இன்று இரவுக்குள், ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்படும் -தூதரக அதிகாரிகள்


இன்று இரவுக்குள், ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்படும் -தூதரக அதிகாரிகள்
x
தினத்தந்தி 27 Feb 2018 9:51 AM GMT (Updated: 27 Feb 2018 9:51 AM GMT)

இன்று இரவுக்குள், ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்படும் என தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். #Sridevi #RIPsridevi

துபாய், 

கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் நடந்த கணவர் போனிகபூரின் மைத்துனர் மோகித் மார்வா திருமணத்தில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். திருமண நிகழ்ச்சி முடிந்ததும் இரவு தான் தங்கி இருந்த எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலுக்கு சென்று தங்கினார். அவருடன் கணவர் போனிகபூர், மகள் குஷி ஆகியோரும் தங்கி இருந்தனர்.

அப்போது குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் கணவர் போனிகபூர் கதவை தட்டினார். ஆனால் கதவை திறக்காததால்  பதட்டம் அடைந்த போனிகபூர் ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் கதவை உடைத்து திறந்தார்.

உள்ளே ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் சுயநினைவின்றி மூழ்கி கிடந்தார். இதைப் பார்த்து கதறித் துடித்த அவர் போலீசுக்கும்  ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து ஸ்ரீதேவியை மீட்டு  ஆஸ்பத்திரிக்கு கொண்டு  சென்றனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

துபாய் நாட்டின் கடுமையான சட்ட விதிகளின்படி, ஆஸ்பத்திரிக்கு வெளியே மரணம் அடைந்தால் தீவிர விசாரணைக்குப் பிறகே உடல் உறவினர்களிடம் 
ஒப்படைக்கப்படும்.  இதனால் ஸ்ரீதேவியின் உடல் உடனடியாக துபாய் போலீஸ் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள பிரேத கிடங்கில் வைக்கப்பட்டது.

இறந்த 24 மணி நேரத்துக்குப்பின் பிரேத பரிசோதனை நடந்தது. அதன் பிறகு உடல் பாகங்கள் ஆய்வுக்கூட பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறந்ததாக அறிக்கை தரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி இயற்கையாகவே நீரில் மூழ்கி இறந்தாரா? எப்படி குளியல் தொட்டியில் மூழ்கினார்? அதில் மர்மம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

ஸ்ரீதேவி தங்கி இருந்த ஓட்டலுக்கு போலீசார் சென்று குளியல் அறையை பார்வையிட்டனர். உடைக்கப்பட்ட கதவையும் ஆய்வு செய்தனர். அதன் பிறகு போனிகபூர் மற்றும் ஓட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். போனிகபூரிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. அவரது வாக்குமூலத்தையும் போலீசார் பதிவு செய்து கொண்டனர். பின்னர் போனி கபூரின் மைத்துனரும், மண மகனுமான மோகித் மார்வா குடும்பத்தினரும் விசாரிக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு 
செல்லப்பட்ட உடல் துபாய் சட்டப்படி 24 மணி நேரம் கழித்து மாலை 6 மணிக்குத்தான் பிரேத பரிசோதனை முடிந்தது. 

எனவே மறுநாள் (திங்கட் கிழமை) ஸ்ரீதேவி உடல் மும்பை கொண்டு வரப்படும் என்று போனிகபூரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். ஆனால் அதன் பிறகும் விசாரணை நீடித்தது. துபாய் போலீசார் தாங்கள் நடத்திய விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை நாட்டின் உயர் மட்ட விசாரணை அமைப்பான “துபாய் பப்ளிக் பிராசிக்கியூஷன்” எனப்படும் விசாரணைக்குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஸ்ரீதேவி செல்போனையும் கைப்பற்றி அதில் பதிவான எண்களில்  தொடர்பு கொண்டு  விசாரித்தனர்.  ஸ்ரீதேவி மரணத்துக்கு முன் 24 மணி நேரம் வரை அவருடன் யார்-யார் பேசினார்கள் என்ற விவரத்தை சேகரித்து அதில் கிடைத்த தகவலும் விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓட்டல் அறையில் உள்ள சி.சி. டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

இதற்கிடையே போனிகபூர் மகள் குஷியுடன் மும்பை திரும்பி இருந்தார். பொது விசாரணைக்குழு அதிகாரிகள் மீண்டும் போனிகபூரை துபாய்க்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் நீண்ட நேரம்  விளக்கம் அளித்தார். இதையடுத்து நேற்று மாலை  போனிகபூரிடம் ஸ்ரீதேவியின் மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால் உடலை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. 

இதுபற்றி துபாய் போலீஸ் அதிகாரிகள் கூறும் போது சந்தேகத்துக்கு இடமின்றி மரணம் நிரூபிக்கப்பட்டால் தான் உடல் ஒப்படைக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் பிரேத பரிசோதனைசெய்வோம். மறுவிசாரணையும்  நடத்துவோம்” என்று தெரிவித்து இருந்தனர்

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் உடலை எம்பாமிங் செய்வதற்கான அனுமதி கடிதத்தை வழங்கியது துபாய் காவல்துறை. அனுமதி கிடைத்ததையடுத்து இன்று இரவுக்குள், ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்படும் என தூதரக அதிகாரிகள் தகவல தெரிவித்து உள்ளனர்.

ஆட்சேபனை இல்லா சான்றிதழ்  இந்திய துணை தூதரகத்தின் பிரதிநிதிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது.

Next Story