சினிமா செய்திகள்

வருடத்துக்கு 100 பேர் வருகிறார்கள் தமிழ் படங்களில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள நடிகைகள் + "||" + Malayalam actresses who dominate Tamil films are coming for 100 annually

வருடத்துக்கு 100 பேர் வருகிறார்கள் தமிழ் படங்களில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள நடிகைகள்

வருடத்துக்கு 100 பேர் வருகிறார்கள் தமிழ் படங்களில் ஆதிக்கம் செலுத்தும் மலையாள நடிகைகள்
மலையாள நடிகைகள் பலர் புதிதாக வந்து தமிழ் பட உலகில் கலக்கி வருகிறார்கள்.
தமிழ் பட உலகில் பத்மினி காலத்தில் இருந்தே மலையாள நடிகைகள் ஆதிக்கம் இருக்கிறது. அவரது சகோதரிகள் லலிதா, ராகினி, அதன்பிறகு கே.ஆர்.விஜயா, ஷீலா என்று பலர் வந்தார்கள். அவர்களுக்கு பிறகு 1970, 80-களில் அம்பிகா, ராதா, நதியா ஆகியோர் கொடி கட்டி பறந்தனர். இவர்கள் கால கட்டத்தில் திரையுலகம் வளர்ச்சியில் இருந்தது.


படங்கள் நன்றாக ஓடி தயாரிப்பாளர்கள் அதிக லாபம் பார்த்தார்கள். முன்னணி கதாநாயகர்கள் பலர் அப்போதுதான் அறிமுகமானார்கள். அதன்பிறகு மலையாளத்தில் இருந்து வரும் நடிகைகள் எண்ணிக்கை அதிகமானது. நயன்தாரா, அசின், மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், கோபிகா, இனியா, பூர்ணா, பாவனா, அமலாபால், லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன், மீராநந்தன் என்று அந்த பட்டியல் நீண்டது.

இவர்களில் நயன்தாரா மட்டும் நம்பர்-1 இடத்தில் தொடர்ந்து இருக்கிறார். இவர் 2005-ல் ஐயாவில் அறிமுகமாகி சந்திரமுகியில் ரஜினிகாந்த் ஜோடியானார். அவர் நடித்த படங்கள் அனைத்துமே வசூல் குவித்தன. தெலுங்கு பட உலகிலும் கலக்கி வருகிறார். நயன்தாரா கேட்ட சம்பளத்தை கொடுத்து கால்ஷீட் பெற தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கின்றனர்.

இதனால் சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி விட்டார் என்கின்றனர். கதாநாயகன் இல்லாமல் கலெக்டர் வேடத்தில் நடித்த அறம் படமும் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக வசூல் பார்த்துள்ளது. இப்போது 5 படங்களுக்கு மேல் கைவசம் வைத்து ‘பிஸி’யான நடிகையாக இருக்கிறார்.

அமலாபாலுக்கும் அதிக படங்கள் உள்ளன. மஞ்சிமா மோகன், ஷிவதா, அருந்ததி நாயர், மீனாட்சி, இவானா, சுனு லட்சுமி, சாத்னா டைட்டஸ், அனுபமா பரமேஸ்வரன், பிரியங்கா நாயர், பார்வதி நாயர், அனுஷா நாயர், பார்வதி மேனன், ரீமா கல்லிங்கல், மிருதுளா, மடோனா செபாஸ்டின், மாளவிகா மேனன் என்று மேலும் பலர் புதிதாக வந்து தமிழ் பட உலகில் கலக்கி வருகிறார்கள்.

ஒரு அடார் லவ் படம் பாடலில் கண் சிமிட்டி இணையதளத்தை தெறிக்க விட்டுள்ள பிரியா வாரியரையும் தமிழுக்கு கொண்டுவர பேசி வருகிறார்கள். தமிழ் திரையுலகில் வருடத்துக்கு 150 புதுமுக நடிகைகள் அறிமுகமாகிறார்கள் என்றும், அவர்களில் 100 பேர் மலையாள நடிகைகள் என்றும் டைரக்டர் ஒருவர் கூறினார். இதில் சிலர் மட்டுமே நிலைத்து நிற்கின்றனர். மற்றவர்கள் ஒரு படத்திலேயே காணாமல் போய் விட்டனர்.

ஏஜெண்டுகள் கமிஷன் ஆசையில் மலையாள நடிகைகள் பலரை தரமில்லாத சிறு பட்ஜெட் படங்களில் அறிமுகப்படுத்துகின்றனர் என்றும், அந்த படங்கள் வெளிவராமல் முடங்கி அவர்கள் எதிர்காலத்தையே பாழாக்குகின்றன என்றும் சொல்லி முன்னணி மலையாள நடிகை ஒருவர் வருத்தப்பட்டார். வருடம்தோறும் மலையாளத்தில் இருந்து வரும் 100 பேரில் 60 நடிகைகளின் படங்கள் திரைக்கு வருவது இல்லை என்றும் அவர் கூறினார்.