‘பெண்களுக்கு சுகாதார விழிப்புணர்வு அவசியம்!’ - சோனம் கபூர் சொல்லும் சேதி


‘பெண்களுக்கு சுகாதார விழிப்புணர்வு அவசியம்!’ - சோனம் கபூர் சொல்லும் சேதி
x
தினத்தந்தி 28 Jan 2018 6:27 AM GMT (Updated: 2018-01-28T11:57:02+05:30)

பாலிவுட் பாவை சோனம் கபூர் முதன்முதலில் அறிமுகமான ‘சாவரியா’ படம் வெளியானது 2007-ல். ஆக, இவர் பாலிவுட்டில் பிரவேசித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

பாலிவுட் பாவை சோனம் கபூர் முதன்முதலில் அறிமுகமான ‘சாவரியா’ படம் வெளியானது 2007-ல். ஆக, இவர் பாலிவுட்டில் பிரவேசித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. பலவகையான வேடங்களில் நடித்துவிட்டார். சிந்தித்து நடிக்கும் நடிகை என்று பெயரும் எடுத்துவிட்டார். தனது திரையுலகப் பயணம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து மனம் திறந்து கூறுகிறார், சோனம்...

நீங்கள் திரையுலகுக்கு வந்து பத்தாண்டுகளாகிவிட்டன. ஆனால் இப்போதும், உங்களின் புதுப்படம் ‘பேடுமேன்’ ரிலீசாகும்போது படபடப்பாக இருக்கிறதா?

அப்படி இல்லை. நான் 2013-ல் நடித்த ‘ராஞ்சனா’வுக்குப் பிறகு எல்லா படங்களையுமே நல்ல நோக்கத்தில்தான் நடித்திருக்கிறேன். அவையெல்லாம், அதிகமானவர்களை சென்றுசேரக்கூடியவையாக, நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தவையாக, தாக்கத்தை ஏற்படுத்துபவையாக அமைந்திருக்கின்றன. அம்மாதிரி யான படங்களைத் தயாரிப்பதே பெரிய விஷயம்தான். ரசிகர்களின் நெஞ்சைத் தொடும் படங்களைத் தயாரிப்பது அவசியம் என்று நான் எண்ணுகிறேன். படங்கள் வசூல்ரீதியாக வெற்றிபெறும் அதேநேரம், ஏதாவது செய்தி சொல்லவும் வேண்டும். நான் நடிக்கும் படங்கள் குறித்து பெருமைப்பட வேண்டும், அதுதான் முக்கியம்.

இன்றைய சூழலுக்கு, ‘பேடுமேன்’ மிகவும் பொருத்தமான படம் என்கிறீர்களா?

நிச்சயமாக. நம் நாட்டில் வெறும் 12 சதவீதப் பெண்கள் மட்டுமே ‘நாப்கின்’ உபயோகிக்கிறார்கள். 88 சதவீதப் பெண்கள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறார்கள். அவர்கள், மாதவிலக்கு நாட்களில் அழுக்குத் துணி போன்றவற்றைப் பயன் படுத்துகிறார்கள். அது கிருமித்தொற்றையும், நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். ஏன், ‘செர்விக்கல் கேன்சரையும்’ கூட ஏற்படுத்தலாம். இதெல்லாம் நம்மைப் பயமுறுத்தும் புள்ளிவிவரங்கள். குடும்பத்தின் அச்சாணியாக உள்ள பெண்களுக்கு, சுகாதார விழிப்புணர்வு அவசியம். எனவே இதுகுறித்த ஒரு படம் எடுப்பதே வெற்றிகரமான விஷயம், பொருத்தமான விஷயம். இந்த விஷயம் குறித்து நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்ற சரியான நோக்கில் நாங்கள் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

இதுவரையிலான உங்கள் திரைப்பயணத்தை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்?

மேலும் மேலும் வளர வேண்டும், முதிர்ச்சி அடைய வேண்டும், சிறந்த நடிகையாக வேண்டும் என்பதுதான் எப்போதும் என் எண்ணம். என்னை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு எனது சீரான வளர்ச்சி தெரியும். இந்த வளர்ச்சி நிற்காது என்று நான் நினைக்கிறேன். கற்பதற்கு எதுவுமில்லை என்று எப்போதும் நான் நினைக்கமாட்டேன். நான் ஒரு நல்ல நடிகையாக மட்டுமல்ல, நல்ல மனுஷியாகவும் உருவாகிக்கொண்டிருக்கிறேன் என்பதை உணர்கிறேன். அந்தவகையில் நான் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

அப்படியானால், வாழ்வில் உங்களின் இந்தக் காலகட்டம் மிகவும் மகிழ்ச்சிகரமானது என்று கூறலாமா?

தற்போதைய நிலை எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இன்று என் வாழ்க்கை மிகவும் சமநிலையுடன் இருக்கிறது. அதுதான் முக்கியம். நடப்பதையெல்லாம் நேர் மறையான விதத்தில் அணுகுவது எனது சுபாவம். எனவே எந்த எதிர்மறைச் சூழலிலும் நான் இல்லை. சின்னச்சின்ன எதிர்மறையான விஷயங்கள் இருந்தாலும், அவையெல்லாம் மறைந்துவிட்டன. நான் இப்போது செய்துகொண்டிருப்பவை குறித்துத்தான் அக்கறை கொள்கிறேனே தவிர, வேறு எதைப் பற்றியும் அல்ல. மேலும் எப்படியெல்லாம் என்னால் வளர முடியும், சிறப்பாக முன்னேற முடியும் என்பதிலேயே எனது கவனம் இருக்கிறது.

2011-ம் ஆண்டு அக்ஷய்குமாருடன் ‘தேங்க் யூ’ படத்தில் நடித்த நீங்கள், தற்போது மீண்டும் ‘பேடுமேன்’ படத்தில் இணைந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இடையிலான உறவு எப்படி வளர்ந்திருக்கிறது?

அக் ஷய் ஒரு நடிகராக வெகுவாக மாறியிருக்கிறார், ஆனால் ஒரு மனிதராக அப்படியேதான் இருக்கிறார். ‘தேங்க் யூ’ படப்பிடிப்பின்போது அக் ஷயின் மனைவி டுவிங்கிள் கன்னாவின் பிறந்தநாள் வர, அவருக்கு என்ன பரிசு கொடுப்பது என்று அக் ஷய் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது நான் யோசனை கூறி உதவினேன். காரணம், டுவிங்கிளுக்கும் என்னைப் போலவே பேஷன், நகைகள், புத்தகங்கள் பிடிக்கும். எங்கள் இருவரின் பழக்கவழக்கங்கள், பிடித்த விஷயங்கள் எல்லாம் ஒரே மாதிரியானவைதான். எனவே என்னால் அக் ஷய்க்கு உதவ முடிந்தது. அவரிடம் இன்றும் மாறாத விஷயம், அவர் தன் மனைவி மீது கொண்டிருக்கும் அன்புதான். கமர்ஷியல் மசாலா, கருத்துள்ள படங்கள் என்று எல்லா வகையான படங்களிலும் நடிக்கும் அக் ஷயின் திறனும் எனக்கு பிடிக்கும்.

‘நீர்ஜா’ படத்துக்குப் பிறகு உங்கள் திரைவாழ்வில் ஒரு தொய்வு ஏற்பட்டதுபோலத் தோன்றுகிறதே?

அப்படியெல்லாம் எதுவுமில்லை. நான் இரண் டாண்டுகளில் நான்கு படங்களில் நடித்துவிட்டேன். ஆனால் ‘பேடுமேன்’ மாதிரியான முக்கியமான படங்களில் நடிப்பது அதிக காலம் எடுக்கத்தான் செய்யும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நான் பயணம் செய்வதை விரும்புவேன். உலகம் குறித்த ஒரு பார்வையைப் பெறுவதும், வித்தியாசமான ஆட்களைச் சந்திப்பதும், பல்வேறு விஷயங்கள் குறித்துப் புரிந்துகொள்வதும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். திரும்பத் திரும்ப ஒரே வேலையைச் செய்வது, ஒரே ஆட்களைப் பார்ப்பது, ஒரே மாதிரி பேசிக்கொண்டிருப்பது என்றிருந்தால் நீங்கள் மரத்துப் போய்விடுவீர்கள், உங்கள் வளர்ச்சி நின்றுவிடும்.

உங்களின் திருமணம் குறித்துப் பல்வேறு வதந்திகள் உலவிக்கொண்டிருக்கின்றனவே?

நான் எனது சொந்த வாழ்க்கை குறித்து வெளியே பேசுவதில்லை. இதுவரை எனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து நான் வாய் திறந்ததில்லை. இனியும் வாய் திறக்கமாட்டேன். எனது திருமணம் குறித்துப் பல வதந்திகள் உலவிக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும். அவை குறித்து என்றும் நான் எதுவும் சொல்ல மாட்டேன்.

Next Story