நடிகர் ராணாவுடன் காதலா? ரகுல்பிரீத் சிங் விளக்கம்


நடிகர் ராணாவுடன் காதலா? ரகுல்பிரீத் சிங் விளக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2018 12:00 AM GMT (Updated: 2018-01-30T03:00:20+05:30)

நடிகர் ராணாவும் நடிகை ரகுல்பிரீத் சிங்கும் காதலிப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர் ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக வந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ராணாவுடன் நடிகை திரிஷாவை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் ஜோடியாக சுற்றிய படங்களும் இணையதளங்களில் பரவியது. அவர்கள், தங்களுக்குள் காதல் இல்லை என்றும் நட்பாகத்தான் பழகுகிறோம் என்றும் மறுத்தார்கள்.

இந்த நிலையில் ராணாவும் நடிகை ரகுல்பிரீத் சிங்கும் காதலிப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. ரகுல் பிரீத் சிங் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து இருந்தார். செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

காதல் பற்றி ரகுல்பிரீத் சிங்கிடம் கேட்டபோது, “நானும் ராணாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் நண்பர்கள் குழுவில் உள்ள 20 பேர் திருமணம் ஆகாதவர்கள். நாங்கள் அனைவருமே நெருக்கமான நட்புடன் இருக்கிறோம். ராணாவுக்கும் எனக்கும் காதல் என்று வெளியாகும் வதந்தி களை பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது” என்றார்.

ரகுல் பிரீத் சிங் மறுத்தாலும் இருவரும் காதலிப்பது உண்மைதான் என்று தெலுங்கு பட உலகினர் உறுதியாக சொல்கிறார்கள். இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ரகசியமாக சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். 

Next Story