வித்தியாசமான வேடங்களில் அனுஷ்கா, சமந்தா


வித்தியாசமான வேடங்களில் அனுஷ்கா, சமந்தா
x
தினத்தந்தி 18 Feb 2018 9:00 PM GMT (Updated: 18 Feb 2018 6:26 PM GMT)

இதுவரை காதல் படங்களில் நடித்துள்ள சமந்தா ‘ரங்கஸ்தலம்’ படத்தில் 1980-களில் வாழ்ந்த இளம் கிராமத்து பெண்ணாக வருகிறார்.

‘அகிலாண்ட பிரமாண்ட நாயகி’ படத்தில் அனுஷ்காவும் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் சமந்தாவும் வித்தியாசமான கதாபாதத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை காதல் படங்களில் நடித்துள்ள சமந்தா ‘ரங்கஸ்தலம்’ படத்தில் 1980-களில் வாழ்ந்த இளம் கிராமத்து பெண்ணாக வருகிறார்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. கிராமத்து பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டு பாவாடை தாவணியில் நடித்துள்ளார் சமந்தா. ஓடையில் தண்ணீர் எடுக்க குடத்துடன் செல்வது, தலையில் விறகு சுமந்து செல்வது, மாட்டை பிடித்து கட்டுவது, சைக்கிள் ஓட்டுவது, துணி துவைப்பது என்று அசல் கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்துள்ள அவரது புகைப்படங்கள் இணையதளங்களில் பரவி வருகிறது. இதில் கதாநாயகனாக ராம்சரண் நடித்துள்ளார். இந்த படம் எனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்று சமந்தா கூறினார். விருதுகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

அனுஷ்கா நடிப்பில் தெலுங்கில் தயாரான ஓம் நமோ வெங்கடேசா படம் தமிழில் அகிலாண்ட பரமேஸ்வரி என்ற பெயரில் வெளியாகிறது. திகில் மற்றும் அதிரடி கதைகளில் நடித்து வந்த அனுஷ்காவுக்கு இது முதல் பக்தி படம். ஏற்கனவே பாகுபலி, ருத்ரமாதேவி படங்களில் ராணியாக வந்தார். இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி குண்டு பெண்ணாக நடித்து இருந்தார்.

அகிலாண்ட பரமேஸ்வரியில் நாகார்ஜுனா ஏழுமலையான் பக்தரான ஆதிராம்பாபா கதாபாத்திரத்திலும் அனுஷ்கா கடவுளின் தீவிர பக்தையாகவும் நடித்துள்ளனர். ஐதராபாத்தில் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலை அரங்காக அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்தினர். அனுஷ்கா கூறும்போது, “பக்தி படத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் எல்லோரும் செருப்பு அணியாமலேயே நடித்தனர். படத்தில் நடித்த நடிகர் நடிகைகளும் தொழில் நுட்ப கலைஞர்களும் அவரவர் பெயர்களுடன் கோவிந்தா என்ற பெயரை சேர்த்தே அழைத்தார்கள்” என்றார்.

Next Story