பட அதிபர் புகார்: நடிகர் சிம்புவிடம் விசாரணை


பட அதிபர் புகார்: நடிகர் சிம்புவிடம் விசாரணை
x
தினத்தந்தி 26 Feb 2018 11:00 PM GMT (Updated: 26 Feb 2018 7:25 PM GMT)

பட அதிபர் புகாரை அடுத்து நடிகர் சிம்புவிடம் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

டிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இவர் தயாரித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு நடித்து இருந்தார். இந்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. படப்பிடிப்புக்கு சிம்பு ஒழுங்காக வரவில்லை என்றும், அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்து அதிலும் நடிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

இதனால் தனக்கு ரூ.20 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினார். இந்த புகார் மனு நடிகர் சங்கத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நடிகர் சங்கம் சிம்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. சிம்புவும் பதில் அளித்துவிட்டார். தன்மீது சுமத்தியிருப்பது பொய்யான குற்றச்சாட்டு என்றும், படம் வெளியாகும் முன்பு எந்த புகாரையும் சொல்லாமல் திரைக்கு வந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டு உள்ளது என்றும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த விளக்கத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடிகர் சங்கம் அனுப்பி உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையில் தயாரிப்பாளர்கள் சங்கம் இறங்கி இருக்கிறது. சிம்பு விளக்கத்தை ஏற்பதா? அல்லது நடவடிக்கை எடுப்பதா? என்று ஆலோசனை நடத்தி வருகிறது. சிம்புவிடம் நேரிலும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.

மணிரத்னம் இயக்கும் படத்தில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இடையூறு செய்வதாகவும், அந்த படத்தை ஏன் நிறுத்த நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் சிம்பு கூறியுள்ளார். இந்த பிரச்சினையில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story