நடிகை ஜமுனா புகாருக்கு கீர்த்தி சுரேஷ் பதில்


நடிகை ஜமுனா புகாருக்கு  கீர்த்தி சுரேஷ் பதில்
x
தினத்தந்தி 26 Feb 2018 11:15 PM GMT (Updated: 26 Feb 2018 7:18 PM GMT)

சாவித்திரியாக நடிக்க எனக்கு தகுதி உள்ளது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.

றைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் சினிமா படமாக தயாராகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நடிகை பானுமதியாக அனுஷ்காவும், ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானும் நடிக்கின்றனர்.

சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்த நிலையில் சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு தகுதி இல்லை என்று பழம்பெரும் நடிகை ஜமுனா கண்டித்துள்ளார். “சாவித்திரி கதாபாத்திரத்தில் எந்த நடிகையாலும் நடிக்க முடியாது. தெலுங்கு மொழி தெரியாத கீர்த்தி சுரேஷால் எப்படி நடிக்க முடியும்” என்று அவர் கேட்டு இருந்தார்.

இதற்கு கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

“சாவித்திரியாக நடிக்கும் முன்பே அவரது வாழ்க்கை வரலாறு புத்தகங்களை தேடிப்பிடித்து படித்தேன். சாவித்திரியின் மகள் சாமுண்டீஸ்வரியையும் சந்தித்து பேசினேன். சாவித்திரியின் நடை உடை பாவனைகள் எப்படி இருக்கும் என்று அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொன்னார். சாவித்திரியைப்போல் நடிக்க நிறைய பயிற்சிகளும் எடுத்தேன். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி எனக்கு 4 பக்க கடிதம் எழுதி அனுப்பினார். அந்த கடிதம் மூலம் அவரைப்பற்றி மேலும் பல தகவல்கள் எனக்கு தெரியவந்தன. சாவித்திரிக்கும் எனக்கும் ஒரே பழக்க வழக்கம் இருப்பதை தெரிந்துகொண்டேன். சாவித்திரிக்கு நீச்சல் பிடித்து இருந்தது. எனக்கும் அதில் விருப்பம் உண்டு. சாவித்திரி கிரிக்கெட் விளையாடுவார். நானும் பள்ளியில் அதை விளையாடி இருக்கிறேன். சாவித்திரிக்கு கார் ஓட்டுவதில் ஆர்வம் உண்டு. எனக்கும் கார் ஓட்ட பிடிக்கும். எனவே சாவித்திரியாக நடிக்க எனக்கு தகுதி உள்ளது என்று கருதுகிறேன்.”

இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

Next Story