சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்!: குருவியார் + "||" + Cinema Question - Answer : Kuruviyar

சினிமா கேள்வி-பதில்!: குருவியார்

சினிமா கேள்வி-பதில்!: குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? (என்.விஜய ஸ்டாலின், திருவாரூர்)

அதற்காகத்தான் அவருடைய மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது என்கிறார்கள், சில ரசிகர்கள்!

***

குருவியாரே, சுந்தர் சி.டைரக்‌ஷனில் வெளிவந்துள்ள ‘கலகலப்பு–2’ படத்தில் நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். இரண்டு பேரில் யார் அழகு? யார் (நடிப்பில்) திறமைசாலி? (கே.நடராஜன், திருவண்ணாமலை)


அழகுக்கு கேத்தரின் தெரசா; நடிப்புக்கு நிக்கி கல்ராணி!

***

குருவியாரே, நயன்தாரா இப்போதெல்லாம் கவர்ச்சியாக நடிக்க மறுக்கிறாராமே? (எம்.சூரியபிரகாஷ், சென்னை–1)

காதல் தனது வேலையை காட்டும்போது, இப்படியெல்லாம் முடிவெடுக்க தூண்டுமாம்! அதற்கு நயன்தாராவும் விதிவிலக்கு அல்ல!

***

குருவியாரே, கமல்ஹாசன் நடித்த ‘விஸ்வரூபம்-2,’ சபாஷ் நாயுடு ஆகிய படங்களின் வெளியீடு தேதியை அவர் அறிவிப்பாரா? (எச்.பகதூர், பெரம்பூர்)

விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

***

ஆர்.சுந்தர்ராஜன் டைரக்டு செய்து 1984-ல் வெளிவந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ படம் யாருக்கு திருப்பு முனையாக அமைந்திருந்தது? (ஏ.ஆர். ஜெயராணி, நாகர்கோவில்)

அந்த காலகட்டத்தில் அதிரடி கதாநாயகனாக சண்டை படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜயகாந்துக்கு, ‘வைதேகி காத்திருந்தாள்’ படம் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. அதில் அவர் காதலில் தோல்வி அடைந்தவராக நடித்து இருந்தார். அவர் நடித்த “ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு காற்றாடி போலானதே...” என்ற பாடல் காட்சி இன்று வரை மறக்க முடியாததாக அமைந்து விட்டது!

***

குருவியாரே, திரிஷா ‘மேக்கப்’ இல்லாமல் படத்தில் நடிப்பாரா? (கே.விஜயகுமார், டி.கல்லுப்பட்டி)

திரிஷா நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ‘மோகினி’ படம், உங்கள் ஆசையை நிறைவேற்றும். அந்த படத்தில், அவர் மோகினிப்பேயாக வருகிறார். இதற்காக அவர் சில காட்சிகளில், ஒப்பனை இல்லாமல் நடித்து இருக்கிறார். கொடூர மான பேய் வேடத்துக்காக முகத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்து இருக்கிறார்!

***

குருவியாரே, அஜித்குமாரும், நயன்தாராவும் இதுவரை எத்தனை படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்? (சோ.ஞானதுரை, திருக்கோவிலூர்)

பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய மூன்று படங் களில் ஜோடியாக நடித்த அஜித்-நயன்தாரா ஜோடி, 4-வது முறையாக, ‘விசுவாசம்’ படத்தில் இணைந்து இருக்கிறார்கள்!

***

விளம்பர படங்களில் நடிக்க பெரிய நடிகர்-நடிகைகள் துடிப்பது ஏன்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

குறுகிய கால உழைப்புக்கு பெரிய அளவில் பணம் கிடைக்கிறதே... அதற்காகத்தான்...!

***

குருவியாரே, ஜெய்சங்கர் நடித்த டாக்சி டிரைவர், செல்வ மகள், தெய்வீக உறவு ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றி படங்களா? சராசரியாக வசூல் செய்த படங்களா? (ராஜபாண்டியன், புதுக்கோட்டை)

அந்த படங்கள் எல்லாமே முதலுக்கு மோசமில்லாமல் வசூல் செய்த பட்டியலில் உள்ளன!

***

‘சவரக்கத்தி’ பூர்ணாவுக்கு சொந்த ஊர் எது, அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா, இல்லையா? (கே.ரங்கராஜன், சேலம்)

பூர்ணா, கேரளாவை சேர்ந்தவர். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை!

***

குருவியாரே, கீர்த்தி சுரேசுக்கு, ‘மகாநதி’ படம் திருப்பு முனையாக அமையுமா? (சு.ராதா, மேட்டுப்பாளையம்)

திருப்பு முனையாக அமையும் என்ற நம்பிக்கையில்தான் கீர்த்தி சுரேஷ் அந்த படத்தில் நடித்து வருகிறார்!

***

சமீபகால படங்களில் வில்லனாக நடித்து வரும் வேல ராமமூர்த்தி பற்றி...? (சா.மணிமுத்து, கடலூர்)

வேல ராமமூர்த்தி, ஒரு எழுத்தாளர். பல நாவல்களை எழுதியிருக்கிறார். 5 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவமும் உண்டு. பிரகாஷ்ராஜுக்கு அடுத்தபடியாக ஒரு கம்பீரமான வில்லனாக கொம்பன், பாயும்புலி, ரஜினிமுருகன், சேதுபதி, வனமகன், அறம் உள்பட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்!

***

குருவியாரே, பழைய கவர்ச்சி நடிகைகள் விஜயலலிதா, ஜெயமாலினி, டிஸ்கோ சாந்தி, பபிதா இவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? படங்களில் நடிப்பது இல்லையா? (வி.சுப்பிரமணியம், பி.கொமாரபாளையம்)

பழைய கவர்ச்சி நடிகைகள் எல்லோருமே ஓய்வு பெற்று விட்டார்கள். பெரும்பாலும் அவர்கள் வெளியே வருவதில்லை. வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு பழைய நினைவுகளை மலர விட்டு, பொழுதை போக்கி வருகிறார்கள்!

***

நடிகர் விக்ராந்த் துணை கதாபாத்திரங்களிலேயே நடிக்கிறாரே... ஏன் தனி கதாநாயகனாக நடிக்கவில்லை? (கு.ராமசாமி, குருவிகுளம்)

தனி கதாநாயகனாக நடிக்க மாட்டேன் என்று விக்ராந்த் சொல்லவில்லை. நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்யும் திறனும், நடிப்பு திறமையும் உள்ள விக்ராந்துக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது!

***

குருவியாரே, ஆதரவற்றோர் மற்றும் முதியோர்களை ஹன்சிகா தத்து எடுப்பது போல், கதாநாயகர்களில் யாராவது தத்து எடுக்கிறார்களா? (இரா.வசந்த் கிருஷ்ணமூர்த்தி, ஒகேனக்கல்)

ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பது போல், ராகவா லாரன்சும் ஆதரவற்றோர் மற்றும் ஊனமுற்றவர்களுக்காக சென்னையில் ஒரு இல்லம் நடத்தி வருகிறார்!

***

‘பத்மவிபூஷண்’ விருது பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை எத்தனை படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்? (ஆர்.வி.சந்தோஷ், ராசிபுரம்)

இளையராஜா, 1,000 படங்களை தாண்டி விட்டார்!