சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகிய 4 பேரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும்? (பி.விக்ரம் குமார், சென்னை–4)

4 பேர்களின் ரசிகர்களுக்கும் இடையே கைகலப்பும், மோதலும் நடக்கும்!


***

நடிகை கனகா ஏன் நடிப்பதில்லை? சினிமா பட விழாக்களில் கூட அவர் கலந்துகொள்வதில்லையே... அவருக்கு எப்படி பொழுது போகிறது? (எஸ்.செந்தில்குமார், ஆத்தூர்)

கனகாவுக்கு நடிப்பு மீது ஆர்வம் இல்லை. அவர் சென்னை மந்தவெளியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். சமையல் செய்யும் ஒரு வயதான பெண்ணை தவிர, வேறு யாரையும் அவர் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. பூட்டிய வீட்டுக்குள் பொழுதை கழிப்பது, அவருக்கு பழகிப்போய் விட்டது!

***

குருவியாரே, ‘இந்தியன்–2’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பாரா? (ஆர்.ஞானசேகரன், வேலூர்)

நிச்சயமாக நடிப்பார். விஸ்வரூபம்–2, சபாஷ் நாயுடு ஆகிய படங்களை தொடர்ந்து, ‘இந்தியன்–2’ படத்தில் அவர் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்!

***

நயன்தாராவுக்கு எது அழகு? அவருடைய ஒல்லியான உடற்கட்டா அல்லது...? (ஆர்.தினேஷ்குமார், அருப்புக்கோட்டை)

நயன்தாராவுக்கு அவருடைய முகமே அழகு! அந்த முக வசீகரமே அவரை ‘நம்பர்–1’ ஆக வைத்து இருக்கிறது!

***

குருவியாரே, பிரபுவும், விக்ரமும் சேர்ந்து நடிப்பார்களா? (வே.கவுதம், முகப்பேர்)

இருவருக்கும் பொருத்தமான கதையும், கதாபாத்திரங்களும் அமைந்தால், நிச்சயமாக சேர்ந்து நடிப்பார்கள்!

***

ஓவியாவின் ‘மார்க்கெட்’ இப்போது எப்படி இருக்கிறது? ஏறுமுகமா, இறங்கு முகமா? (கே.மகாராஜன், செட்டிக்குளம்)

அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப்பின், ஓவியாவின் மார்க்கெட் ஏறுமுகமாகவே இருக்கிறது!

***

குருவியாரே, தயாரிப்பாளர்–நடிகர்–டைரக்டர் என முப்பரிமாணங்களை கொண்ட ராஜ்கிரண் ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (எஸ்.குமரன், வேலப்பன்சாவடி)

சில கதாநாயகர்களை விட, ராஜ்கிரண் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்! படத்தின் கதையையும், தன் கதாபாத்திரத்தையும் பொருத்து மூன்று விரல்களை அல்லது நான்கு விரல்களை காட்டி, அவர் சம்பளம் கேட்கிறாராம்!

***

ஸ்ரேயாவுக்கு திருமணமாமே...மாப்பிள்ளை யார்? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

ஸ்ரேயாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து அவருக்கு பொருத்தமான மணமகனை தேடி வருகிறார்கள். இதுவரை மணமகன் யாரும் அமையவில்லையாம்!

***

குருவியாரே, விஜய் சேதுபதி பேய் படங்களில் நடிப்பாரா? (இ.ஜெயராமன், ஸ்ரீவைகுண்டம்)

விஜய் சேதுபதி ஏற்கனவே பேய் படத்தில் நடித்து விட்டார். நீங்கள், ‘பீட்சா’ படத்தை பார்க்கவில்லையா?

***

வரலாற்றை மையமாக வைத்து தயாராகும் படங்களுக்கு ஏன் கடுமையான எதிர்ப்பு கிளம்புகிறது? (எ.டபிள்யூ.ரபீ அஹமத், சிதம்பரம்)

அப்படி கடுமையான எதிர்ப்பை கிளப்பிவிட்டால்தான் படம் பரபரப்பாக ஓடும்!

***

குருவியாரே, ஜோதிகா நடித்து ஓடிக்கொண்டிருக்கும் ‘நாச்சியார்’ படத்தில், அந்த சர்ச்சைக்குரிய வசனம் இல்லையே? (எம்.மோகன், கோபிச்செட்டிப்பாளையம்)

அந்த வசனம், படத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது!

***

‘மாரி–2’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பவர் யார்? (வி.கார்த்திக், கோவை)

சாய் பல்லவி!

***

குருவியாரே, பாலா எந்த படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார்? அந்த படத்தின் கதாநாயகன்–கதாநாயகி யார்? (ஏ.இளங்கோ, நாமக்கல்)

பாலா டைரக்டராக அறிமுகமான படம், ‘சேது.’ அந்த படத்தில், விக்ரம் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகி, அபிதா!

***

இன்றைய முன்னணி கதாநாயகிகளில் கோபமே வராதவர் யார்? அவருக்கு கோபம் வராததன் காரணம் என்ன? (ஜே.ஸ்டீபன் ஜெபராஜ், ஊட்டி)

எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் அனுஷ்கா! இவருக்கு கோபமே வருவதில்லை. அதற்கு அவர் ஒரு யோகா ஆசிரியை என்பதும் காரணம்!

***

குருவியாரே, ஹன்சிகா இப்போது தமிழ் படங்களில் நடிப்பதில்லையா? முன்பு போல் அவரை திரையில் பார்க்க முடிவதில்லையே...? (பி.அழகேசன், மேல்மருவத்தூர்)

ஹன்சிகா இப்போது, ‘துப்பாக்கி முனை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தவிர, 2 தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வருவதாக தகவல்!

***

‘கண் சிமிட்டல் நடிகை’ பிரியா வாரியர் தமிழ் படத்தில் நடிப்பாரா? (சாய் விக்னேஷ், ராசிபுரம்)

பிரியா வாரியரை தமிழ் படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது!

***

குருவியாரே, இப்போது உள்ள இளம் கதாநாயகர்களில், சொந்த குரலில் பாடுபவர்கள் யார்–யார்? சமீபத்தில் பாடியவர் யார், எந்த படத்துக்காக? (மு.சக்திவேல், திண்டுக்கல்)

தனுஷ், சிம்பு ஆகிய இருவரும் சொந்த குரலில் பாடி வருகிறார்கள். சமீபத்தில் பாடியவர், தனுஷ். ‘மாரி–2’ படத்துக்காக, இளையராஜா இசையில் அவர் ஒரு பாடலை பாடினார்!

***

‘நாச்சியார்’ படத்தை அடுத்து ஜோதிகா நடிக்கும் படம் எது? (பி.எம்.தமிழரசன், மதுரை)

‘நாச்சியார்’ படத்தை அடுத்து ஜோதிகா, மணிரத்னம் டைரக்‌ஷனில் உருவாகி வரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிக்கிறார். இதையடுத்து அவர், ராதா மோகன் டைரக்‌ஷனில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இது, ‘தும் ஹாரி சுலு’ என்ற இந்தி படத்தின் ‘ரீமேக்’ ஆகும்!

***

குருவியாரே, ‘மின்னலே’ படத்தில் இணைந்து பணிபுரிந்த மாதவனும், கவுதம் வாசுதேவ் மேனனும் மீண்டும் இணைந்து பணிபுரிவார்களா? (ஜி.அருள் செல்வன், திருச்சி)

‘மின்னலே’ படம் திரைக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது. இத்தனை ஆண்டு இடைவெளிக்குப்பின் மாதவனும், கவுதம் வாசுதேவ் மேனனும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனும், விஜயகுமாரியும் ஜோடியாக நடித்து இருக்கிறார்களா? (அ.தாஸ், பெங்களூரு)

தமிழ் பட உலகில் தயாரான முதல் சினிமாஸ்கோப் தயாரிப்பான ‘ராஜராஜ சோழன்’ படத்தில், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனும், விஜயகுமாரியும் ஜோடியாக நடித்து இருந்தார்கள்!

***