‘பத்மாவத்’ சர்ச்சை படத்தில் நடித்த தீபிகா படுகோனே–ரன்வீர் சிங் விரைவில் திருமணம்


‘பத்மாவத்’ சர்ச்சை படத்தில் நடித்த தீபிகா படுகோனே–ரன்வீர் சிங் விரைவில் திருமணம்
x
தினத்தந்தி 12 Jan 2018 11:30 PM GMT (Updated: 2018-01-13T02:34:23+05:30)

வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்துள்ளது.

மும்பை,

இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் 2006–ம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான்’ அனிமே‌ஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.9 கோடி சம்பளம் வாங்குகிறார்.

தீபிகா படுகோனேவுக்கும், இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஏற்கனவே பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள பத்மாவத் படத்திலும் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இதில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மினியாகவும் அவர் மீது காதல்கொண்டு படையெடுத்து வரும் மன்னன் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘பத்மாவத்’ என்று பெயரை மாற்றியும், சர்ச்சை காட்சிகளை நீக்கியும் தணிக்கை குழு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வீர் சிங்கும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீபிகா படுகோனே தனது 32–வது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடினார். இதில் ரன்வீர் சிங்கும் அவரது பெற்றோருடன் கலந்து கொண்டார். அப்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் தீபிகா படுகோனேவுக்கு ரன்வீர் சிங் விலை உயர்ந்த மோதிரம் அணிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது

இருவரும் கோவாவில் புதிய பங்களா வீட்டை சொந்தமாக வாங்கி உள்ளனர். லண்டனிலும் விலை உயர்ந்த வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். நடிகை அனுஷ்கா சர்மா–கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஜோடியை தொடர்ந்து இவர்கள் திருமணமும் விரைவில் நடக்க உள்ளது.


Next Story