குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 28 Jan 2018 6:38 AM GMT (Updated: 28 Jan 2018 6:38 AM GMT)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, சூர்யா, கார்த்தி இருவருடனும் அவர்களின் தந்தை சிவகுமார் இணைந்து நடிப்பாரா? (பி.கணபதி, சென்னை)

மூன்று பேரும் இணைந்து நடிப்பதற்கு பொருத்தமான கதை இருக்கிறதா? அப்படி ஒரு கதை அமைந்தால், இணைந்து நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்கிறார்கள்!

***

முன்னாள் கதாநாயகிகள் அம்பிகா, ராதா ஆகிய இருவருக்கும் என்ன வயது ஆகிறது? இருவரும் இப்போது நடிப்பதில்லையே, ஏன்? (ஆர்.தனசேகரன்)

அம்பிகா, ஐம்பதை தாண்டி விட்டார். ராதா ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறார்! இருவரும் இனிமேல்தான் நடித்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் இல்லையாம்!

***

குருவியாரே, சரத்குமார் நடித்த படங்களில் மிக அதிக வசூல் செய்த படம் எது? (சி.டி.தண்டபாணி, திருக்கோவிலூர்)

நாட்டாமை, சூர்யவம்சம் ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், வசூல் ரீதியாக ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு சாதனை படைத்தன!

***

எமிஜாக்சன், டாப்சி ஆகிய இரண்டு பேரையும் தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லையே... அவர்கள் என்ன ஆனார்கள்? (எம்.கோபால், திண்டுக்கல்)

இருவருமே மும்பையில் முகாமிட்டு இந்தி படங்களில் நடித்து வருகிறார்கள். இரண்டு பேரும் இப்போதைக்கு தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளும் நிலையில் இல்லை!

***

குருவியாரே, நடிகர்கள் அரசியலுக்கு வருகிற அளவுக்கு நடிகைகள் யாரும் வருவதில்லையே...ஏன்? (எஸ்.கோமதி நாயகம், அம்பாசமுத்திரம்)

சினிமாவில் சமாளித்து விடலாம்...அரசியலில் சமாளிக்க முடியாது...என்று கருதுகிறார்களோ என்னவோ?

***

பூர்ணா என்பது அவருடைய சொந்த பெயரா அல்லது சினிமாவுக்காக வைத்துக் கொண்டதா? அவரது சொந்த ஊர் எது? (எம்.கோகுல், கோவை)

பூர்ணாவின் சொந்த பெயர், ‌ஷமினா கசிம். சினிமாவுக்காக அவர் வைத்துக் கொண்ட பெயர், பூர்ணா! அவரது சொந்த ஊர், கேரள மாநிலம் கள்ளூர்!

***

குருவியாரே, விஜயகாந்த் நடித்த ‘ஊமை விழிகள்’ படத்தை இயக்கியவர் யார், அந்த படத்துக்கு இசையமைத்தவர் யார்? (கா.பொன்னுதுரை, ஊட்டி)

‘ஊமை விழிகள்’ படத்தை இயக்கியவர், அரவிந்தராஜ். அந்த படத்துக்கு இசையமைத்தவர்கள், மனோஜ்–கியான்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனின் பல படங்களில், அவருக்கு அண்ணனாக பட அதிபர் கே.பாலாஜி நடித்து இருந்தார். இருவரில் வயதில் மூத்தவர் யார்? (பெ.மோகன், தூத்துக்குடி–3)

கே.பாலாஜியை விட வயதில் மூத்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன். சினிமாவில்தான் இவர் தம்பி. அவர் அண்ணன்!

***

குருவியாரே, கமல்ஹாசனும், அர்ஜுனும் இணைந்து நடித்த ‘குருதிப்புனல்’ படம் எந்த ஆண்டு வெளிவந்தது? அந்த படத்தின் டைரக்டர் யார்? (ரஜினி செந்தில், பாப்பம்பட்டி)

‘குருதிப்புனல்’ படம், 1995–ம் ஆண்டில் வெளிவந்தது. அந்த படத்தின் டைரக்டர், பி.சி.ஸ்ரீராம்!

***

டி.ராஜேந்தர் இயக்கி வரும் ‘ஒருதலை காதல்’ படம் எந்த நிலையில் உள்ளது? (வெங்கடேசன், குடியாத்தம்)

‘ஒருதலை காதல்’ படத்துக்கான பாடல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டன. மற்ற வேலைகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன!

***

குருவியாரே, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிகுமார், எந்த டைரக்டரிடம் உதவி டைரக்டராக இருந்தார்? (பி.முருகவேல், சேலம்)

கே.எஸ்.ரவிகுமார், டைரக்டர் விக்ரமனிடம் உதவி டைரக்டராக இருந்தார்!

***

கீர்த்தி சுரேஷ் இப்போது எந்த படத்தில் நடித்து வருகிறார்? (எஸ்.அரிகிருஷ்ணன், கோணலூர்)

கீர்த்தி சுரேஷ், ‘மகாநதி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில், தமிழிலும் தயாராகி வருகிறது!

***

குருவியாரே, விஜய் சேதுபதி நடித்த படங்கள் எல்லாமே வெற்றி பெறுகின்றன. அதன் ரகசியம் என்ன? (இரா.தங்கதுரை, சங்ககிரி)

சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கும் திறன்தான் அவருடைய வெற்றி ரகசியம்!

***

மறைந்த நடிகர் ஜெய்சங்கர் அறிமுகமான படம் எது? அந்த படத்தின் டைரக்டர் யார்? (செ,சேகர், கீழ்க்குடி)

‘இரவும் பகலும்.’ அந்த படத்தை டைரக்டு செய்தவர், ஜோசப் தளியத்!

***

குருவியாரே, சித்தியுடன் சண்டை போட்டுவிட்டு, சென்னையை விட்டு ஓடிய அஞ்சலி இப்போது எங்கே வசிக்கிறார்? (ஆர்.பிரதீப், மதுரவாயல்)

அஞ்சலி இப்போது, ஐதராபாத்தில் வசித்து வருகிறார். அங்கேயே அவர் சொந்த வீடு வாங்கி விட்டார். சென்னையில் படப்பிடிப்பு இருந்தால் மட்டுமே வந்து போகிறார்!

***

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் ‘மார்க்கெட்’ அந்தஸ்து எப்படியிருக்கிறது? (சோ.ராதாகிருஷ்ணன், காட்பாடி)

யோகி பாபு ரொம்ப ‘பிஸி’யாகி விட்டார். ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு அவர் கையில் புதிய பட வாய்ப்புகள் உள்ளன!

***

குருவியாரே, திரிஷாவுக்கு அவருடைய கண்கள், மூக்கு, உதடுகள் இவற்றில் எது அழகு? (மே.சின்னதுரை, பொள்ளாச்சி)

திரிஷாவுக்கு அவருடைய கண்கள், மூக்கு, உதடுகள் உள்ளிட்ட முகம் எல்லாமே அழகு!

***

கே.பாக்யராஜ் நடிப்பு–டைரக்‌ஷனில், அவருடைய ஜோடியாக மீனா நடித்த ‘ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி,’ வெற்றி படமா, தோல்வி படமா? (சி.எம்.கேசவன், திருப்போரூர்)

‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி,’ மிக சிறந்த கதையம்சம் கொண்ட படம். அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், தயாரிப்பாளரின் முதலுக்கு மோசமில்லாமல், வசூல் செய்தது!

***

குருவியாரே, நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் சொந்த ஊர் எது, அவர் அறிமுகமான படம் எது, இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார்? (எஸ்.சம்பத் ராம், ஸ்ரீரங்கம்)

எம்.எஸ்.பாஸ்கரின் சொந்த ஊர், தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டை. அவர் அறிமுகமான படம், விசு இயக்கிய ‘திருமதி ஒரு வெகுமதி.’ இதுவரை 150 படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார்!

***

ஜோதிகா நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் எது? (எம்.கே.விஜய் பிரகாஷ், ராசிபுரம்)

‘நாச்சியார்.’

***

Next Story