நடிகை அனுஷ்கா புதிய படங்களில் நடிக்க மறுப்பது ஏன்?


நடிகை அனுஷ்கா புதிய படங்களில் நடிக்க மறுப்பது ஏன்?
x
தினத்தந்தி 31 Jan 2018 12:00 AM GMT (Updated: 2018-01-31T03:26:24+05:30)

நடிகை அனுஷ்கா தற்போது புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை.

அனுஷ்கா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி, பாகுபலி-2 படங்கள் அவரது திறமையை வெளிப்படுத்தின. உடல் எடையை கூட்டி நடித்த இஞ்சி இடுப்பழகி படமும் பெயர் வாங்கி கொடுத்தது. சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் பாகமதி படத்திலும் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்து இருக்கிறார்.

இந்த படம் தெலுங்கில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. எதிர்பார்த்ததை விட இது அதிக வசூல்.

தற்போது புதிய படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தமாகவில்லை. திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகப்போவதாக கூறப்பட்டது. பிரபாசை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலை மறுத்தார். புதிய படங்களுக்கு ஒப்பந்தம் ஆகாதது ஏன்? என்பது குறித்து அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-

“நான் பாகுபலி படத்துக்கு பிறகு எந்த படத்திலுமே ஒப்பந்தம் ஆகவில்லை. பாகமதி கதையை பாகுபலிக்கு முன்பே கேட்டு கால்ஷீட் கொடுத்து இருந்தேன். படங்களின் வெற்றியை அனுபவிக்க கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வதில் தவறு இல்லை. பாகுபலியின் வெற்றி சந்தோஷத்தை கொண்டாடினேன். இப்போது பாகமதிக்கு கிடைத்துள்ள வரவேற்பும் அதே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகமதி படப்பிடிப்பில் எனக்கு சில காயங்கள் ஏற்பட்டன. அது ஆற வேண்டும் என்பதற்காக புதிய படங்களை ஏற்கவில்லை. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகளும் செய்து வருகிறேன். புதிய படங்களுக்கு கதைகள் கேட்டேன். ஆனால் எதுவும் பிடிக்கவில்லை. நல்ல கதைகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன்.”

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story