சாவித்திரி வாழ்க்கை படம், படப்பிடிப்பு முடிந்தது


சாவித்திரி வாழ்க்கை படம், படப்பிடிப்பு முடிந்தது
x
தினத்தந்தி 29 Jan 2018 11:15 PM GMT (Updated: 29 Jan 2018 9:12 PM GMT)

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள ‘மகாநதி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.

தமிழ், தெலுங்கு பட உலகில் 1950 மற்றும் 60-களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் சாவித்திரி. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ்வரராவ், என்.டி.ராமராவ் உள்ளிட்ட பலருடன் நடித்து இருக்கிறார்.

பாசமலர், களத்தூர் கண்ணம்மா, பாவமன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா, திருவிளையாடல், கந்தன் கருணை, பரிசு, நவராத்திரி மிஸ்சியம்மா உள்ளிட்ட பல படங்கள் சாவித்திரியின் அபாரமான நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடின. வீட்டில் நீச்சல் குளம் வைத்து காலில் தங்க மெட்டி அணிந்த ஒரே நடிகை என்ற பெயருடன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்.

சாவித்திரி வாழ்க்கை படம்

அதன்பிறகு அவரது வாழ்க்கையில் விதி விளையாடியது. சொந்தமாக படங்கள் எடுத்து நஷ்டமடைந்தார். பங்களாக்கள், கார்கள் என்று தனக்கிருந்த சொத்துக்களையெல்லாம் விற்று வீதிக்கு வந்து வறுமையில் வாடினார். கடைசியில் கோமாவில் விழுந்து நினைவு திரும்பாமலேயே தனது 46-வது வயதில் மரணம் அடைந்தார்.

அவரது வாழ்க்கையை ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கு டைரக்டர் நாக் அஸ்வின் தமிழ், தெலுங்கு மொழிகளில் படமாக்கி உள்ளார். இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சமந்தா பழம்பெரும் நடிகை ஜமுனாவாகவும் துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு

இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், பின்னணி இசைகோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. மார்ச் மாதம் தமிழ், தெலுங்கில் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

ஏற்கனவே மறைந்த நடிகை சில்க் சுமிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து வந்த ‘த டர்ட்டி பிக்சர்’ படம் வசூல் குவித்தது. அதுபோல் மகாநதி படத்துக்கும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். 

Next Story