‘பத்மாவத்’ படம் சிக்கல் இல்லாமல் வெளியாக தீபிகா படுகோனே, கோவிலுக்கு சென்று பிரார்த்தனை


‘பத்மாவத்’ படம் சிக்கல் இல்லாமல் வெளியாக தீபிகா படுகோனே, கோவிலுக்கு சென்று பிரார்த்தனை
x
தினத்தந்தி 24 Jan 2018 10:08 AM GMT (Updated: 24 Jan 2018 10:08 AM GMT)

தீபிகா படுகோனே விரும்பி நடித்த படம் பத்மாவத். படப்பிடிப்பு முடிந்ததும் ‘என் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இது இருக்கும்’ என்று சொல்லி மகிழ்ந்தார்.

சித்தூர் ராணி பத்மினியாக மிடுக்காக தீபிகா படுகோனே நடித்திருந்த புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

தலைக்கு பரிசு

ஆனால் படத்தை கடந்த டிசம்பர் 1-ந் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது வடநாட்டில் போராட்டங்கள் வெடித்தன. அலாவுதீன் கில்ஜியை திருமணமான ராணி பத்மினி காதலிப்பது போன்று காட்சிகள் வைத்து அவரை களங்கப்படுத்தி இருப்பதாக கண்டித்தனர். தீபிகா படுகோனே தலைக்கு ரூ.5 கோடி, 10 கோடி என்று ஆளாளுக்கு பரிசுகள் அறிவித்து பயமுறுத்தினார்கள்.

இதனால் தீபிகா படுகோனே மிரண்டு போனார். படம் வெளியீட்டையும் தள்ளி வைத்து விட்டனர்.

போலீஸ் பாதுகாப்புடனேயே தீபிகா படுகோனே வெளியில் தலைகாட்ட நேர்ந்தது. தற்போது பிரச்சினைகள் ஒரு வழியாக தீர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவினால் படம் இந்தியா முழுவதும் நாளை (வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது. தணிக்கை குழுவும் சர்ச்சை காட்சிகளை வெட்டி படத்தின் தலைப்பை ‘பத்மாவத்’ என்று மாற்றி அனுமதி வழங்கி இருக்கிறது.

தீபிகா படுகோனே பிரார்த்தனை

ராஜஸ்தான், மத்திய பிரதேச அரசுகள் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டை நாடின. அது ஏற்கப்படவில்லை. இதனால் தீபிகா படுகோனே மகிழ்ச்சியில் இருக்கிறார்.

நேற்று மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றார். அங்கு ‘பத்மாவத்’ படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்று விநாயகரிடம் வேண்டி பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தீபிகா படுகோனே உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கோவிலில் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. 

Next Story