ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்


ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர் சங்கம்  தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல்
x
தினத்தந்தி 25 Feb 2018 11:00 PM GMT (Updated: 26 Feb 2018 4:43 AM GMT)

ஸ்ரீதேவி மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. #RIPSridevi #Sridevi

பிரபல நடிகை ஸ்ரீதேவி, துபாயில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர், ஸ்ரீதேவி.

தனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய்-தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும், வேதனைகளையும் தாண்டி மன உறுதியாலும், உழைப்பாலும் உட்ச நட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு ஸ்ரீதேவி வழிகாட்டியானார்.

மாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், இந்திய திரைப்பட துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் துக்கம் பகிர்ந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் வி.நாசர், துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, அறங்காவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், நியமன செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஸ்ரீதேவியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இரங்கல் செய்தி விடுத்து இருக்கிறது. அதில் கூறியிருப்பதாவது:-

“புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பல்வேறு மொழிகளில் 300-க்கும் அதிகமான படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர், அவர். சிறந்த தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்தவர். அவரது திடீர் மரணம், இந்திய திரைப்பட துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

அவருடைய பிரிவால் துக்கத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உறவினர்களுடன் தயாரிப்பாளர்கள் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.” இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Next Story