சினிமா செய்திகள்

இந்தியில் கால் பதிக்கும் நிவின்பாலி + "||" + Nivin Bali in Hindi

இந்தியில் கால் பதிக்கும் நிவின்பாலி

இந்தியில் கால் பதிக்கும் நிவின்பாலி
நிவின்பாலியின் வளர்ச்சி இப்போது அவருக்கு இந்தி பட வாய்ப்பையும் பெற்றுத் தந்திருக்கிறது.
லையாள சினிமா உலகில் இப்போதைய நிலைக்கு மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோருக்கு அடுத்தபடியான இடத்தை பிடித்திருப்பவர் இளம் நடிகரான நிவின்பாலி. இவர், கிட்டத்தட்ட 40 வருடங்களாக மம்முட்டியும், மோகன்லாலும் போராடிப் பிடித்த இடத்தை, 8 ஆண்டுகள் என்னும் குறுகிய இடைவெளியிலேயே எட்டிப்பிடித்திருக்கிறார். அதுதான் மலையாள சினிமா உலகம் மட்டுமின்றி, இந்திய சினிமா உலகமும் இவர் மீது பார்வையை பதிக்கக் காரணம்.

தற்போது மலையாள சினிமா உலகை கலக்கிக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகர்களான பிருத்விராஜ், துல்கர் சல்மான், பகத் பாசில், வினித் சீனிவாசன், குஞ்சகோ போபன், பிரணவ் உள்ளிட்ட பலரும் சினிமா பின்புலம் கொண்டவர்கள். ஆனால் எந்த சினிமா பின்புலம் இல்லாமல், தனது சொந்த முயற்சியால் 2010-ம் ஆண்டு மலையாள உலகிற்குள் நுழைந்தவர் நிவின்பாலி.

1984-ம் ஆண்டு பிறந்த நிவின்பாலி, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறையில் பட்டம் பெற்ற மாணவர். 2006-ம் ஆண்டு, தனது கல்லூரி படிப்பை முடித்த அவர், அடுத்த இரண்டு ஆண்டுகள் பெங்களூருவில் உள்ள ஒரு இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அந்த காலகட்டத்தில் தான் அவரது தந்தை இறந்து போனார். இதனால் தனித்துப் போன தாயை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக, தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார்.

சொந்த ஊரில் இருந்தபடி சிறுசிறு வேலைகளைச் செய்து கொண்டு, ஒரு பக்கம் சினிமாத் துறையில் நுழைவதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்தார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நிவின்பாலிக்கு, சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. எங்கெல்லாம் சினிமாவுக்கு புதுமுகத் தேர்வு நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் நிவின்பாலியின் பாதங்கள் பதிந்தபடியே இருந்தது.

அப்போது மலையாளத்தின் முன்னணி நடிகராக இருந்த சீனிவாசனின் மகன் வினித் சீனிவாசன் இயக்கத்தில் ஒரு புதுப்படம் அறிவிக்கப்பட்டு, அந்தப்படத்திற்காக புதுமுக நடிகர்கள் தேர்வு நடைபெற்றது. அந்த நேர்முகத்தேர்வுக்குச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களில் நிவின்பாலியும் ஒருவர். நூற்றுக் கணக்கானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வடிகட்டப்பட்டு, 12 பேர் என்ற நிலையில் வந்து நின்றது. அந்த 12 பேரில் நிவின் பாலிக்கு இடம் இல்லாமல் போனது. படப்பிடிப்பு தொடங்கவிருந்த நேரத்தில், நடிக்க வந்தவர்களில் ஒருவர் விலகிக்கொள்ள, அடுத்ததாக வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வில் தன்னுடைய நடிப்புத் திறமையை இன்னும் மெருகேற்றிக்கொண்டு போய் பங்கேற்றார் நிவின்பாலி. அவரது விடாமுயற்சிக்கு, வாய்ப்பு என்னும் கதவு திறந்து கொண்டது.

வினித் சீனிவாசன் இயக்கத்தில் உருவான அந்தப் படம் ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்.’ இந்தப் படத்தில் நிவின்பாலி கதாநாயகன் இல்லை. 5 நாயகர்களில் ஒருவராக நடித்தார். ஆனால் பிரகாசன் என்ற அந்தக் கதாபாத்திரத்தை திறம்படச் செய்திருந்தார். அதோடு இயக்குனர் வினித் சீனிவாசனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார். அதன்பிறகு டிராபிக், மெட்ரோ, செவன்ஸ், ஸ்பானிஸ் மசாலா போன்ற படங்களில் சிறு சிறு வேடமே கிடைத்தது. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், அதற்கேற்றாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு நடித்தார். இந்தப் படங்களை அடுத்து வினித் சீனிவாசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு நிவின்பாலியைத் தேடி வந்தது. நிவின்பாலி கதாநாயகனாகவும், இஷா தல்வார் கதாநாயகியாகவும் நடித்த அந்தப்படம், மலையாள உலகின் இளம் ரசிகர்களின் உறக்கத்தை பறித்துக் கொண்டது. அந்த நேரத்தில் ஆகச்சிறந்த காதல் படமாக உருவாகியிருந்த அந்தப் படத்தின் பெயர் ‘தட்டத்தின் மறையத்து.’

இந்தப் படம் நிவின்பாலியின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அடுத்ததாக தன்னுடைய முந்தையப் படங்களைப் போலவே அனைத்து படங்களும் இருந்து விடக்கூடாது என் பதில் நிவின்பாலி கவனம் செலுத்தினார். 2014-ம் ஆண்டு வெளியான ‘1983’, ‘பெங்களூர் டேஸ்’ போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன; அதோடு சிறந்த நடிகர் என்ற விருதுகளையும் பெற்றார்.

முன்னதாக 2013-ம் ஆண்டு ‘நேரம்’ படம் நிவின் பாலிக்கு நல்லபெயரைப் பெற்றுத் தந்தது. இந்தப் படம் மூலமாக தமிழில் அவர் அறிமுகமானார். ‘நேரம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு நிவின்பாலி நடித்து வெளியான படம் ‘பிரேமம்’. இந்தப் படம் இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது என்றால் அது மிகையல்ல. இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான ‘ஆட்டோகிராப்’ படத்தின் புதிய பரிமாணம் தான் ‘பிரேமம்’ என்றாலும், அந்தப் படம் இளம் ரசிகர்களை ஏதோ ஒரு வகையில் வெகுவாக ஈர்த்துக் கொண்டது. இல்லையென்றால், மொழி மாற்றம் செய்யப்படாமல் மலையாள மொழியிலேயே வெளியான அந்தப் படம், சென்னையில் 200 நாட்களைத் தாண்டி ஓடியிருக்க வாய்ப்பே இல்லை.

அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியான, ‘ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ’, ‘ஜேக்கப்பின்ட சொர்க்கராஜ்ஜியம்’, ‘சகாவு’, ‘ஞண்டுகளோட நாட்டில் ஓரிடவேளா’, ‘ஹே ஜூட்’ போன்ற படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தோடு அமைந்த வெற்றிப் படங்கள்.

நிவின்பாலியின் இந்த நிலையான வளர்ச்சி இப்போது அவருக்கு இந்தி பட வாய்ப்பையும் பெற்றுத் தந்திருக்கிறது. ‘மூத்தோன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மலையாளம், இந்தி என இரு மொழிகளிலும் இயக்குபவர் கீது மோகன்தாஸ். இவர் வேறுயாருமல்ல.. ‘என் பொம்முகுட்டி அம்மாவுக்கு’ என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான். இன்னும் சொல்வதென்றால் 2003-ம் ஆண்டு, கமல்ஹாசன் தயாரிப்பில் மாதவன் நடித்து வெளியான ‘நளதமயந்தி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் இந்த கீது மோகன்தாஸ். ‘நளதமயந்தி’ படத்திற்குப் பிறகு தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால், மலையாள சினிமாவிலேயே நடித்து வந்த அவர், 2009-ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் 2014-ம் ஆண்டு இயக்குனராக உருவெடுத்தார். அந்த ஆண்டில் அவர் இயக்கிய ‘லையர்ஸ் டைஸ்’ என்ற இந்திப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமின்றி இரண்டு தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. இந்தப் படத்தில் நடித்த கீதாஞ்சலி தப்பா சிறந்த நடிகையாகவும், பட ஒளிப்பதிவாளரும் கீது மோகன்தாஸின் கணவருமான ராஜீவ் ரவி சிறந்த ஒளிப் பதிவாளராகவும் இந்த தேசிய விருதுகளைப் பெற்றனர். மேலும் ‘லையர்ஸ் டைஸ்’ படம், இந்தியப் படப்பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு கீது மோகன்தாஸ் இயக்கும் படம் தான் ‘மூத்தோன்’. இந்தப் படத்தில் தான் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்திற்கான ‘பஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியான போதே, அது பர பரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் வெளியாகியிருந்த நிவின்பாலியின் தோற்றம், கட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, அடர்த்தியாக வளர்ந்த தாடி, மீசை, மூக்கில் புல்லாக்கு என்று வித்தியாசமாக இருந்தது. இந்தத் தோற்றம் நிவின்பாலியின் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, படம் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்தையும் தூண்டியிருக்கிறது. ஒரு இளம்பெண் தன்னுடைய மூத்த அண்ணனை, லட்சத் தீவு பகுதியில் தேடி அலையும் பயணக் கதையே ‘மூத்தோன்’ படம் என்று சொல்லப்படுகிறது.

மலையாள சினிமாவில் நிலையான இடத்தை, குறுகிய காலத்திலேயே பெற்றிருக்கும் நிவின்பாலியும், முதல் படத்திலேயே இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற கீது மோகன்தாஸ் இயக்கத்திலும் உருவாகும் படம் என்பதால் இது அனைவரிடமும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இதுவரை தன்னுடைய யதார்த்த நடிப்பாலும், வித்தியாசமான கதைத் தேர்வாலும் மலையாள சினிமா ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்த நிவின்பாலி, ‘மூத்தோன்’ படத்தின் மூலமாக இந்தியில் முத்திரை பதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.