தீபிகாவுக்கு 200 பேர் வடிவமைத்த 400 கிலோ ஆபரணங்கள்


தீபிகாவுக்கு 200 பேர் வடிவமைத்த 400 கிலோ ஆபரணங்கள்
x
தினத்தந்தி 11 Feb 2018 5:55 AM GMT (Updated: 11 Feb 2018 5:55 AM GMT)

‘பத்மாவத்’படம் பரபரப்பாக பேசப்படுவது போலவே அதில் அரசியாக அவதார மெடுத்த நடிகை தீபிகா படுகோனே அணிந்திருந்த அரச பரம்பரை ஆடைகளும், ஆபரணங்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘பத்மாவத்’படம் பரபரப்பாக பேசப்படுவது போலவே அதில் அரசியாக அவதார மெடுத்த நடிகை தீபிகா படுகோனே அணிந்திருந்த அரச பரம்பரை ஆடைகளும், ஆபரணங்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவ்வளவு அற்புதமாக ஆடைகளையும், ஆபரணங்களையும் கலைஞர்கள் வடிவமைத்து அணியவைத்து காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அவைகளை வடிவமைப்பதற்கு முன்னால் பழங்கால பொருட்களை பாதுகாக்கும் இடங் களுக்கு சென்று பார்வையிட்டு, அவை களின் கலைநயத்தை அப்படியே பிரதி பலிக்க செய்திருக் கிறார்கள்.

மன்னர் கால பாரம்பரிய ஆடைகளை கலை வேலைப்பாடுகளுடன் வடிவமைத்தவர்கள் ரிம்பிள் மற்றும் ஹர்ப்ரீத். இவர்கள் அந்தக் கால அரசிகளின் ஆடை கலாசாரத்தை அறிந்துகொள்வதற்காக, இரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதும் அலைந்து திரிந்திருக்கிறார்கள். ராஜஸ்தானில் உள்ள அருங்காட்சியகம் அவர்களுடைய தேடலுக்கு விடையாக இருந்திருக்கிறது. ரஜபுத்திர ராணிகள் அணிந்த ஆடைகளை அங்கு பார்த்து, அது போல வடிவமைத்துள்ளார்கள். அவை தீபிகா படுகோனேவை கூடுதல் அழகாக்கியுள்ளது. ஆடையை போலவே தீபிகா அணிந்திருந்த நகைகளும் பலருடைய புருவங்களை விரிய வைத்தன. மலர் சரங்களை போல அடுக்கடுக்காக கோர்க்கப்பட்டிருந்த ஆபரணங்களை பார்த்த பலரும் ‘தீபிகா எத்தனை கிலோ நகைகள் அணிந்திருந்தார்?’ என்ற ஆச்சரிய கேள்வியை எழுப்புவார்கள்.

‘பத்மாவத்’படத்தில் தீபிகாவுக்காக 400 கிலோ எடைகொண்ட நகைகளை தயாரித்திருக்கிறார்கள். பிரபலமான ஜூவல்லரி ஒன்று இந்த பாரம்பரிய நகைகளை 600 நாட்களில் உருவாக்கி கொடுத்திருக்கிறது. 200 நகை வடிவமைப்பாளர்கள் அதில் தங்கள் கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார்கள். அதனால்தான் அவை அதிக கலைநுணுக்கத்தை பெற்றிருக்கிறது.

படத்தில் இடம்பெற்ற ராஜஸ்தானிய பாரம்பரிய நடனமான ‘கூமர்’, பலரையும் கவர்ந்திருக்கிறது. கூமர் என்றால் சுற்றிச் சுற்றி ஆடும் நடனம் என்று அர்த்தம். தீபிகா படுகோனே அந்த நடன காட்சியில் 60-க்கும் மேற்பட்ட முறை சுழன்று ஆடுவார். அந்த நாட்டியத்திற்காக அவர் அணிந்திருந்த லஹங்கா ஆடை 30 கிலோ எடை கொண்டது. துப்பட்டா மட்டுமே 4 கிலோ எடை. அந்த பாரம்பரிய உடையின் விலை ரூ.20 லட்சம். அதனை வடிவமைத்தவர் ரிப்பல் நரூலா. படப்பிடிப்பின்போது தீபிகாவின் உடல் எடை 58 கிலோ இருந்தது. உடை, நகைகள் அணிந்த பிறகு 93 கிலோவாக எடை உயர்ந்தது. படப்பிடிப்பு முடியும் வரை தினமும் மணிக்கணக்கில் 34 கிலோ ஆடையை சுமந்து கொண்டிருந்தார்.

ஜூவல்லரி டிசைனர் கவிதா ராவத், தீபிகாவுக்காக வடிவமைக்கப்பட்ட நகைகளைப் பற்றி விளக்குகிறார்..

‘‘ஆபரணங்களில் தங்கம் மட்டுமின்றி விலை உயர்ந்த நீலம், மரகதம், முத்து, ரத்தினம், பவளம் முதலியவைகளையும் பதித்தோம். இதுபோன்ற நவரத்தினக் கற்கள் கோவில் விக்ரகங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ராஜ வம்சத்தை சேர்ந்தவர்களும் பயன்படுத்துவார்கள். ‘ஒருசில சக்தி வாய்ந்த கற்களை அணிந்தால், அணிந்தவர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். உயிருக்கேகூட ஆபத்து ஏற்படலாம்’ என்று பரம்பரை நகை வடிவமைப்பாளர்கள் என்னிடம் கூறினார்கள். அதை டைரக்டர் பன்சாலியிடம் சொன்னபோது, ஆபரணங்களின் அலங்காரத்தில் சமரசம் செய்துகொள்ளமுடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். தீபிகா அணிந் திருந்த நகைகள் அனைத்தும் 13-ம் நூற்றாண்டு பாணியை கொண்டவை. அவை அனைத்தும் பாரம்பரியமிக்க பழமையான கலை வேலைப்பாடுகளை கொண்டவை. இவைகளை உருவாக்க பழங்கால சரித்திர புத்தகங்களில் இருந்து மேற்கோள் எடுத்தோம். கோவில் சிற்பங்கள், சித்திரங்கள், நினைவு சின்னங்கள், பழங்கால மியூசியம் என்று நாங்கள் போகாத இடமில்லை. ஒவ்வொரு நகையும் நவீன கலப்பில்லாத முற்றிலும் பழமையான கலாசார பின்னணியை கொண்டவை’’ என்கிறார்.

தீபிகா படுகோனே அணிந்திருந்த ஒவ்வொரு ஆபரணமும் ஒவ்வொரு விதத்தில் புதுமையானவை. அதன் தனித்துவத்தையும், சிறப்புகளையும் பார்ப்போம்!

போர்லா: இந்த ஆபரணத்தை திருமணமான பெண்கள் அணிவார்கள். இது நெற்றிப் பொட்டில் நிற்கும். மேற்புறமும், பக்கவாட்டில் இருபுறமும் சங்கிலியால் இணைக்கப்பட்டிருக்கும். இதில் மணிகள், சிறிய கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

ஷீஷ்-ரகடி: இது போர்லாவை விட சற்று பெரியது. நெற்றிப் பொட்டில், நேர் வகிட்டில் வந்து நிற்கும். இதில் பளிச்சிடும் பெரிய ரத்தின கல் ஒன்று பதிக்கப்பட்டிருக்கும். பக்கவாட்டில் இரண்டு தங்கச் சங்கிலிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

ஹத் பூல்: இவை பலவித வேலைப்பாடுகளுடன் கூடிய வளையங்கள். ராஜஸ்தானியப் பெண்கள் விரும்பி அணியக்கூடியது.

கோக்ரூ: இது முத்துக்களாலான வளையல்.

நத்: இவை பல ரகங்களை கொண்ட மூக்குத்திகள். கிட்டத்தட்ட வளையல் அளவிற்கும் அதைவிட சிறிய அளவிலும் உள்ளவை. இது தீபிகா படுகோனே அரசியாக தோன்றியபோது அவருக்கு கூடுதல் அழகு சேர்த்தது.

சோகர் : இது ரஜபுத்ர அரசிகள் அணியக் கூடிய கழுத்து ஆபரணம். மிகுந்த வேலைப்பாடு களைக் கொண்டது. முத்துக்கள், வைடூரியங்கள் பதிக்கப்பட்டிருக்கும். கழுத்தை அசைக்கும்போது ஒருவித இனிய ஒலியை எழுப்பும்.

ஜும்கா: இந்தக் காதணி அழகிய வேலைப்பாடு கொண்டது. எனாமல் கோட்டிங் கொடுக்கப்பட்டது. முழு காதையும் மறைக்கும் அளவிற்கு இந்த காதணிகள் அமைந்திருக்கும்.

ஆட்: இந்த ஆபரணம் அட்டிகை போன்றது. கழுத்தை ஒட்டி இருக்கும் இந்த ஆபரணம் ராஜஸ்தானின் பாரம்பரிய அணிகலன். தீபிகா காட்சிக்கு காட்சி வெவ்வேறு விதமான ‘ஆட்’அணிந்திருப்பார்.

அங்கட்டி: இது அழகான ராஜ மோதிரம். ராணியின் அந்தப்புர ஜன்னல்களின் டிசைனில் இது வடிவமைக்கப்பட்டது. நடுவில் ஒரு ரத்தினக்கல் பதிக்கப்பட்டிருக்கும். முத்துக்கள், பச்சை கற்களையும் கொண்டிருக்கும்.

இதை தவிர தீபிகா உச்சி முதல் பாதம் வரை அற்புதமாக மேக்கப் செய்யப்பட்டிருந்தார். கண்கள், உதடுகள், புருவம் அனைத்துமே கலை அலங்காரத்தில் மிளிர்ந்து நின்றன. தேசிய விருது பெற்ற ஒப்பனை கலைஞர் ப்ரீத்தி சிங் மேக்கப் பணிகளை செய்திருந்தார். ராணி பத்மாவதியின் பழைய ஓவியங்களை பார்த்து, அந்த சாயலில் தீபிகாவுக்கு மேக்கப் போட்டுள்ளார், ப்ரீத்தி சிங்.

Next Story