தமிழ் படங்கள் வெளியாவது நிறுத்தம் தெலுங்கு திரையுலகினர் இன்று ஸ்டிரைக்


தமிழ் படங்கள் வெளியாவது நிறுத்தம் தெலுங்கு திரையுலகினர் இன்று ஸ்டிரைக்
x
தினத்தந்தி 1 March 2018 10:45 PM GMT (Updated: 1 March 2018 7:04 PM GMT)

ஆந்திராலும், தெலுங்கானாவிலும் இன்று முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட கியூப், யூஎப்ஓ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக கண்டித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேற்று முதல் புதிய படங்களை வெளியிடுவது இல்லை என்று அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நேற்று படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்றும் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்துகின்றனர். இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டிஜிட்டல் சேவை அமைப்பினருடன் நடந்த சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்றும், இனிமேல் அந்த அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

புதிய குழு அமைத்து திரையரங்கு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும், டிஜிட்டல் சேவை கட்டணத்தை இனிமேல் செலுத்த மாட்டோம் என்றும் தயாரிப்பாளர்கள் கூறி உள்ளனர். போராட்டம் காரணமாக இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த விஷால் நடித்துள்ள இரும்புத்திரை, விக்ரம் பிரபுவின் பக்கா, உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா மற்றும் என்னை நோக்கி பாயும் தோட்டா, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்பட 20–க்கும் மேற்பட்ட படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. 

பவித்ரன் இயக்கி தயாரித்துள்ள ‘தாராவி’ படம் மட்டும் தடையை மீறி இன்று திரைக்கு வருகிறது. இதுகுறித்து பவித்ரன் கூறும்போது, ‘‘கஷ்டப்பட்டு தாராவி படத்தை தயாரித்துள்ளேன். இந்த படம் இன்று வெளியாகவிட்டால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டு தெருவுக்கு வரும் நிலைமை ஏற்படும். இந்த மாதம் இறுதியில் காலா போன்ற பெரிய படங்கள் வருவதால் அப்போதும் திரைக்கு கொண்டுவர முடியாது. தாராவி படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு உதவுவோம் என்ற உத்தரவாதத்தையும் தயாரிப்பாளர்கள் சங்கம் தரவில்லை. எனவே தாராவி படம் இன்று வெளியாகும்’’ என்றார். 

இந்த நிலையில் டிஜிட்டல் சேவை கட்டணத்தை எதிர்த்து ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் இன்று முதல் (2–ந் தேதி) புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

Next Story