இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு


இனிமேல் நல்ல படங்களில் மட்டுமே நடிப்பேன் நடிகை தமன்னா புது முடிவு
x
தினத்தந்தி 27 Jan 2018 6:00 AM GMT (Updated: 27 Jan 2018 5:21 AM GMT)

இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றார் தமன்னா.

தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வீரம், தர்மதுரை என்று அவர் நடித்த ஹிட் படங்களின் பட்டியல் நீள்கிறது. பாகுபலியில் வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்றார். இந்தியில் வெற்றிகரமாக ஓடிய குயின் படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’கில் தற்போது நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.

நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் சினிமாவில் இவ்வளவு காலம் நீடிப்பது அதிர்ஷ்டம். இதுவரை கிடைத்த அனுபவங்களை இனிமேல் நடிக்கப்போகிற படங்களில் காட்டப்போகிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் ஒன்றிரண்டு தவறுகள் செய்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். புதுசா வந்துள்ளார். போகப்போக கற்றுக்கொள்வார் என்று நினைப்பார்கள்.

ஆனால் இனிமேல் அப்படி முடியாது. எனது பொறுப்பு அதிகமாகி இருக்கிறது. இத்தனை படங்களில் நடித்து இவ்வளவு அனுபவம் சம்பாதித்த அப்புறமும் கூட சாதாரண படங்களில் நடித்தால் அதற்கு அர்த்தம் என்ன இருக்கிறது? அர்த்தமே இல்லை. அதனால் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே இனிமேல் நடிப்பேன்.

அது வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறுகிற படமாகவும் இருக்க வேண்டும். அதுமாதிரி படங்களை தேர்வு செய்து நடிப்பேன். கதாநாயகிகள் நவீன ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எவ்வளவு நவீன ஆடையாக இருந்தாலும் அணிவதற்கு சவுகரியமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நாம் என்ன உடை அணிகிறோம் என்பதை விட அது உடல் வாகுக்கு ஏற்றமாதிரி இருக்கிறதா என்பது முக்கியம். சவுகரியமான ஆடை அணிந்தால்தான் தன்னம்பிக்கையோடு இருக்க முடியும்.”

இவ்வாறு தமன்னா கூறினார். 

Next Story