம் பிஞ்சு குழந்தைகளின் மழலை பருவத்தை ரசிக்க இருக்கிறேன். அத்துடன், பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் ‘ஜிம்’ ஒன்றையும் தொடங்குவேன்.

* உங்களுக்கு பிடித்த நாடு எது?

விளையாட்டிற்கு சொல்லவில்லை.. எனக்கு சிரியாவை மிகவும் பிடித்திருக் கிறது. சிரியா மக்களை அதிகமாக விரும்புகிறேன். தீவிரவாதம், அடக்குமுறை என பல வழிகளில் இன்னல்களை சந்தித்து வந்தாலும், அதை சிரியா மக்கள் உறுதியோடு எதிர்கொள்கிறார்கள். தாய்நாட்டின் மீதுள்ள பாசத்தில் அங்கேயே அவதிப்படுகிறார்கள். அமெரிக்கர்கள், சிரியாவிற்குள் நுழைய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை தளர்த்தினால், நான் சிரியாவில் சில காலம் தங்கியிருந்து, அந்நாட்டிற்கு உதவுவேன். அதேசமயம் குண்டு துளைத்த சிரியாவை ரசிப்பேன்.

Next Story