குழந்தை இறைவனுடைய ‘மேஜிக்’


குழந்தை இறைவனுடைய ‘மேஜிக்’
x
தினத்தந்தி 28 Jan 2018 7:03 AM GMT (Updated: 28 Jan 2018 7:03 AM GMT)

அப்பா என்ற இனிய உறவு ஆண்டவனால் வழங்கப்பட்ட வரம். கடவுளை யாரும் பார்த்ததில்லை. ஆனால் கடவுளுக்குரியதாக கருதப்படும் அத்தனை தகுதிகளும் அப்பாவிடம் இருப்பதை காண்கிறோம்.

ப்பா என்ற இனிய உறவு ஆண்டவனால் வழங்கப்பட்ட வரம். கடவுளை யாரும் பார்த்ததில்லை. ஆனால் கடவுளுக்குரியதாக கருதப்படும் அத்தனை தகுதிகளும் அப்பாவிடம் இருப்பதை காண்கிறோம். தியாகம், வழிகாட்டுதல், தவறுகளை திருத்தும் குணம், பாதுகாக்கும் பண்பு இவையனைத்தும் நல்ல தந்தைக்குரியது. சாதாரண மனிதராக இருந்தாலும், பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் அப்பா ஸ்தானம் ஒரே மாதிரியானதுதான். இந்தி திரை உலக பிரபல நடிகர்களான அப்பாக்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்..

நடிகர் ஷாஹித் கபூர்

எனக்கும், என் மனைவி மீராவுக்கும் கிடைத்த பொக்கிஷம் போன்றவள் எங்கள் மகள் மிஷா. அப்பாவானதும் எனது வாழ்க்கை முறையே மாறிவிட்டது. பல பொறுப்புகள் தானாக வந்துவிட்டது. உலக வாழ்க்கையைப் பற்றிய தவறான அபிப்பிராயங்கள் என் வாழ்க்கையில் இருந்து முற்றிலும் மாறிவிட்டது. என்னைச் சுற்றி நாலா புறமும் ஒரு ஒளி வட்டம் சூழ்ந்துகொண்டது போன்ற உணர்வும், நேர்மறையான எண்ணங்களும் என்னிடம் தோன்றியுள்ளன. இனி எல்லாம் நல்லதாக அமையும் என்று என் மனம் சொன்னது.

வீட்டில் இருப்பது பற்றி அதிகம் சிந்திக்காத நான், மகள் பிறந்த பின்பு எப்போதும் வீட்டில் இருக்கவேண்டும் என்று விரும்பினேன். தயக்கத்தோடு படப்பிடிப்புக்கு சென்றேன். அங்கும் ஒரே பரபரப்பு. எப்போது வேலை முடியும் வீட்டிற்குத் திரும்பலாம் என்ற எண்ணம் உருவானது. அதற்கு முன்பு அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்பட்டதேஇல்லை. படப்பிடிப்பு முடிந்ததும் நண்பர்கள், பார்ட்டி, வாரக் கடைசியில் சுற்றுலா என்றுதான் என் வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. மிஷா வந்த பிறகு என் அன்றாட வாழ்க்கைமுறை மாறிவிட்டது. ஒருநாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் சந்தோஷமாக குழந்தையைப் பற்றி சிந்திக்கிறேன். இது விசித்திரமான மாற்றம். குழந்தை இறைவனுடைய மேஜிக்.

நடிகர் ரித்திக்ரோஷன்

என் குழந்தைகள் ரேஹான், ரிதான் இருவரும் என் இரு கண்கள். அவர்கள் மூலம் இந்த உலகையே அழகாக பார்க்கிறேன். அவர்களுடைய பேச்சு என் நினைவில் வந்து சிரிப்பூட்டும். எனக்கு என் அப்பா ராகேஷ் ரோஷன் தான் ஹீரோ. அதேபோல என் குழந்தைகளுக்கு நான் தான் ஹீரோ. திரைப் படத்தில் செய்வதை எல்லாம் நான் அவர்களுக்கு செய்துகாட்டவேண்டும்.

அதிக வேலைப்பளுவால் சில நேரம் சோர்ந்துவிடுவேன். முதுகு வலி, குடும்ப பிரச்சினை எல்லாம் சேர்ந்து என் மனதை பிசைந்து மன அழுத்தத்தை உருவாக்கும். என்னடா வாழ்க்கை இது என்றுகூட தோன்றும். அப்போதெல்லாம் என் குழந்தைகள் தான் எனக்கு மருந்து. ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர்களை அழைத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பிவிடுவேன். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். மனதில் உற்சாகம் நிரம்பிவிடும். பின்பு என் வேலைகள் கூடுதல் உற்சாகத்துடன் தொடங்கும். அப்பா, மகன் உறவு அற்புதமானது.

நடிகர் சைய்ப் அலிகான்

அப்பாவானது வார்த்தைகளால் விவரிக்க முடியாத சந்தோஷம். தைமூர் பிறந்தது என் வாழ்க்கையில் ஒரு திருப்பம். அடியோடு வாழ்க்கைமுறை மாறிவிட்டது. கரீனாவும், நானும் குழந்தையை கவனித்துக்கொள்வோம்.

குழந்தைக்கு அப்பாவாக இருப்பது வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வேலைதான். மனிதனை பொறுப்புள்ளவனாக மாற்றுவது அப்பா பதவி. இந்தப் பதவிக்காக மனிதன் தவம் இருக்கவேண்டும். அப்படி ஒரு உன்னதமான பதவி அது. குழந்தை அம்மாவை அடையாளங்கண்டு கொள்வதுபோல அப்பாவையும் பார்த்து சிரிக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி விவரிக்கமுடியாதது.

நடிகர் அக் ஷய் குமார்

நானும், டுவிங்கிள் கண்ணாவும் ஆரவ், நிதாரா என்ற இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறோம். இருவரையுமே எனக்கு பிடிக்கும். அவர்களை எனது இரண்டு உயிர்கள் என்று சொல்வேன். அவர்கள் என் விருப்பப்படி நல்லவர்களாக வளரவேண்டுமானால் அதில் என் பங்கு இருக்கவேண்டும் என்று நினைப்பேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்கிவிடுவேன். அவர்களின் குறும்புகளை ரசிப்பது பெரிய மகிழ்ச்சி. என்னோடு விளையாடுவது அவர் களுக்குப் பிடிக்கும். விழுந்து புரண்டு விளையாடுவது தண்ணீரில் குதிப்பது எல்லாமே மகிழ்ச்சிதான்.

அவர்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோது தலைக்குமேல் தூக்கிப் போட்டுப் பிடிப்பேன். என் மனைவி அலறுவாள். ஆனால் என் மகளுக்கு அதுதான் பிடிக்கும். அவர்கள் மற்ற சராசரி குழந்தைகள் போல வளரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் பெரிய நட்சத்திர குழந்தை என்ற எண்ணம் அவர்களுக்கு வராதபடி பார்த்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாக வரவேண்டும் என்றால் மற்றவர் களோடு சேர்ந்து பழகவேண்டும். அப்போதுதான் அவர் களுக்கு கிடைத்துள்ள உயர்வுகளை முழுமையாக அனுபவித்து மகிழ்ச்சியாக ஒரு பயனுள்ள வாழ்க்கையை வாழ முடியும்.

நடிகர் அஜய்தேவ்கான்

வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அரிய பொக்கிஷங்கள் நைசா மற்றும் யுக். நைசா எனக்கு மகள் அல்ல அம்மா. அவள் என்னை திட்டும்போதும், அறிவுரை கூறும்போதும் எனக்கு என் அம்மா நினைவு வரும். லேட்டாக வீட்டுக்குப் போனால் திட்டுவாள். இதுதான் வீட்டுக்கு வர நேரமா? எத்தனை தடவை சொல்றது. நீங்க பண்றது கொஞ்சமும் சரியில்லை. சரி பாலை சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்குங்க. காலையிலே பேசிக்கலாம்’ என்பாள். இடைவெளியே விடாம பேசுவாள். என்னை கண்டிப்பது அவளுடைய அன்றாட வேலை. வீட்டில் உள்ள அத்தனை நவீன தொழில்நுட்பங்களையும் அவள் பயன்படுத்துவாள். அவைகளில் என்ன சிக்கலானாலும் கண்டுபிடித்து சரி செய்து விடுவாள். ஆச்சரியமாக இருக்கும். அவள் எனக்கு அம்மா, நல்ல தோழி எல்லாம்.

இயக்குனர் கரண் ஜோகர்

எங்களுக்கு இரட்டை குழந்தைகள். ஒன்று ஆண், இன்னொன்று பெண். என் பெற்றோர்களை கவுரவப்படுத்தும் விதமாக மகன் பெயர் யஷ் (அப்பா பெயர்), மகள் பெயர் ஹீரு (அம்மா பெயர்) என்று வைத்திருக்கிறேன். குழந்தைகள் வந்தவுடன் புதிய பொறுப்பும் வந்துவிடும். இரண்டு குழந்தைகளை பராமரிப்பது மிகப்பெரிய பொறுப்பு. ஒரே நேரத்தில் இருவரும் அழுவார்கள். சமாளிக்க முடியாது. தூங்குவது, சாப்பிடுவது எல்லாம் ஒரே நேரத்தில். என் பெற்றோரின் பங்கு குழந்தை வளர்ப்பில் நிறைய இருக்கிறது. இருவரும் இரண்டு கண்கள்.

Next Story