கோடிகளை குவிக்கும் இந்தி நடிகர்களின் ஆரம்ப கால கஷ்டங்கள்


கோடிகளை குவிக்கும் இந்தி நடிகர்களின் ஆரம்ப கால கஷ்டங்கள்
x
தினத்தந்தி 27 Jan 2018 5:38 AM GMT (Updated: 2018-01-27T11:08:05+05:30)

கோடிகளை குவிக்கும் இந்தி நடிகர்கள் பலர் ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.

மிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று மாநில மொழி படங்களில் வரும் கதாநாயகர்களை விட இந்தி நடிகர்களுக்கு சம்பளம் அதிகம். வீட்டுக்கு வெளியே கால் வைத்தால் சொகுசு கார்கள், கால்ஷீட்களில் கையெழுத்து போட்டால் கோடிக்கணக்கில் சம்பளம். விளம்பர படங்களில் நிமிட கணக்கில் தலை காட்ட பெரிய தொகைகள் என்று பணத்திலும், ஆடம்பர வாழ்க்கையிலும் மிதக்கிறார்கள்.

இந்தி பட உலகை கட்டி ஆளும் இவர்களில் பலரது ஆரம்ப காலத்து வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்தது. அப்போது அவர்கள் வாங்கிய முதல் மாத சம்பளத்தையும், இப்போது வாங்கும் சம்பளத்தையும் கேட்டால் ஆச்சரியம் ஏற்படும். இந்தி சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சன் ஒரு காலத்தில் கோட், சூட் போட்டு, டை கட்டிக்கொண்டு நிறைய கம்பெனிகளை சுற்றி வந்தார். சினிமா வாய்ப்புக்காக அல்ல. அவர் வேலை பார்த்த கம்பெனிக்கு ஆர்டர்கள் வாங்குவதற்காக.

ஆமாம், அவர் பார்த்தது விற்பனை பிரதிநிதி வேலை. தனது நிறுவனத்துக்கு ஆர்டர்கள் பிடிக்கத்தான் அலையாய் அலைந்தார். பல கம்பெனிகள் அவரை உள்ளே வராதே என்று விரட்டியுள்ளன. இப்போது அவர் பட உலகில் ஒரு சகாப்தமாக இருக்கிறார். 70 வயதிலும் இளம் கதாநாயகர்களுக்கு இணையாக நிற்கிறார். விற்பனை பிரநிதியாக வேலை பார்த்தபோது அவர் வாங்கிய முதல் மாத சம்பளம் 500 ரூபாய். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரூ.20 கோடி வாங்குகிறார்.

ஷாருக்கானின் இளம் வயது வாழ்க்கை சுகமானதாக இல்லை. குடும்ப வறுமை காரணமாக கல்லூரியில் படித்த காலத்திலேயே சிறு சிறு வேலைகளுக்கு சென்றார். விழாக்களுக்கு பிரபலங்கள் வரும்போது அவர்களை மரியாதையோடு வரவேற்று இருக்கையில் உட்கார வைக்கும் வேலை பார்த்தார். இந்த வேலைக்காக அவர் வாங்கிய முதல் மாத சம்பளம் 50 ரூபாய், இப்போது ஒரு படத்தில் நடிக்க ரூ.45 கோடி வாங்குகிறார்.

அமீர்கான் நடிகராகும் முன்பு குறும்படம் எடுத்த ஒரு இயக்குனரிடம் உதவி டைரக்டராக வேலை பார்த்தார். அந்த படத்துக்காக அவருக்கு முதல் சம்பளமாக 1,000 ரூபாய் கிடைத்தது. இப்போது அமீர்கான் ஒரு படத்துக்கு ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறார். அக்‌ஷய்குமார் வருடத்துக்கு 3, 4 படங்களில் நடித்து ‘பிசி’யான நடிகராக இருக்கிறார். ரஜினிகாந்த் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள 2.0 படத்தில் வில்லனாகவும் வருகிறார்.

இவர் சினிமாவுக்கு வரும் முன்பு பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் கரண்டி பிடித்து சமையல்காரர் வேலை பார்த்தார். அந்த ஓட்டலில் அக்‌ஷய்குமார் முதல் மாதம் வாங்கிய சம்பளம் 1,500 ரூபாய். இப்போது ஒரு படத்துக்கு ரூ.45 கோடி வாங்குகிறார். இந்தியில் பிரபல நடிகராக வளர்ந்து வரும் ரன்தீப் கூடா சினிமாவுக்கு வரும் முன்பு ஆஸ்திரேலியாவில் வீடுவீடாக சென்று பீட்சா, பர்கருக்கு ஆர்டர்கள் பிடித்து அவற்றை சப்ளை செய்யும் ‘டெலிவரி பாயாக’ இருந்தார். இதற்காக அவர் வாங்கிய முதல் மாத சம்பளம் 300 ரூபாய். இப்போது ஒரு படத்துக்கு ரூ.5 கோடி.

நடிகர் இர்பான்கான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் டியூசன் மாஸ்டராக இருந்தார். ஒரு மாணவர் மற்றும் மாணவியிடம் மாதம் ரூ.25 கட்டணமாக வாங்கினார். இப்போது ஒரு படத்தில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் ரூ.3 கோடி. ஹிருத்திக் ரோஷனுக்கு அவரது தந்தை ஒரு சினிமா தயாரிப்பாளர் என்ற பின்புலம் இருந்தது. ஆஸ்தா என்ற படத்தில் 6 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அந்த படத்தில் நடித்தற்காக அவருக்கு முதல் சம்பளமாக ரூ.100 கிடைத்தது. தற்போது ஒரு படத்துக்கு ரூ.9 கோடி வாங்குகிறார். 

Next Story