ஸ்ரீதேவியின் மறைவு, தாங்க முடியாத இழப்பு பாரதிராஜா இரங்கல்


ஸ்ரீதேவியின் மறைவு, தாங்க முடியாத இழப்பு பாரதிராஜா இரங்கல்
x
தினத்தந்தி 25 Feb 2018 11:15 PM GMT (Updated: 26 Feb 2018 4:42 AM GMT)

இந்திய திரையுலகிற்கே மிகப்பெரிய இழப்பு.இளையராஜா, கவிஞர் வைரமுத்து,நடிகர் சிவகுமார், பாரதிராஜா இரங்கல். #RIPSridevi #Sridevi

ஸ்ரீதேவியின் மறைவு குறித்து டைரக்டர் பாரதிராஜா தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

“சில இழப்புகள் நம்மால் தாங்கவே முடியாது. ஸ்ரீதேவியின் இழப்பு இந்திய மக்களுக்கே மிகப்பெரிய இழப்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை மிக சிறந்த நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவியின் மறைவு, இது மறைகின்ற வயதா? என்றுதான் கேட்க தோன்றுகிறது. ஸ்ரீதேவி நம்மிடம் இல்லையே என்பது வருத்தமாக இருக்கிறது.

மிக நீண்ட தேடுதலுக்கு பிறகு எனது கனவு கதாபாத்திரத்திற்கு (மயில்) கிடைத்த நடிகை, ஸ்ரீதேவி. என்னுடைய மயில் கதாபாத்திரத்திற்கு ஒப்பனை கிடையாது, ஆடம்பரம் கிடையாது. மிகவும் எளிமையான பெண்ணாக இருக்க வேண்டும் என்று கூறினேன். “நீங்கள் கூறும் கதாப்பாத்திரத்திற்கு ஒப்பனை இல்லாமல் நடிக்கிறேன்” என்ற அவர் படத்தின் படப்பிடிப்பு முடிந்த தருவாயில் தான் நடித்த இடங்களைப் பார்த்து அழுது, “இந்த இடத்தை விட்டுப் போக இஷ்டம் இல்ல சார்” என்றார். எனது இரண்டாவது படம், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்திற்கு கதையே கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார்.

16 வயதினிலே படத்திற்கு நாயகி யார்? என்று பேச்சு எழும்போது, நான் ஸ்ரீதேவியை நடிக்க வைக்கலாம் என்றேன். ஸ்ரீதேவி, “வேண்டாம் சார்” என்றார். “நான் இருக்கிறேன்... தைரியமா நடி” என்று கூறி நடிக்க வைத்தேன். ஸ்ரீதேவியை இந்திய திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுக்கையில் ஸ்ரீதேவியிடம், “உங்கள் நடிப்பு திறன் இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்க யார் காரணமாக இருந்தார்கள்?” என்ற கேள்விக்கு, “பாரதிராஜாவிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்” என்றார். அதை எனக்கு அவர் அளித்த மிகப்பெரிய மரியாதையாக நினைக்கிறேன்.

நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையாக வாழ்ந்தவர், ஸ்ரீதேவி. “உலகத்திற்குத்தான் நான் நட்சத்திரம், ஆனால் எனக்கு நான் எளிமையானவள்” என்றார். அவரை வைத்து படம் இயக்கும் திட்டம் வைத்திருந்தேன். அதற்குள் இப்படி ஒரு செய்தி நம்மை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது.

எந்த கல்லூரியிலும் படிக்காத அறிவுப்பூர்வமான கலைச்செல்வி, அனைத்து மொழிகளையும் சரளமாக பேசும் கலையுலக ராணியான ஸ்ரீதேவியின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்திய திரையுலகிற்கே மிகப்பெரிய இழப்பு. அவர் இடத்தைப் பூர்த்தி செய்ய பல காலம் ஆகும்.

எனது மயிலின் (ஸ்ரீதேவி) மறைவை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. ஸ்ரீதேவியின் வாரிசுகள் திரையுலகத்திற்கு அறிமுகமாகின்றனர். ஸ்ரீதேவியின் பெயரை அவர்கள் காப்பாற்றுவார்கள். போனிகபூருக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.” இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-
குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய கதாநாயகன்-கதாநாயகியாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி. ‘ஆதிபராசக்தி’ படத்தில் ஜெயலலிதா மடியில் முருகன் வேடமிட்ட ஸ்ரீதேவி அமர்ந்திருந்தது, எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. ‘16 வயதினிலே’ மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. அதன் பிறகு மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிகப்பு என்று பல வெற்றி படங்களில் நடித்தார்.

நானும் ஸ்ரீதேவியும் கவிக்குயில், மச்சான பார்த்தீங்களா, சாய்தாடம்மா சாய்ந்தாடு ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்தோம். இந்தி பட உலகில் உச்சம் தொட்ட நடிகை அவர். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்க்கை முடியும் என்று யாரும் கற்பனைக்கூட செய்திருக்கமாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி வானத்திற்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது. ஒரு நடிகை என்பவர் பெண்ணினத்து உணர்ச்சிகளை பிம்பப்படுத்துகிறார். பல கோடி பெண்களின் உணர்ச்சிகளைத் தன் ஒற்றை முகத்தில் ஒளிபரப்பியவர் ஸ்ரீதேவி. கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்துவரும் அழகு முகம் அவர் முகம். ‘மூன்றாம் பிறை’ படத்தில் நான் எழுதிய நரிக்கதை பாடலை பாட வந்தபோது அவரை முதல் முறை பார்த்தேன்.

நான் எழுதி அவர் கடைசியாக பாடி நடித்த புலி படத்தின் பாட்டு வெளியீட்டு விழாவில் கடைசியாக பார்த்தேன். தெற்கில் உதித்து வடக்கை வெற்றிகொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே விழுந்துவிட்டது. அரை நூற்றாண்டு காலம் திரையில் இயங்கினாலும் ஒரு நூற்றாண்டின் கலை பணியை ஆற்றிய ஸ்ரீதேவியை இந்திய கலையுலகம் மறக்காது. ஸ்ரீதேவியின் பிம்பம் மறைவதில்லை. திரை கலைஞர்களுக்கு மரணமில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், கலை அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா:-
 ஸ்ரீதேவியின் மறைவு சினிமா உலகுக்கு பேரிழப்பு. குழந்தை நட்சத்திரமாக நடித்த காலத்தில் இருந்தே ஸ்ரீதேவியை எனக்கு தெரியும். அவர் நடித்த பல படங்களுக்கு நான் இசையமைத்து இருக்கிறேன். பாலசந்தர், பாலுமகேந்திரா உள்ளிட்ட பல இயக்குனர்கள் ஸ்ரீதேவி திறமையை வெளிகொண்டு வந்தார்கள். ஸ்ரீதேவிக்கு திறமை இருந்தது. அதனால் அது சாத்தியமானது. ஸ்ரீதேவி மறைவு சினிமா துறைக்கு இழப்பு ஆகும் இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.

Next Story