“நடிகர் பிரபாசுடன் திருமணம் இல்லை” நடிகை அனுஷ்கா மறுக்கிறார்


“நடிகர் பிரபாசுடன் திருமணம் இல்லை” நடிகை அனுஷ்கா மறுக்கிறார்
x
தினத்தந்தி 17 Jan 2018 11:41 PM GMT (Updated: 2018-01-18T05:11:09+05:30)

“தெலுங்கு நடிகர் பிரபாஸ், என் நண்பர் மட்டும்தான். அவருக்கும், எனக்கும் திருமணம் இல்லை” என்று நடிகை அனுஷ்கா கூறினார்.

சென்னை,

‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 படங்களிலும் அனுஷ்கா கதாநாயகியாக நடித்தார். அந்த 2 படங்களிலும் கதாநாயகனாக நடித்தவர், பிரபாஸ். தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் இவருக்கும், அனுஷ்காவுக்கும் ‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், தெலுங்கு பட உலகில் தகவல் பரவியது.

இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் பிரபாஸ் கூறினார்.

அனுஷ்கா பேட்டி

இந்த நிலையில், அனுஷ்கா நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘பாகுமதி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, நேற்று அவர் சென்னை வந்தார். அப்போது நிருபர்களுக்கு அனுஷ்கா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

“பாகுபலி படத்துக்கும், பாகுமதி படத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது, வேறு கதை. இது, வேறு கதை. இது, ஒரு திகில் படம். இதில், ‘சஞ்சனா’ என்ற ‘ஐ.ஏ.எஸ்.’ அதிகாரியாக நடித்து இருக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய இருவரும் எனக்கு நன்றாக அறிமுகமானவர்கள். கதையும், கதாபாத்திரமும் எனக்கு பிடித்து இருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன்.

இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைதான். உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்து இருந்தார். தமிழ் ரசிகர்களுக்கு ‘பாகுமதி’ படம் மிகவும் பிடிக்கும். படத்தில், எனக்கு சண்டை காட்சிகள் கிடையாது.

எடை குறைப்பு

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக நான் என் உடல் எடையை கூட்டி, நடித்தேன். உடம்பு குண்டான பின், அதை குறைக்க முயற்சி செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எடையை குறைத்து வருகிறேன். ‘யோகா’ மூலம் ஓரளவு என் உடல் எடை குறைந்து இருக்கிறது.

தமிழ் பட உலகில் எனக்கு பிடித்த நடிகர், ரஜினிகாந்த். இப்படி சொல்வதன் மூலம் மற்ற நடிகர்களை எனக்கு பிடிக்காது என்று அர்த்தம் அல்ல. எல்லா கதாநாயகர்களும் நண்பர்கள்தான்.

திருமணம்

எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை. முதலில், நல்ல பையன் கிடைக்கட்டும். அவரை எனக்கு பிடித்தால், உடனே திருமணம்தான். நண்பர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் அழைத்து, அவர்கள் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொள்வேன்.

எனக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் பேசப்படுவதில், உண்மை இல்லை. நிச்சயமாக, அவருடன் எனக்கு திருமணம் இல்லை. பிரபாஸ், எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான்.

தேசிய விருது

‘தெய்வ திருமகள்,’ ‘தாண்டவம்’ ஆகிய இரண்டும் தமிழில் எனக்கு பிடித்த படங்கள். ‘பாகுபலி’ படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று நான் கவலைப்படவில்லை. ரசிகர்கள், பொது மக்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் என் நடிப்பு பிடித்தால் போதும். அவர்களின் பாராட்டுகள்தான் மிகப்பெரிய விருதுகள்.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

பேட்டியின்போது பட அதிபர் கே.ஈ.ஞானவேல் ராஜா, டைரக்டர்கள் அசோக் ஆகிய இருவரும் உடன் இருந்தனர். 

Next Story