ஜான்சி ராணி லட்சுமிபாய் படத்தை எதிர்ப்பதா? கங்கனா ரணாவத் கண்டனம்


ஜான்சி ராணி லட்சுமிபாய் படத்தை எதிர்ப்பதா? கங்கனா ரணாவத் கண்டனம்
x
தினத்தந்தி 9 Feb 2018 11:15 PM GMT (Updated: 9 Feb 2018 8:01 PM GMT)

ஜான்சி ராணி லட்சுமிபாய் படத்தை எதிர்ப்பதா? கங்கனா ரணாவத் கண்டனம்

வெள்ளைக்காரரை காதலிக்கும் கதை அல்ல ஜான்சி ராணி லட்சுமிபாய் படத்தை எதிர்ப்பதா? கங்கனா ரணாவத் கண்டனம்

தீபிகா படுகோனே நடித்து திரைக்கு வந்த ‘பத்மாவத்’ படத்தின் சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் புதிதாக ஜான்சி ராணி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாராகி உள்ள ‘மணிகர்னிகா’ படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுவும் பத்மாவத் படம் போல் சரித்திர கதையம்சம் கொண்டது. ராணி லட்சுமிபாய் கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.

பத்மாவத் படத்தில் சித்தூர் ராணி பத்மினி மொகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியை காதலிப்பதுபோன்று காட்சி வைத்து இருப்பதாக எதிர்ப்பு கிளப்பினர். மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமிபாய் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த வெள்ளைக்கார ஏஜெண்ட் ஒருவரை காதலிப்பது போல் காட்சி இருப்பதாக சர்ச்சை உருவாகி உள்ளது.

ராணி லட்சுமிபாய் பிறந்தபோது அவருக்கு மணிகர்னிகா என்று பெயர் வைத்து இருந்தனர். அதையே படத்துக்கு தலைப்பாக்கி உள்ளனர். சிம்பு, அனுஷ்கா நடித்த வானம் படத்தை இயக்கி பிரபலமான கிரிஷ் டைரக்டு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தில் ராணி லட்சுமிபாய் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த வெள்ளைக்கார ஏஜெண்டை காதலிப்பதுபோல் காட்சி வைத்து வரலாற்றை திரித்து இருப்பதாகவும், எனவே படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் ராஜஸ்தானை சேர்ந்த சர்வ பிராமண மகாசபை அறிவித்து உள்ளது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

எதிர்ப்பு குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:-

“ராணி லட்சுமிபாய் படம் பற்றி கற்பனையாக சிந்தித்து எதிர்ப்பு கிளப்பட்டு உள்ளது. அவர்கள் சொல்வதுபோன்ற சர்ச்சை காட்சிகள் படத்தில் இருக்கிறது என்று நினைத்து பார்ப்பதே தரம் தாழ்ந்தது. மணிகர்னிகா படத்தில் அப்படி காட்சிகள் எதுவும் இல்லை. நாங்கள் அதுமாதிரி யோசித்து பார்க்கவே இல்லை. படத்தை உள்நோக்கத்தோடு தவறாக சித்தரித்து எதிர்க்கிறார்கள்.

அவர்களின் குற்றச்சாட்டுகள் எங்களுக்கு மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகுபலி கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் இந்த படத்துக்கு கதையை எழுதி உள்ளார். அவர் தனது மகளுக்கு மணிகர்னிகா என்றுதான் பெயர் வைத்துள்ளார். அவர் படத்தின் கதையை தவறாக எழுதுவார் என்று சிந்திப்பதே தவறு”

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.

Next Story